Thursday, February 7, 2008

உண்மை தானே


05. சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைப்பது யார்?

முதல்வர் கருணாநிதி விளக்கம்


சென்னை: ""சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக குரல் கொடுப்பவர்கள் தான் அதை கெடுக்க நினைக்கின்றனர்,'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா அன்றாடம் அறிக்கை விடத் தவறுவதில்லை என்ற நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தி.மு.க., ஆட்சியை மாற்ற வேண்டும், மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும், அவர் எப்படியாவது மீண்டும் பதவியில் வந்து அமர வேண்டும் என்பதாக வந்து கொண்டுள்ளது. பதவி ஏற்ற நாளில் இருந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, குற்றம் மற்றும் சொத்து சம்பந்தமான வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் 2006ம் ஆண்டில் ஆயிரத்து 220 பேரும், 2007ம் ஆண்டில் ஆயிரத்து 550 பேரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
இதன் விளைவாக சொத்து சம்பந்தமான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பிற குற்றங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளது. பல ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் இருந்த குளித்தலை மீனாட்சி கொலை வழக்கு, கிரில் மற்றும் பீரோ புல்லிங் கொள்ளை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. போலீசார் குற்றவாளிகள் மீது மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளால் 2006ம் ஆண்டு நடந்த வழக்குகளில் 89 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 81 சதவீத சொத்துக்கள் மீட்கப்பட்டன. அதேபோல, 2007ம் ஆண்டு 87 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 86 சதவீத சொத்துக்கள் மீட்கப் பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் செயல்கள் தமிழகத்தில் நுழையாமல் பார்த்துக் கொள்ள தேவையான தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை காவல் துறையினர், திறமையாகச் செயல்பட்டு தடுத்து வருவதுடன், அகதிகள் போர்வையில் தீவிரவாதிகள் யாரும் தமிழகத்தில் நுழையாமல் கண்காணித்தும் வருகின்றனர். இலங்கை அகதிகள் முகாம்களை அடிக்கடி சோதனை செய்து, தீவிரவாதிகள் எவரும் முகாம்களில் தங்காத வண்ணம் பார்த்து வருகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சியில் தலைவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு இருந்ததாகவும், இப்போது தான் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அ.தி.மு.க., ஆட்சியில் நடந்தது எல்லாம் மக்களுக்கு மறந்தா போய் விட்டது? கவர்னர் சென்னா ரெட்டிக்கு திண்டிவனம் அருகிலும், தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த சேஷனுக்கு விமான நிலையத்திலும், அவர் தங்கியிருந்த விடுதியிலும், சுப்பிரமணியசாமிக்கு ஐகோர்ட்டிலும் எப்படிப்பட்ட பாதுகாப்பு தரப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் எம்.எல்.ஏ.,க்களாக இருந்த துõத்துக்குடி ரமேஷ், மதுராந்தகம் சொக்கலிங்கம், உப்பிலியாபுரம் ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கப் பட்டதை மறந்து விட்டார்களா? கும்மிடிப்பூண்டி தொகுதியிலேயே அவரது கட்சியைச் சேர்ந்த எம். எல்.ஏ., சுதர்சனம் கொல்லப் பட் டது அவர்கள் ஆட்சியில் தானே. இவ்வளவு ஏன், என்னை நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கி கைது செய்ததற்கு என்ன பெயர்? ஐ.ஜி., அலுவலக வாசலிலேயே ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத் தலைவர் பெருமாளைத் தாக்கி அவர் சாவதற்கே காரணமாக இருந்த ஆட்சி எது? அந்த ஊர்வலத்தில் பத்திரிகையாளர்கள் எல்லாம் எந்தளவு தாக் கப்பட்டார்கள். எத்தனை பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன.
பொதுமக்களிடையே இன்று சட்டம்ஒழுங்கு குறித்து எவ்விதமான பயமோ, அச்சுறுத்தலோ இல்லை. ஆனால், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக அன்றாடம் குரல் கொடுப்பவர்கள் தான் அதை கெடுக்க எத்தனையோ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். வெளியே கெடுக்க முடியாத நிலையில் சட்டசபைக்கும் வருகை தந்து அங்கேயும் முயற்சி செய்து பார்த்து, அதிலும் தோல்வியடைந்து தொங்கிய முகத்துடன் திரும்பிச் செல்கிறார்கள். சட்டசபையில் பேசும் நாகரிகம் கற்றிடாமல், குட்டிச் சுவரோரம் நின்று வெட்டிக் கதை கூறுவதே, தாம் கற்றறிந்த விதம் என்கின்றனர். அதனால் தான் குக்கிராமங்களில் கூட பழமொழி சொல்வார்கள்; குறைகுடம் கூத்தாடுமென்று. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார். ""சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக குரல் கொடுப்பவர்கள் தான் அதை கெடுக்க நினைக்கின்றனர்,'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments: