Saturday, February 9, 2008

ஐயையோ ! பக்கத்து போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைன்ட் குடுக்க சொல்லனும் !

05.போலீஸ் நிலையத்தில் துணிகர துப்பாக்கிகள் கொள்ளை: தர்மபுரியில் கும்பல் அட்டகாசம்


தர்மபுரி:போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த மர்ம கும்பல், ஆறு துப்பாக்கிகள் மற்றும் வாக்கி டாக்கியை கொள்ளையடித்துச் சென்றது. நக்சல் அமைப்பினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். இரவு பாதுகாப்புப் பணியில் போலீஸ்காரர் சுப்பிரமணி, ஏட்டுக்கள் ராஜா, ராஜமாணிக்கம் ஆகியோர் இருந்துள்ளனர். முன்பக்க நுழைவாயில் கதவுக்கு பூட்டு போட்டு விட்டு, போலீஸ் நிலையத்தில் உள்ளே அனைவரும் தூங்கி விட்டனர்.
இதை பயன்படுத்தி ஒரு கும்பல், போலீஸ் நிலையத்தில் புகுந்தது. வெளிப்பக்க நுழைவு கிரில்கேட் பூட்டை உடைத்து புகுந்த கும்பல், ஆயுத அறையின் பூட்டையும் உடைத்தது. அங்கிருந்த, 410' மஸ்கட் ரக துப்பாக்கிகள் ஐந்து, எஸ்.பி.பி.எல்., நாட்டு துப்பாக்கி ஒன்று, போலீஸ் எஸ்.ஐ.,யின் வாக்கி டாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது. அதிகாலை 3 மணிக்கு தூங்கியெழுந்த பின்னரே, போலீசாருக்கு சம்பவம் பற்றி தெரிய வந்தது. உடனடியாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் எஸ்.பி., நஜ்முல்ஹோதா, அங்கு வந்து நேரில் விசாரித்தார்.
போலீஸ் டி.ஐ.ஜி., செண்பகராமன், எஸ்.பி.,க்கள் தேன்மொழி, பாஸ்கரன், அசோக்குமார் உட்பட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை ஐ.ஜி., சஞ்சய் அரோரா விசாரணை நடத்தினார்.போலீஸ் துப்பறியும் நாய்கள் ஷீபா, ஜீனோ வரவழைக்கப்பட்டன. போலீஸ் நிலையத்தின் பின்புறம் சிறிது தூரம் சென்ற நாய்கள், அதியமான்கோட்டை ரயில்வே கேட் வழியாகச் சென்று, அந்த பகுதியைச் சேர்ந்த கணேசன் வீட்டிற்குள் புகுந்தன.கணேசனுக்கு வாய் பேச முடியாது. அவரது மனைவி ஜானகிக்கு காது கேட்காது.
பின்னர் மோப்ப நாய்கள், வீட்டின் பின் பகுதியில இருந்த மூங்கில் குடிசைக்குள் புகுந்து, திருப்பதிக்கு சொந்தமான வைக்கோல் போர் அருகே படுத்துக் கொண்டன. அங்கு, போலீசார் தேடிய போது, காலி மதுபாட்டில் கிடைத்தது. வேறு துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி கொள்ளையடித்தவர்களைப் பிடிக்க, 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கி டாக்கி கொள்ளை போனதால், நேற்று காலை முதல் வாக்கி டாக்கி மூலம் தகவல் பரிமாற்றத்தை துண்டித்தனர்.தர்மபுரி மாவட்டத்தில், முன்பு நக்சல் அமைப்பினர் நடமாட்டம் இருந்தது. தற்போதும் நக்சல் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக, நிருபர்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்க போலீசார் மறுத்து வருகின்றனர். சம்பவத்துக்கான காரணம் என்ன, ஈடுபட்டது யார்? என்ற அடிப்படை கேள்விகளுக்கே துப்பு துலங்காத நிலையில் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். சோதனை சாவடிகளில் வாகன சோதனை முழு வீச்சில் நடக்கிறது.
கொள்ளையடித்த கும்பல், தங்களுக்கு தேவையான அளவு ஆயுதங்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, ஆயுத அறையில் 303 ரக துப்பாக்கி இரண்டு, 410' மஸ்கட் ரக துப்பாக்கி மூன்று, எஸ்.பி.பி.எல்., ரக துப்பாக்கி நான்கு ஆகியவற்றை கும்பல் எடுக்கவில்லை. அவற்றை கொள்ளைக் கும்பல் விட்டுச் சென்றதன் காரணமும் தெரியவில்லை.
டி.ஐ.ஜி., செண்பகராமன் காலை 11 மணிக்கு இது பற்றி கூறுகையில், இப்போது தான் வந்துள்ளேன். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. நேற்று அதிகாலையில் 1.30 மணிக்கு ஸ்டேஷனில் இருந்த ஐந்து பேரும் தூங்கி விட்டனர். அந்த நேரத்தில் புகுந்த மர்ம கும்பல், ஆயுதக் கிடங்கில் இருந்த ஆறு துப்பாக்கிகளை திருடிச் சென்று விட்டனர். அவர்கள் யார்? என்பதை கண்டறியும் பணியில் போலீஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.
போலீசுக்குள் கோஷ்டி பூசல்:போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், போலீசாரிடையேயான கோஷ்டி பூசலால் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்த போது பணியில் இருந்த போலீசாரிடமும், உயர் அதிகாரிகளிடமும் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுதல் டி.ஜி.பி., விஜயகுமாரும் விசாரணை நடத்தினார். கொள்ளை நடந்தபோது பணியில் இருந்த போலீஸ் மீதான நடவடிக்கை, விசாரணை அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர். சம்பவம் பற்றி இந்திய தண்டனைச்சட்டம் 457 (பூட்டை உடைத்தல்), 380 (திருட்டு) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.போலீஸ் நிலையத்தில் நிலவும் கோஷ்டி பூசலால் சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி, போலீஸ் உயர் அதிகாரிகள் கருத்து கூற மறுத்து விட்டனர்.
நன்றி : தின மலர்

No comments: