Wednesday, April 16, 2008

ராமர் பாலத்தை யார் வழிபடுகிறார்கள் - உச்ச நீதிமன்றம் கேள்வி!

ராமர் பாலம் என்று கூறப்படும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டை ஒரு வழிபாட்டுத் தலம் என்று யார் கூறியது? நடுக்கடலிற்குச் சென்று அதனை யார் வழிபடுகிறார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது!
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இத்திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணியம் சுவாமி, ராமர் பாலம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட வழிபாட்டுத் தலம் என்றும், தான் ஒவ்வொரு வருடமும் கடலிற்குச் சென்று அதனை வழிபட்டு வருவதாகவும் கூறினார்.
"கணம் நீதிபதி அவர்களே, இது உங்களது நம்பிக்கையைப் பொறுத்த கேள்வி அல்ல. ஆனால், இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை தொடர்பானது" என்று கூறினார்.
அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள், அது ஒவ்வொருவரும் புரிந்துகொள்வதைப் பொறுத்தது என்று கூறினர். அதற்கு, அந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலம்தான் என்பதை இந்துக்கள் ஒட்டுமொத்தமாக நம்புகின்றனர் என்று சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
"இது எனது நம்பிக்கை மட்டுமல்ல, அது புனிதத் தலம்தான் என்பது இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு நீங்கள் தடையேதும் போட முடியாது" என்று கூறினார்.
அப்பொழுது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், அது வழிபாட்டுத் தலம்தான் என்று கூறியது யார்? கடலிற்கு நடுவில் சென்று அதனை யார் வழிபடுகிறார்கள்? மக்கள் அங்குச் சென்று வழிபடுகிறார்கள் என்றெல்லாம் கூறாதீர்கள் என்று கூறினார்.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் ஜேட்லி ஆகியோர், சேதுக் கால்வாய் பகுதியில் தொல்லியல் துறையைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டினார்கள்.
அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, "இந்த நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பிக்கும் போது நீங்கள் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வலியுறுத்தக் கூடாது" என்று கூறினார்.
இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

நன்றி : வெப்துனியா

சிறப்பு புலனாய்வு பிரிவின் துவேஷ சிந்தனை நாட்டுக்கு நல்லது அல்ல -MNP அறிக்கை

கடந்த 13.04.2008 அன்று தினமனி நாளிதழில் "படை திரட்டும் மனித நீதிப் பாசறை போலிசார் கவலை" என்ற தலைப்பில் இசக்கி என்ற பாசிஸ்ட் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டு தமிழகத்தில் கலவர விதையை விதைக்க தினமனி முயன்றது. தற்போது தினமனியின் அந்த பாசிச செயலுக்கு மறுப்பு தெறிவித்து மனித நீதிப் பாசறை அமைப்பினர் அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளனர் அந்த அறிக்கையில் கீழக்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

துவேஷ சிந்தனையில் சிறப்பு புலனாய்வு போலிஸார் - மனித நீதிப் பாசறை கவலை
"படை திரட்டும் மனித நீதிப் பாசறை போலிசார் கவலை" என்ற தலைப்பில் கடந்த 13.04.2008 அன்று தினமனி நாளிதழில் பக்கம் 6ல் வந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது. மனித நீதிப் பாசறை தமிழகத்தில் கடந்த 2001 ம் ஆண்டு துவங்கப்பட்டது 2004ல் அல்ல. நீதிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும், தேச நலனுக்காகவும் போராடுவதே மனித நீதிப் பாசறை. கடந்த பல வருடங்களாக சாதி, மத பாகுபாடு இன்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு தனி முத்திரை பதித்து வருகிறது மனித நீதிப் பாசறை.

ராணுவ பயிற்சி அல்ல


நாங்கள் வழங்குவது ராணுவ பயிற்சி அல்ல. சுதந்திர தின அணிவகுப்பிற்கான பயிற்சி ஆகும். நாட்டை காக்க ராணுவம் இருக்கும்போது அந்த வேலையை நாம் எடுத்துக் கொள்ள தேவையில்லை. சுதந்திர தின அணிவகுப்பு என்பது முஸ்லிம்களின் சுதந்திர உணர்வின் வெளிப்பாடு ஆகும்.
கோவை மாநாட்டில் மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீருடை அணிவகுப்பு நடத்தியது, நெல்லையில் இளைஞரனி மாநாட்டில் தி.மு.க தொண்டரனி சீருடை அணைிவகுப்பு நடத்தியது. அதே போல்தான் மனித நீதிப் பாசறை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்த இருக்கிறது.

சிறப்பு புலனாய்வு பிரிவின் துவேஷ சிந்தனை நாட்டுக்கு நல்லது அல்ல
கடந்த 60 ஆன்டுகளாக சுதந்திர இந்தியாவிலும் அதற்கு முன்பு 20 ஆன்டுகளாக பிரிட்டிஷ் இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ் என்ற ஃபாசிச பயங்கரவாத அமைப்பு சீருடை அணிவகுப்பு நடத்தி வருகிறது. திரிசூலம் வழங்குவது, சூலாயுதம் வழங்குவது, மதுரை விவேகானந்தா கல்லூரி உட்பட பல இடங்களில் துப்பாக்கி பயிற்சி வழங்கியது, அதன் மூலம் திட்டமிட்டு முஸ்லிம்களை கொன்றொழித்தது இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த அரசுக்கு வேண்டுகோள் விடுக்காத சிறப்பு புலனாய்வு துறை மனித நீதிப் பாசறையின் சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது சிறப்பு புலனாய்வு துறையின் துவேஷ சிந்தனையை தெளிவாக காட்டுகின்றது.


துவேஷ சிந்தனையுடன் செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளை களையெடுக்க தி.மு.க அரசுக்கு எம்.என்.பி வேண்டுகோள்

தாங்கள் நடுநிலையுடன் செயல்படக் கூடிய அரசு ஊழியர் என்பதை மறந்து சிறுபான்மை முஸ்லிம்கள் நடத்த போகும் சுதந்திர தின அணிவகுப்பையே நாட்டுக்கு ஆபத்து என்று சித்தரிக்கும் வகையில் துவேஷ சிந்தனையோடு சிறப்பு புலனாய்வு துறை பிரிவு போலிஸார் செயல்பட்டுக் கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல.


சிறுபான்மை நலனில் அக்கரை காட்டும் அரசு என்று பெயர் பெற்ற கலைஞர் அரசுக்கு எதிராக முஸ்லிம்களின் சிந்தனையை திருப்பும் வேலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலிஸார் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே துவேஷ எண்ணத்தோடு உள்நோக்கம் கொண்டு செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி மீது தி.மு.க அரசு உடனே நடவடிக்கை மேற்க் கொள்ள வேண்டும் என மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது.
என்பதாக மனித நீதிப் பாசறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டள்ளது.

Tuesday, April 15, 2008

இந்தியா எங்கள் தாய் நாடு

இது எங்கள் இந்தியா
இதற்கோர் இனிய கதை உண்டு .
என் பாட்டனும் முப்பாட்டனும் எதையும் நம்பி ஏமாந்திருந்த காலத்தில்
எருது ஒட்டி வந்ததாம் சில மனித எருமைகள்
இந்தியாவிலோ எங்கும் பசுமை .
பசி உள்ள எருமை கண்டால் விடுமா ?
கவிழ்ந்து படுத்துக் கொண்டது
என் நாட்டை கவிழ்த்து விட வேண்டும் என்று .
எதையும் நம்பும் என் பாட்டனும் முப்பாட்டனும்
எருமை மேய்த்து வந்தவன்
எருமைகளாய் இவர்களையும், மேய்த்து விட
இறுமாப்பு கொண்டதை அறிந்திருக்கவில்லை.முடிவு
மனிதனுக்கே வர்ணம் பூசும் கேவலம்
மிருகங்களோடு கிடந்தவனுக்கு
மாமிச பக்கங்கள் தானே தெரியும்.
தலை முதல் கால் வரை தனி தனியே பிரித்து விட்டான்
எதையும் நம்பிய முப்பாட்டன்களை .
பூவையர் குலத்தை விட்டானா ? இல்லை
அவர்களின் காதிலும் பூவை வைத்து விட்டான்.
மாராப்பு போட்டவள் மகா பாவி
மன்னவனை இழந்தவள் மலத்தை விட கேவலம்
அழகாய் இருந்து விட்டால்
அவள் எந்த ஜாதியாய் இருந்தாலும்
இந்த எருமை மேய்ப்பவர்களுக்கு பெஞ்சாதி ,
இன்னும் எத்தனையோ இழிநிலை இந்த
மலரினும் மென்மையான மாந்தயர் குலத்துக்கு ,
விட்டானா அத்தோடு
மலத்தை மனமுவந்து தொடும் இவன்
மனிதனில் ஒரு சிலரை தொடமட்டானாம்
இல்லை இல்லை
அவர்களின் மூச்சை கூட தீண்ட மாட்டானாம் .
எருமை சாணத்தை எடுத்து விளையாடியவனின் எக்காளத்தை கண்டாயா.
எங்கும் கொடுமை எதிலும் கொடுமை
எது கிடைத்தாலும் அது இவனுக்கு மட்டுமே
இப்படி ஒரு அவலம் இருக்கையிலே
இம்மையின் இனிமையை விட
மறுமையின் மகத்துவம் சொல்லிட
வந்த மனித குல மணிவிளக்கு எம்பெருமானார் (ஸல்) அவர்களின் அறிவுரைகேட்டு மக்களை மக்களை மதித்திட
மனித குல பெருமை காத்திட
மண்ணிலே மகத்துவம் நிறைந்த மார்க்கம் இஸ்லாம்
கடலில் அசையும் கப்பலாய்
காற்றினில் வரும் கீதமாய்
இனிய பாங்கோசயுடனே
இந்த தரிதிரர்களால் தவிடுபொடி ஆக்கப்பட்டு கண்ணீரில் மிதக்கும்
இந்த கங்கை கொண்ட புரத்தையும்
இந்தியர்களின் இரத்தம் சிந்தப் பட்ட சிந்து நதிக் கரையிநிலும் சில்லென வந்து சேர்ந்தது.
பசுமை கண்ட இந்தியாவில் பாசம் அறியா மக்களிடையே
பரிவும் பாசமும் கனிவும் கொண்டதாய்
அள்ளி அணைக்கும் தாய்மை நிறைந்ததாய்
பார்ப்பன் முதல் பஞ்சமன் வரை
அனைவரையும் அரவணைக்க
அன்புக் கரம் விரித்து அருமையாய் அனைத்துக் கொண்டது.
அப்போது தான் அறிந்து கொண்டான்
அதுவரை அறிவு கெட்டிருந்த பாட்டனும் முப்பாட்டனும்.
பார்ப்பானுக்கு சொந்தமல்ல பகவான்
அழிவை சொல்வதல்ல கடவுள்.
உன்னிடம் படயலைக் கேட்பதல்ல பக்தி.
ஒருவன் தான் இறைவன்
ஓரினம் மட்டும் அவனை உரிமை கொள்ள முடியாது என்ற உன்னத உண்மையை.


உணர்ந்துக் கொள் சமுதாயமே நீ இந்துவாயோ அல்லது இன்ன பிறதாயோ இருப்பது முக்கியமல்ல உன்னிறைவனிடம் உன்னுடைய உரிமை என்ன எனபது தான் இங்கே உணர வேண்டியது உயிருள்ள மனிதன் நீ உன்னில் உணர்த்தத்தான் இதை உனக்கு சமர்ப்பிக்கிறேன்

Monday, April 14, 2008

விடுதலைப் போரில் புதிய உத்தி ...

விடுதலைப் போரில் புதிய உத்தி எந்தவொரு அடக்குமுறையும் மக்கள் சக்தியின் முன் நிற்க முடியாது என்ற வரலாற்று உண்மை, மீண்டும் பாலஸ்தீனத்தில் நிரூபணமாகி இருக்கிறது. குண்டு வீச்சாலும், ராக்கெட் தாக்குதல்களாலும் வெல்ல முடியாத பாலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க இசுரேல் அமெரிக்கா கூட்டணி திட்டம் போட்டது. பாலஸ்தீன மக்கள், இப்படுகொலைத் திட்டத்தை எளிதாக, ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் முறியடித்து, ஏகாதிபத்தியக் கும்பலை அதிர வைத்துவிட்டனர்.
2005ஆம் ஆண்டு இறுதியில் பாலஸ்தீன ஆணையத்திற்கு நடந்த தேர்தலில், ஏகாதிபத்திய கும்பலின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பான ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. பாலஸ்தீன ஆணையத்தை ஹமாஸ் இயக்கம் கைப்பற்றிக் கொண்டாலும், அதிபர் மற்றும் அதிகார வர்க்கப் பதவிகள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஓர் அங்கமான ஃபதா அமைப்பின் கைகளில் இருந்தன.
ஃபதா இயக்கத்தின் தலைவரும், பாலஸ்தீன அதிபருமான முகம்மது அப்பாஸூம், மேற்குலக ஏகாதிபத்தியங்களும், இசுரேலும் ஹமாஸின் தேர்தல் வெற்றியை அங்கீகரிக்க மறுத்ததோடு, ஹமாஸின் ஆட்சியைக் கவிழ்க்கவும் சதி செய்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஹமாஸை அழிக்க, ஃபதா இயக்கத்திற்கு ஆயுதங்களும், பயிற்சியும் அளித்து சகோதரச் சண்டையைத் தூண்டிவிட்டு வந்தது. அதிபர் முகம்மது அப்பாஸ், கடந்த ஆண்டு மத்தியில் தன்னிச்சையாக பாலஸ்தீன ஆணையத்தைக் கலைத்ததையடுத்து, மேற்குக் கரையை ஃபதா இயக்கமும்; காசாமுனையை ஹமாஸ் இயக்கமும் தங்களுக்குள் பாகப் பிரிவினை செய்து கொண்டன.
பாலஸ்தீனம் இப்படி இரண்டாகப் பிளவுபட்டதை வரவேற்ற அமெரிக்க ஏகாதிபத்தியம், ""காசாவைக் கசக்கிப் பிழிவதன் மூலம் ஹமாஸைத் தோற்கடிப்போம்'' என வெளிப்படையாக அறிவித்தது. இசுரேல் காசாமுனைப் பகுதியை, ""எதிரிப் பகுதி'' என அறிவித்துத் தனது ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்தது.
காசாமுனை, மூன்று புறங்களில் இசுரேலையும்; நான்காவது பக்கத்தில் எகிப்தையும் எல்லையாகக் கொண்ட நிலப்பகுதி ஆகும். இசுரேல் இந்தப் பூகோள அம்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு, காசாமுனையைத் திறந்தவெளி சிறைச்சாலையாகவே மாற்றியமைத்து விட்டது. 2005ஆம் ஆண்டே காசா முனைகளில் இருந்து இசுரேல் இராணுவம் வெளியேறி விட்டாலும், அதன்மீது குண்டு வீச்சு மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்துவதை இசுரேல் நிறுத்திக் கொள்ளவேயில்லை. இவ்வான்வழித் தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகளை மட்டுமின்றி, காசாமுனையில் நடந்து வந்த விவசாயத்தையும், சிறு தொழில்களையும் அழித்தொழித்தது, இசுரேல். இதனால், காசா முனையில் வாழும் 15 இலட்சம் பாலஸ்தீனர்களும் அடுத்த வேளை உணவுக்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் ஐ.நா.வின் உதவியை அண்டியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இப்படிப்பட்ட அவலமான நிலையிலும் கூட, பாலஸ்தீன மக்களின் போராட்ட உணர்வு பிசுபிசுத்துப் போய்விடவில்லை. இதனால் ஒருபுறம் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்திக் கொண்டே, இன்னொரு புறம், தனது எல்லை வழியாக காசா முனைக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களைத் தடுக்கத் தொடங்கியது, இசுரேல்.
இசுரேலின் வழியாக காசா முனைக்குத் தினந்தோறும் 900 லாரிகள் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்று வந்தன. இந்தச் சரக்குப் போக்குவரத்தின் எண்ணிக்கை, கடந்த 18 மாதங்களில் படிப்படியாக 15 ஆகக் குறைக்கப்பட்டதோடு, காசாவுக்குச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் எண்ணிக்கையும் 15 ஆகக் குறைக்கப்பட்டது. இப்பொருளாதார முற்றுகையை கடந்த சனவரி 2008 முதல் முழுமையாக அமல்படுத்தத் தொடங்கியது, இசுரேல். உயிர் வாழ்வதற்கே அடிப்படையான உணவுப் பொருட்களும், மருந்துப் பொருட்களும், எரிபொருளும், மின்சாரமும் காசாவுக்குக் கிடைப்பது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது.
எரிபொருளும், மின்சாரமும் தடை செய்யப்பட்டதால், காசாமுனையில் வாழும் பாலஸ்தீன மக்கள் குளிரில் விறைத்துச் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்; மின்சாரம் இல்லாததால், தண்ணீரைச் சுத்திகரித்துக் குடிதண்ணீர் வழங்குவது நின்று போனது; மேலும், கழிவு நீரைச் சுத்திகரிக்க முடியாமல் போனதால் கிருமிகள் பெருகி, தொற்று நோய் பரவும் அபாயம் நேரிட்டது. இதன் மூலம் காசாமுனை மீது ஓர் உயிரியல் போரையும் கட்டவிழ்த்து விட்டது, இசுரேல்.
பாலஸ்தீன விடுதலைப் போராளிகள், காசாமுனை எல்லையில் அமைந்துள்ள சிடரோட் என்ற கிராமப்புற பகுதி மீது ராக்கெட் குண்டுகளை வீசி இசுரேலியர்களைக் கொன்று வருவதாகவும்; அதனைத் தடுக்கும் முகமாகத்தான் இப்பொருளாதாரத் தடையை காசாவின் மீது விதித்திருப்பதாகவும் கூறி, இசுரேல் தனது இனவெறிப் பிடித்த போர் நடவடிக்கையை நியாயப்படுத்தி வருகிறது.
ஆனால், ""இது பச்சைப் பொய்'' என்கிறார், இசுரேலின் அமைதிக் குழுவைச் சேர்ந்த யுரி அவ்நேரி. ""இசுரேல் வகைதொகையின்றி காசா முனை மீது குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருவதற்குப் பதிலடியாகத்தான் பாலஸ்தீனப் போராளிகள் சிடரோட் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். இசுரேலின் குண்டு வீச்சுத் தாக்குதல்களினால், 2007இல் மட்டும் 53 சிறுவர்கள் உள்ளிட்டு 290 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், சிடரோட் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்களினால் 2007இல் வெறும் இரண்டு யூதர்கள்தான் கொல்லப்பட்டுள்ளனர்.''
""ராக்கெட் தாக்குதல்களை நிறுத்துவதற்காக மட்டும் இப்பொருளாதார முற்றுகை காசாமுனை மீது திணிக்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் போகும் பொழுது, பாலஸ்தீன மக்கள் ஆத்திரமடைந்து ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராகப் போராடத் தொடங்குவார்கள். அப்போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஹமாஸ் இயக்கத்தை காசா முனையில் இருந்து வெளியேற்றுவதில் வெற்றி பெறலாம் என்பதுதான் இசுரேலின் நோக்கமேயன்றி, சிடரோட் கிராம மக்களைக் காப்பாற்றுவது அதன் பிரதான நோக்கமல்ல. சிடரோட் கிராம மக்களை ராக்கெட் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றுவதுதான் இசுரேலின் பிரதான நோக்கமாக இருந்திருந்தால், ஹமாஸ் இயக்கம் முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை இசுரேல் ஏன் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது?'' எனக் கேள்வி எழுப்பி, யுரி அவ்நேரி இசுரேலின் ஆக்கிரமிப்புப் போர்வெறியை அம்பலப்படுத்தியுள்ளார்.
இப்பொருளாதார முற்றுகையால் ராக்கெட் தாக்குதல் நிற்கும்; பாலஸ்தீன மக்கள் ஹமாஸுக்கு எதிராகப் போராடத் தொடங்குவார்கள் என்ற இசுரேலின் இரண்டு கணிப்புகளும் பொய்த்துப் போய்விட்டன. ""எரிபொருளும், மின்சாரமும் கிடைக்காமல் காசாமுனை இருளில் மூழ்கிப் போன பிறகு, சிடரோட் மீது 17 ராக்கெட் தாக்குதல்கள் நடந்துள்ளன. தமது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் திண்டாடிப் போன பாலஸ்தீன தாய்மார்கள் ஹமாஸ் இயக்கத்தை வெறுத்தொதுக்கவில்லை. மாறாக, இசுரேலின் பிரதமர் ஓல்மெர்ட்டையும்; இசுரேலோடு கூட்டணி சேர்ந்துள்ள பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸையும்தான் திட்டித் தீர்த்தார்கள்'' என யுரி அவ்நேரி குறிப்பிடுகிறார்.
இசுரேல் காசாமுனை மீது பொருளாதார முற்றுகையைத் திணித்தவுடனேயே பாலஸ்தீன மக்கள் எல்லையைக் கடந்து எகிப்துக்குள் நுழைய முயன்றனர். எகிப்தின் எல்லைக் காவல் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், அவர்களின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதற்கு அடுத்த நாளே, ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் எகிப்துகாசாமுனை எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ரஃபா எனுமிடத்தில் குவிந்ததோடு, எல்லைப்புற வேலியை குண்டு வைத்துத் தகர்த்துவிட்டு, எகிப்துக்குள் நுழைந்தனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக பாலஸ்தீன மக்கள் எகிப்துக்குள் நுழைந்த இந்த நடவடிக்கையை, பாலஸ்தீன விடுதலையை நேசிக்கும் அனைவரும் ""மூன்றாவது இண்டிஃபதா'' என்று வருணித்தனர்.
இந்த ""எல்லை தாண்டிய விடுதலை நடவடிக்கை'' இசுரேல் அமெரிக்கக் கூட்டணியை மட்டுமல்ல, அவர்களின் அரேபியக் கூட்டாளிகளையும் திகைக்க வைத்துவிட்டது. ""எல்லைப் புறத்தை உடனடியாக மூடாவிட்டால், அமெரிக்கா எகிப்துக்கு வழங்கிவரும் நிதியுதவியை நிறுத்திவிடும்'' என அமெரிக்கா எகிப்தை எச்சரித்தது. எனினும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக எகிப்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் காரணமாக, எகிப்து அரசால் அமெரிக்காவின் கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. எல்லைப்புற வேலி உடைக்கப்பட்டு 11 நாட்கள் கழித்து, ஹமாஸுக்கும், எகிப்து அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்துதான் காசாமுனை எகிப்து எல்லைப் பகுதி மூடப்பட்டது.
பாலஸ்தீன மக்களின் அதிரடி நடவடிக்கையால், இப்பொருளாதார முற்றுகை பிசுபிசுத்துப் போய்விட்டதாலும்; சர்வதேச மக்களின் முன் இசுரேலின் ஆக்கிரமிப்புப் போர்வெறி மீண்டும் அம்பலப்பட்டுப் போய்விட்டதாலும், காசாமுனைக்கு எரிபொருளும், மின்சாரமும் வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையைத் தற்பொழுது ஓரளவு தளர்த்திவிட்டது, இசுரேல். அதேசம யம், இப்பொருளாதார முற்றுகையை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளாவிடில், எகிப்துக்குள் நுழைந்ததைப் போல இசுரேலுக்குள் நுழைவோம் என பாலஸ்தீன மக்கள் எச்சரித்துள்ளனர்.
""சர்வதேசச் சட்டங்கள் ஒப்பந்தங்களின் படி பார்த்தால், பாலஸ்தீன மக்களின் மீது இசுரேல் திணித்த இப்பொருளாதார முற்றுகைப் போரை இனப்படுகொலை என்றுதான் கூற முடியும்'', எனச் சர்வதேசச் சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், அமெரிக்காவோ, இப்பொருளாதார முற்றுகையைக் கண்டித்து ஐ.நா. மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரும் முயற்சியை, தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியது. இந்தியாவோ, ஒருபுறம் இசுரேலை பெயரளவுக்குக் கண்டித்துவிட்டு, மறுபுறம் ஈரானை வேவு பார்ப்பதற்காகவே இசுரேல் தயாரித்திருந்த உளவு செயற்கைக் கோளை, சிறீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்குச் செலுத்தி, இசுரேலுக்கு உதவியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் என்ற போர்வையில் திரியும் இனத் துரோகி முகம்மது அப்பாஸோ, எவ்வித நிபந்தனையும் இன்றி இசுரேல் அமெரிக்கப் போர்க் குற்றவாளிகளோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்.
பாலஸ்தீனக் குழந்தைகள் பாலுக்காகக் கதறிக் கொண்டிருக்கும் பொழுது, அம்மக்கள் குளிரில் விறைத்துச் செத்துக் கொண்டிருக்கும்பொழுது, அவர்களால் எப்படி அமைதியாய் இருக்க முடியும்? இப்பொருளாதார முற்றுகை, ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியிருப்பதோடு, விடுதலை இயக்கங்கள், தங்களின் போராட்டத்தின் ஊடாகவே சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியிருக்கிறது.

·ரஹீம்

நன்றி :தமிழ் அரங்கம்

Sunday, April 13, 2008

இராமன் கடந்த தொலைவு

அ.மார்க்ஸ்
(இராவணனின் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா? “வானரங்களின் உதவியோடு இராமனால் அன்று கட்டப்பட்ட ‘நளசேது’ என்பதும் தனுஷ்கோடியையும் இலங்கையையும் இணைக்கும் மணல் திட்டுத் தொடரான ‘ஆதம் பாலமும்’ ஒன்றா? என்பது குறித்து 1930களில் எழுதப்பட்ட ஒரு அரிய ஆங்கில நூல் பற்றியது இக்கட்டுரை. இன்றைய ‘இராமர் சேது’ பிரச்சினை முளைவிடாத ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்டது இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது)
தான் படித்துக் கிளர்ச்சியுற்ற நூல்கள் குறித்து உடனடியாக தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார் நண்பர் ராமாநுஜம். ஓர் அரிய நூல் குறித்து சமீபத்தில் அவர் கூறியதோடு தமிழ்ச் சூழலில் அதை அறிமுகப்படுத்தி வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி அதைப் பிரதி எடுத்து உடனடியாக அனுப்பவும் செய்தார். இன்றைய சூழலில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினை குறித்து, அந்த பிரக்ஞை எதுவுமற்று சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது இந்நூல். ‘கீச்ட்ச்தூச்ணச் ச்ணஞீ ஃச்ணடுச்’ என்கிற இந்த சுமார் 100 பக்கம் உள்ள ஆங்கில நூலை எழுதியவர் கூ.பரமசிவ அய்யர் என்ற ஒரு தமிழர்.
பெங்களூர் நகரத்திலிருந்து பெங்களூர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1940ல் வெளி வந்துள்ளது இந்நூல். தான் மிக மதிக்கும் தனது மூத்த சகோதரர் மறைந்த நீதிநாயகம் சர். கூ.சதாசிவ அய்யர், எம்.எல்., அவர்கட்கு மிக்க பணிவுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இந்நூல். காலத்தின் தூசு படிந்து கிடந்த இந்நூலைக் கண்டு பிடித்து ராமாநுஜத்திடம் அளித்தவர் திரு. எஸ்.விஜயன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த, எல்லோராலும் பெரிதும் மதிக்கப்பட்ட தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் (ஏ.பி) அவர்கள் நூலாசிரியர் பரமசிவ அய்யரின் தம்பி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
நூலாசிரியர் பரமசிவ அய்யர் ஒரு நாத்திகரோ, இல்லை, அவரே சொல்வது போன்று காந்தியடிகளைப் போல ‘இராமாயணம் என்பது ஒரு வெறும் கற்பனைக் காவியம்’ என்று கருதுபவரோ அல்ல. சிறுவயது முதற்கொண்டு வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தையும், சுந்தர காண்டத்தையும் பலமுறை பயின்றவர். தனது வழிகாட்டியாக கருதிய அவரது தமயனாரோ வால்மீகி இராமாயணத்தை பாராயணம் செய்தவர். பரமசிவ அய்யர் அவர்களின் கருத்துப்படி, ‘பால காண்டம் சிறு பிள்ளைத்தனமான புராணிக சம்பவங்களின் தொகுப்பு; சுந்தர காண்டம் அதீத அலங்காரங்கள் மிகுந்த அழகிய விவரணக் கவிதை’.
1922ல் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த போது அவர் இதர மூன்று காண்டங்களையும் ஆழமாகப் பயின்று இருக்கிறார். அயோத்தியா, ஆரண்யா மற்றும் கிஷ்கிந்தா காண்டங்களில் நம்பத்தகுந்த உண்மையான, வரலாறு பொதிந்துள்ளது என அவர் உணர்ந்தார். ‘ஆதிகாவ்யம்’ என இந்திய மரபில் போற்றப்படும் இராமாயணத்தில் அடித்தளமாக அமைந்த வரலாற்று நிகழ்வு குறித்த ஒரு விமர்சன பூர்வமான ஆய்வை உருவாக்குவதில் அவரது எஞ்சிய வாழ்நாள் கழிந்தது. அயோத்யா காண்டத்தில் (சர்கம்: 8, பாடல்: 16) ஒரு வரி: “கிரஹணத்திற்கு ஆட்பட்ட சூரியனைப் போலவும், உண்மையற்ற ஒன்றைச் சொல்ல நேர்ந்த ஒரு ரிஷியைப் போலவும் தசரதன் (திகைத்து) நின்றான்”. பொய் சொல்ல நேர்வது என்பது எத்தகைய ஒரு பேரவலம் என்று வால்மீகி கருதியது பரமசிவ அய்யரின் கவனத்தை ஈர்த்தது. வால்மீகி முனிவரின் உண்மையின் மீதான விசுவாசத்தை வியந்து ஏற்று அந்த அடிப்படையில் அவரது ஆதி காவ்யத்தின் புவியியலை ஆராயத் தொடங்கினார்.
மைசூரில் உள்ள சிவசமுத்திர நீர்மின் ஆற்றல் திட்டத்தை நிறுவிய புகழ்மிக்கப் பொறியாளர் சர்.கே. சேஷாத்ரி அய்யரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் பரமசிவ அய்யருக்கு கைகொடுத்தது. பிரிட்டிஷ் அரசு வெளியிட்டிருந்த புவியியல் நுண் விளக்க வரைபடத்தாள்களை (இணிடூணிதணூஞுஞீ ட்டிடூஞு tணி டிணஞிட கூணிணீணீணி குடஞுஞுtண்) பார்த்துப் புரிந்து கொள்ளும் பயிற்சி இதன் மூலம் அவருக்கு வாய்த்திருந்தது. எனவே, அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் ‘சர்வே’ துறையிலிருந்து 63ஆம் எண்ணுள்ள வரைதாளை (குதணூதிஞுதூ ணிஞூ ஐணஞீடிச் குtச்ணஞீச்ணூஞீ குடஞுஞுt 63) பெற்று அவர் ஆய்வு செய்தபோது வால்மீகி குறிப்பிடும் தமஸா, வேடயிருதி, கோமதி, சயந்திகா, யிசிறிங்கவேரபுரம் ஆகிய கங்கையின் வடகரைப் பகுதிகள் அனைத்தும் இன்றும் டோன் (தமஸா), பிஸ்வி (வேடஸ்ருதி), கும்தி (கோமதி), சாய் (சயந்திகா), சிங்ரார் (ஸ்சிறிங்கவேரபுரம்) என கிட்டத்தட்ட அதே பெயர்களில் நிலவுவது அவருக்கு வியப்பளித்தது.
தொடர்ந்து அவர் செய்த ஆய்வுகள் அயோத்தியிலிருந்து ‘லங்கா’ வரை ராமர் கடந்த பாதையைத் துல்லியமாகக் கண்டறிய வைத்தது. மிக விரிவான, பிரமாண்டமான வரைபடங்களின் உதவியோடு துல்லியமாக இதை நிறுவுகிறார் பரமசிவ அய்யர். தாமோ மாவட்டத்தின் 800 சதுரமைல்கள் பரப்புள்ள சோனார் ஆறு மற்றும் அதன் கிளை நதிகளான கோப்ரா, பிவாஸ் ஆகியவற்றால் வற்றாது வளமூட்டப்பட்ட ‘ஜனாஸ்தன்’ எனப்படும் வண்டல் படிந்த, மக்கள் செறிவுமிக்க பகுதிகளில் ‘கோண்டு’ பழங்குடியினருக்கும் பரவிவந்த ஆரியர்களுக்கும் இடையில் நடந்த போராட்ட வரலாறே இராமாயணம் என்கிற உறுதியான முடிவுக்கு வந்தார்.
இடையில் தமயனார் இறந்துபோன (1928) சோகத்தில் உறைந்து செயலற்றுப் போன பரமசிவர் 1934ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து தனது அரிய ஆய்வு முடிவுகளை ஒரு நூலாக்கி வெளியிட வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். ‘இந்து’ நாளிதழில் வெளியான செய்திதான் அது. பரமசிவரால் பெரிதும் மதிக்கப்பட்ட பெரும் கவிஞரான ரவீந்தரநாத தாகூர் அவர்கள் சென்னைக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, “அயோத்தியின் அரசி (சீதை) ஒரு 10 தலை ராட்ஷசனால் கடத்திச் சென்று சிறைவைக்கப்பட்டது உங்களுடைய தீவில்தான் என நான் சிலோன் மக்களிடம் சொன்னேன்”, எனக் குறிப்பிட்டிருந்தார்.
“தெய்வீகப்பண்புகள் நிறைந்த அம்மாமனிதர் உதிர்த்த இச்சொற்கள் என்னை அதிர்ச்சியடைய மட்டுமல்ல, வேதனையுறவும் செய்தன” என்கிறார் பரமசிவ அய்யர். கவி தாகூர் மட்டுமல்ல, பண்டித நேரு, ஸ்ரீராஜாஜி ஆகிய பெரும் அறிஞர்களும் கூட இந்தக் கருத்தை அவ்வப்போது உதிர்த்தது பரமசிவ அய்யரை துன்புறுத்தியது. ஜுன் 1934ல் சிலோனில் பேசும் போது பண்டித நேரு ‘லங்கா’வையும் ‘சிலோனை’யும் ஒன்றாகவே குறிப்பிட்டார். திரும்பிவரும் வழியில் சென்னையில் நேருவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது, பண்டித நேரு “அனுமனைப் போல இலங்கையிலிருந்து பறந்து”, வந்ததாக ராஜாஜி குறிப்பிட்டார். இராமாயணப் ‘போர்’ இல்லாமலேயே தனது முயற்சிகளில் நேரு வெல்வார் எனவும் ராஜாஜி வாழ்த்தினார்.
அப்போது ராஜாஜி சென்னைப் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகாரங்களில் உள்ளவர் கள், பொறுப்புமிக்க உயர் பதவிகளில் உள்ளவர்கள், அறிஞர் பெருமக்கள் இருநாட்டு மக்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடிய, தவறான தகவல்களின் அடிப்படையிலான வார்த்தைகளை உமிழ்வது பரமசிவரைத் துன்புறுத்தியது. “அப்படியானால் சர். பரோன் ஜெயதிலக (அன்றைய இலங்கைப் பிரதமர்?) இராவணனா?” என ஸ்ரீ.எஸ். சீனிவாச அய்யங்கார் விமர்சித்ததும் பரமசிவரைக் கவர்ந்தது.
கிட்டத்தட்ட அயர்லாந்தை ஒத்த இலங்கைத் தீவில் இனத்தாலும், மதத்தாலும், மொழியாலும் வேறுபட்ட, ‘பவுத்த சிங்களர்களுக்கும், பிராமணியப்படுத்தப்பட்ட தமிழர்களுக்கும்’ இடையில் உருவாகியுள்ள பகை உணர்வுக்கு அடிப்படையாக சோழ, பாண்டிய மன்னர்கள் மேற்கொண்ட படையெடுப்புகள், அழித்த பவுத்த கலாச்சாரச் சின்னங்கள், நிறுவிய கட்டாயக் குடியிருப்புகள் ஆகியன பின்னணியில் உள்ளதை நினைவு கூறுகிறார் பரமசிவர். மஹா வம்சத்தில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. அனுராதபுரத்தையும் பொலனறுவையும், தீக்கிரையாக்கி ‘ஜனநாத மங்கலம்’ எனத் தன் பெயரை அவற்றிற்கு ராஜராஜ சோழன் சூட்டியதை நாமும் அறிவோம்.
இந்தப் பின்னணியில் பரமசிவ அய்யர் தனது நூலை அச்சிட்டு வெளியிடுகிறார் (1940). புவியியல் அடிப்படையில் கல்வி சார்ந்த ஆழமான அணுகல் முறையுடன் எழுதப்பட்ட இந்நூலை தமிழில் பெயர்த்து வெளியிடுவது இன்றைய சூழலில் மிக அவசியமான பணி, என்ற போதிலும் பரமசிவர் வந்தடைந்த சில முடிவுகளை மட்டும் இங்கு தொகுத்துத் தர முயற்சிக்கப்படுகிறது.
கிருஸ்துவுக்கு முந்திய/பிந்திய சமஸ்கிருத இலக்கியங்கள் அனைத்திலும் போஜ மன்னனின் (கி.பி. 1010 1050) ஜம்பு ராமாயணம் வரைக்கும் சிங்களம் (சிலோன்) என்பது திரிகூட மலைமீது உள்ள இராவணனின் ‘லங்கா’வுடன் இணைத்துப் பேசப்பட்டதில்லை. குணாத்யாவின் காலம் தொடங்கி சாதவாகனர்களின் காலகட்டத்திலிருந்தே சிங்களம் என்பது நாகரீக மேம்பாடு அடைந்த ஒரு பவுத்த அரசாக குறிப்பிடப்படுகிறது. இரத்தினக்கற்களுக்குப் பேர் பெற்றதாக அது கருதப்பட்டது. கி.பி.330ல் சிங்கள அரசன் மேகவர்மன் பேரரசன் சமுத்ரகுப்தனுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருளுடன் தூது ஒன்றை அனுப்பினான்.
புகழ்பெற்ற சீனப்பயணி பாஹியான் (கி.பி.5ம் நூற்றாண்டு) தமிழகத்திலிருந்து 14 நாள் பயணத்தில் சிலோனை அடைந்து புத்தரின் புனிதப்பல்லைக் காட்சிப்படுத்திய திருவிழாவில் கலந்து கொண்டார். ஹர்ஷ மன்னரின் (கி.பி.608648) ‘இரத்னாவளி’யில் சிங்களம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உள்ளன. இராமாயணம் குறித்த அறிதல் ஹர்ஷருக்கு உண்டு. ‘இரத்னாவளி’யில் மேகநாதன் லட்சுமணனை வென்றது பற்றிய பதிவும் உண்டு. இருந்தபோதிலும் இராவணின் ‘லங்கா’வை அவர் சிங்களத்துடன் ஒன்றாக்கவில்லை.
வால்மீகி இராமாயணத்தில் ஒரே ஓரிடத்தில்தான் இராவணனின் இலங்கையும் இன்றைய சிலோனும் ஒன்று என பொருள்படும் குறிப்பு உள்ளது (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்: 41, பாடல்கள்: 1725). சிங்களம் என்கிற பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் மகேந்திரமலைக்கு எதிரே உள்ள தீவு எனப்படுகிறது. ‘பாண்டிய காவ்வதம்’ அல்லது கொற்கைக்கு அருகில் தாமிரபரணி கடலுக்குள் கலக்குமிடத்தில் அகஸ்தியர் அதை அமைத்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது. பின்னாளில் சிலோனையும் கொற்கைத் துறைமுகத்தையும் படையெடுத்து ஆக்ரமித்து, தலைநகர் அனுராதபுரத்தைக் கைப்பற்றி சிங்கள மன்னனை வீழ்த்திய இந்திய மன்னனை முகஸ்துதி செய்யும் நோக்குடன் இந்த வரிகளை இடைச்செருகலாகச் சேர்த்தனர் என்பதை விரிவான ஆதாரங்களுடன் பரமசிவர் நிறுவுகிறார்.
10ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழமன்னர்கள் (ராஜராஜன், ராஜேந்திரன்) மிகப்பெரிய ஆற்றலாக வளர்ந்த காலத்தில்தான் இராமாயண ‘லங்கா’வும், இன்றைய சிலோனும் ‘ஒன்றாகப்பட்டது’. சுமார் 2 நூற்றாண்டுக் காலம் சூரியவம்சத்தவர்களாகத் தங்களை கூறிக்கொண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கை இருந்தது. தமிழ்க் கல்வெட்டுக்களில் சிலோன், ‘ஈழ’ என்றே குறிப்பிடப்படுகிறது. ‘ஈழ’ என்பது இலங்கை என்பதன் சுருக்கமாக இருக்கலாம். சோழ மன்னர்களின் காலத்தவரான கம்பர் தனது இராமாவதாரத்தின் கிஷ்கிந்தா காண்டம், நாடவிட்ட படலத்தில் ‘லங்கை’யை தமிழ்நாட்டிற்குத் தெற்கே உள்ளதாக ‘தெளிவாக’ வரையறுத்து விடுகிறார்.
சற்று முன் குறிப்பிட்டடபடி போஜனின் காலம் வரை (கி.பி.1050) இராவணனின் ‘லங்கா’வும் இன்றைய சிலோனும் ஒன்றாக்கப்பட்டதில்லை. லட்சுமண சூரிதான் தனது யுத்த காண்டத்தில் முதன்முதலாக ‘சிங்களதீபம்’ என்கிற பொய்யை இடைச்செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும். “(திரிகூட) மலையுச்சி நகரமான லங்காவும் சிலோன் தீவும் மட்டுமல்ல. இராமேஸ்வரத்துக்கும் மன்னார் தீவுகளுக்கும் இடையில் அமைந்த மணற்திட்டுகளின் தொடரான ஆதம் பாலமும், கற்கள், மலைப்பிஞ்சுகள், மரங்கள், முட்புதர்கள் ஆகியவற்றால் இராமனின் உத்தரவின் பேரில் (யுத்தகாண்டம், சர்கம்: 22, பாடல்கள்: 5070) வானரங்களால் அமைக்கப்பட்ட ‘நளசேது’வும் கூட இவ்வாறு ஒன்றாக்கப்பட்டது”.
ஒரு காலத்தில் ஆதம்பாலம் ஒரு தொடர்ச்சியான பூசந்தியாக இருந்து கி.பி.1480ல் புயல் ஒன்றில் சிதைக்கப்பட்டது என ராமேஸ்வரம் கோயில் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. வால்மீகி இராமயணத்தில் குறிப்பிடப்படும் மகேந்திர மலைக்கும் சுவேல மலைக்குமிடையில் 100 யோஜனை நீளமுள்ள வடக்குத் தெற்காகக் கட்டப்பட்ட ‘நளசேது’விற்கும் ஆதம் பாலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரண்டையும் ஒன்றாக்கியதன் மூலம் இராமனின் படையெடுப்பை கொற்கைத் துறைமுகத்திலிருந்து தனுஷ்கோடி என்பதாக மாற்றிய செயல், இராமேஸ்வரத்தில் லிங்கம் நிறுவப்பட்டு இராமேஸ்வரக் கோயில் கட்டப்பட்ட காலத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆக ஆதம்பாலம் ‘நளசேது’வாக ‘இராமர் சேது’வாக மாற்றப்பட்டது கி.பி.10001100 காலகட்டத்தில்தான் என்பது பரமசிவரின் உறுதியான முடிவு.
தொடர்ந்து இதையொட்டி பல கதைகள் கட்டப்பட்டன. கிழக்கிலங்கையில் அமிர்தகலி என்னுமிடத்திலுள்ள ஒரு குளம்தான் அனுமான் தீர்த்தம், அதாவது ‘லங்கை’யை எரித்தபின் தனது வால் நெருப்பை அனுமன் அணைத்த இடம் அது எனவும் குறிப்பிடப்படுகிறது. அமிர்தகலியில் உள்ள லிங்கத்தை பிரதிஷ்டை செய்தது இராமன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வால்மீகி இராமாயணத்தில் (சுந்தரகாண்டம், சர்கம்: 54, பாடல்: 50) அனுமன் தன் வால்நெருப்பை சமுத்திரத்தில் அணைத்ததாகக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.
ஈஸ்வரன் அதாவது சிவன் ராட்சசர்களின் கடவுள். இராவணன்தான் லிங்கத்தை வணங்குபவன். திருமாலின் அவதாரமாகக் கருதப்படும், இராமன் சென்ற இடமெல்லாம் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக கதை கட்டியது சமயவெறி பிடித்த சைவர்களின் வேலை என்கிறார் பரமசிவ அய்யர். கி.மு. 180ல் ப்ருகத்ரதனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய பார்ப்பனன் புஷ்யமித்ர சுங்கனின் காலத்தில் பவுத்தம் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு அழிக்கப்பட்டதை டாக்டர் அம்பேத்கர் விரிவாக எழுதியுள்ளதை நாம் அறிவோம் (‘பார்ப்பனியத்தின் வெற்றி’). சிரமண முனிவர்களின் தலைக்கு 100 தினார்கள் பரிசளிக்கப்பட்ட விவரத்தைப் பரமசிவரும் குறிப்பிடுகிறார்.
புஷ்யமித்ரனைப் புகழ்ந்து எழுதியுள்ள வடமொழியின் முக்கிய இலக்கண ஆசிரியன் பதஞ்சலி அசோக மன்னனைப் புறக்கணிப்பதையும், அவர் காலத்தில் உயிர்ப்பலிகள் தடுக்கப்பட்டதை மறைமுகமாகக் கண்டித்ததையும் குறிப்பிடுகிறார். இராமாயணத்திலும் கூட இராமனைப் பயன்படுத்தி புத்தரை இழிவு செய்யும் போக்கு மதவெறியர்களால் இடைச்செருகலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராமன் புத்தருக்கு முற்பட்டவன் என்பது யாவரும் ஏற்றுக் கொள்ளும் வரலாற்று உண்மை. ஆனால் அயோத்தியா கண்டத்தில் (சர்கம்: 109, பாடல்: 34) இராமன் புத்தரைத் திருடன் எனவும், நாஸ்திகன் எனவும் ஏசுகிறான். எல்லாம் புஷ்யமித்ரன் மற்றும் பதஞ்சலியின் காலத்திற்குப் பிந்திய செயல்கள் என்கிறார் பரமசிவ அய்யர். இப்படித்தான் சிங்களதீபம், திரிகூட ‘லங்கா’வாகவும், மகேந்திர மன்னர்கள் இராவணர்களாகவும், பவுத்த சிங்களர்கள் ராட்சசர்களாகவும், புத்தர் திருடராகவும் கட்டமைக்கப்பட்டது. கி.பி.1000க்கு பின் இதுவே இந்திய வரலாறாக மாறியது. ‘இன்றைய தென்னிந்தியாவின் ஸ்ரீ ராமனான ராஜாஜிவாள்’, “இன்னொரு இராமாயண யுத்தத்தைத் தூண்டாதே”, என சிலோன் ஆட்சியாளர்களை எச்சரிக்கவும் நேர்ந்தது.
அயோத்தியாவில் தொடங்கி சரபுங்க மற்றும் பைசுனி ஆறுகளின் சங்கமத்தில் அமைந்த சரபுங்க முனிவரின் ஆஸ்ரமம் வரைக்குமான இராமனின் பயணவழியைத் தெளிவாக வரைகிறார் பரமசிவர். கங்கையின் வடகரையில் உள்ள சிங்ரார் (ஸ்சிறிங்க வேரபுரம்) தொடங்கி அவரது பாதை வருமாறு:
1. பிரயாகை, 2. யமுனையின் தென்கரையிலுள்ள புனித ஆலமரம் (வடசியாமா), 3. சித்ரகூடமலை, 4. அத்ரியின் ஆஸ்ரமம், 5. ராட்சசன் விராடன் புதையுண்ட குழி, 6. சரபுங்க முனிவரின் ஆஸ்ரமம். இவற்றில் சிங்ராரும் சித்ரகூடமும் (இராமாயணத்தின் ஸ்சிறிங்கவேரபுரமும்) மாவட்ட கெஸட்டியரில் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. பரமசிவர் விரிவான ஆதாரங்களுடன் பிரயாகை எனப்படுவது கங்கையும், யமுனையும் கலந்து உருவான ஒரு பெரிய ஏரி என நிறுவுகிறார்.
தேவலுக்கு அருகில் உள்ள கத்ராவில் (அட்சம் 250 15’, தீர்க்கம் 810 30’) வளர்ந்த புனித ஆலமரம் கஜினி முகமதின் படையெடுப்பின் போது அழிந்திருக்கலாம். அத்ரியின் ஆஸ்ரமம் சித்ரகூட மலையிலிருந்து, 9 மைல் தொலைவிலுள்ள அனசுயா மலைதான். ‘டோப்போ’ வரைபடத்தில் அனசுயா குன்றுகளுக்குத் தெற்கே 3 மைல்கள்் தொலைவில் உள்ள பீரத் குண்டுதான் இராமலட்சுமணர்களால் விராடன் புதையுண்ட குழி. பீரத்குண்டுக்குத் தெற்கே ஒரு யோஜனை தொலைவில் இரு நதிகளின் சங்கத்தில் அமைந்தது சரபுங்க ஆஸ்ரமம்.
விந்தியமலைக்கும், சைவலாவிற்கும் இடையில் உள்ளதாக கூறப்படும் தாண்டகவனம் (தண்டகாரண்யம்) பண்ணாதொடருக்கும் (வடக்கே) விந்தியத்திற்கும் (தெற்கே) இடைப்பட்ட பகுதி. பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட ‘கெஸட்டியர்’ மற்றும் சர்வே மேப்புகளின் உதவியுடன் பரமசிவர் வந்தடையும் முடிவுகள் இவை. ‘லங்கா’வை உச்சியில் கொண்ட சித்ரகூடமலை அட்சம் 250 10’ தீர்க்கம் 800 51’ ல் அமைந்துள்ளது. மகேந்திரமலையிலிருந்து சுவேல மலையில் உள்ள திரிகூட ‘லங்கா’வை வந்தடைவதற்கு இராவணன், அனுமன், வானரப்படை சகிதம் இராமலட்சுமணர் ஆகியோர் 100 யோஜனை தூரமுள்ள சமுத்திரத்தைக் கடக்க வேண்டியிருந்தது. இவர்களில் யாரும் இடையில் நர்மதையைக் கடக்கநேரவில்லை. நர்மதையைத் தாண்டி இராமன் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் அறுதியாக பரமசிவர். எந்த வகையிலும் இன்றைய இலங்கை மலையுச்சி நகரமான வால்மீகியின் ‘லங்கா’ அல்ல.
இராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இராமனின் பஞ்சவடியில் தொடங்கி இராவணனின் ‘லங்கா’வில் முடிகிறது. இராவணன் கழுதை பூட்டிய ரதம் ஒன்றிலேயே சீதையைத் தூக்கி வந்தான். குதிரை இந்திய மிருகமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பம்பை ஏரி, சீதை தன் ஆபரணங்களை எறிந்த குன்று, இராவணன் சுபார்வாவைச் சந்தித்த மலைப்பிளவு ஆகியன இடையிலுள்ள முக்கிய நிலக்குறிகள். மகேந்திர மலையிலிருந்து அனுமன் கடலைக் கடந்தான் என்பதாகவும் குறிப்பு வருகிறது. ஆக மகேந்திர மலைக்கும் ‘லங்கா’ அமைந்திருந்த சுவேல மலைக்கும் இடைப்பகுதி இராவணனால் கழுதை பூட்டிய ரதத்தால் கடக்கப்பட்டது. அனுமன் அதை நீந்திக் கடந்தான். இராமனோ தனது வானரப்படையின் உதவியோடு தற்காலிகப் பாலம் அமைத்துக் கடந்தான்.
இடைப்பட்ட கடலைக் கடந்தது (லங்கண) பற்றிச் சொல்லுகையில் இராவணனைக் குறிக்கும் போது செல்லுதல் (கமண) எனவும், அனுமனைக் குறிக்கும் போது நீந்துதல் (பிளவண) எனவும் குறிப்பிடப்படுகிறது. எங்கும் ‘தயண’ (பறந்து கடத்தல்) என குறிப்பிடப்படவில்லை. அதாவது மகேந்திர மலைக்கும் திரிகூடத்திற்குமுள்ள 100 யோஜனைத் தொலைவு என்பது வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் (மார்ச் ஜூன்) கழுதை வண்டி ஒன்றால் கடக்கக்கூடிய ஒரு ஆற்று நீர் வற்றிய பகுதிதான் என்பது கவனிக்கத் தக்கது. பிற காலங்களிலேயே நீந்துதலோ, பாலமோ தேவைப்படுகின்றன.
“யோஜனை’ என்கிற தொலைவு குறித்து இரு விளக்கங்கள் வால்மீகியில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு யோஜனை என்பது 4 குரோசாக்கள் அளவுடையது. 1 குரோசா என்பது 1000 வில்நாண் நீளமுடையது. 1 வில் நாண் என்பது 6 அடி நீளம். எனவே, 1 யோஜனை இந்தக் கணக்கில்படி 41/2 மைல்கள் என்றாகிறது. பிறிதோரிடத்தில் ‘யோஜனை’ என்பது ஒரு நூறு வில் நாண், அதாவது 600 அடி நீளமுடையது எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மகேந்திர கிரிக்கும், ‘லங்கை’க்கும் இடையே ‘கடலால்’ பிரிக்கப்பட்ட தொலைவு ஒரு கணக்கின்படி 450 மைல்கள், இன்னொரு கணக்கின்படி 111/2 மைல்கள். இந்த இரண்டுமே தனுஷ்கோடியையும் மன்னாரையும் இணைக்கும் 30 கல் தொலைவு நீளமுள்ள கடற்பகுதியுடன் பொருந்தி வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
உண்மையை அருளிய குருவின் முன் சீடன் வீழ்ந்து வணங்கியது போல இந்த உண்மைகளை விளக்கப்படுத்திய 55.M என்கிற எண்ணுள்ள வண்ண டிகிரி வரைபடத்தின் முன் தான் வீழ்ந்து வணங்கியதாக உணர்ச்சி ததும்பக் குறிப்பிடுகிறார் பரமசிவர். பரமசிவர் வந்தடைந்த முக்கிய முடிவுகளை மீண்டும் ஒருமுறைத் தொகுத்துக் கொள்வோம்.
மகாபாரத்திலிருந்து இலியத் வரையிலான மகா காவியங்களின் அடித்தளமாக சில வரலாற்றுண்மைகள் உள்ளன. அவை குறிப்பிடக் கூடிய புவியியல் பகுதிகள் அடையாளம் காணக்கூடியன. அந்த வகையில் பரமசிவ அய்யர் இராமாயணத்தின் புவியியலைத் துல்லியாக வரைந்து விடுகிறார்.
இராமேஸ்வரம் தீவிற்கும் மன்னார் தீவிற்கும் இடைப்பட்ட சுமார் 30 கல் தொலைவிலுள்ள மணல் திட்டுகளின் தொடரான ஆதம் பாலம் வடமேற்குத் திசையிலிருந்து வடகிழக்குத் திசையில் அமைகிறது. ஆனால் வால்மீகியில் குறிப்பிடப்படும், வானரப் படைகளின் உதவியோடு இராமன் கட்டிய பாலம் மகேந்திரகிரிக்கும் சுவேல கிரிக்கும் இடையில் 100 யோஜனைத் தொலைவு உடையது; வடக்குத் தெற்கு திசையில் அமைந்துள்ளது. இரண்டும் வேறு வேறு. இராவணனின் ‘லங்கா’ இன்றைய சிலோன் அல்ல.
‘லங்கை’ச் சுற்றியுள்ள ‘சாகரம்’ என்பது என்ன? திரிகூடம் என்பது இந்த்ரான மலை. 1932 அடி உயரம் உடையது. அதன் முப்புறங்களிலும் கிரண் நதி தழுவி ஓடுகிறது. ‘லங்கை’ திரிகூட மலையில் உச்சியில் உள்ளது. (ஆரண்ய காண்டம் சர்கம்: 47 பாடல்: 29) ஜபல்பூர் கெஸட்டியர் கூறுவது: “பருவ மாதங்களில் ஹவேலிச்சமவெளி ஒரு மிகப்பெரிய ஏரியைப் போலத் தோற்றமளிக்கும். விந்தியமலை இந்தச் சமவெளியி லிருந்து மேலெழுந்தது போல் தெரியும். இந்த்ரான மலையின் மூன்று பகுதிகளிலும் தழுவிச்செல்லும் கிரண் நதி பனகர் சிங்கள் தீபம் மசோலி சாலையில் 15வது மைல்கல் வரை பழங்காலங்களில் ஒரு ஏரியைப் போல் பரவித் தோற்றமளித்திருப்பது சாத்தியம். இந்த மலையுச்சி அமைந்துள்ளது அட்சம் 23 டிகிரி 24’, தீர்க்கம் 79 டிகிரி 54’ல்”. ஆறுகளுக்கு இடையில் உள்ள திட்டுக்களை ‘லங்கா’ என்று அழைக்கும் மரபு இந்தியாவில் உண்டு என்பதை பல ஆதாரங்களுடன் பரமசிவ அய்யர் நிறுவுகிறார். உதாரணமாக கோதாவரி லங்கா, சோனா லங்கா, ரூப்யா லங்கா போன்றவையும், இதேபோல் தால் ஏரியில் உலார் ஏரியும் பரமசிவரால் குறிப்பிடப்படுகின்றன.
அடுத்ததாக ராட்சசர்கள் என்பது யார்? வானரர்கள் என்பது யார்? கிட்கிந்தை எங்கே இருக்கிறது? இராம இராவண யுத்தம் எதைக் குறிக்கிறது? என்கிற கேள்விகள் எழுகின்றன. கோண்டுகள் என்னும் பழங்குடியினரே ராட்சசர்கள். பார்ப்பனியமயமான விபீஷணனும் அவனது வழியில் வந்தவர்களும் ராஜகோண்டுகள் எனப்படுவர் என்றும், சாதாரண கோண்டுகள் (துர்கோண்டுகள்) இன்றும் மத்திய மாகாணங்களில் இராவண வம்சிகள் என்று அழைக்கப்படுவதாகவும் பரமசிவ அய்யர் குறிப்பிடுகிறார். திரிகூட மலை ஒரு காடு நிறைந்த பகுதி. “தாண்டவ வனத்தின் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிவோம் (ஆரண்ய காண்டம், சர்கம்: 17, பாடல்: 28)” என சூர்ப்பனகை இராமனை அழைப்பது குறிப்பிடத்தக்கது.
வன மாமிசங்களில் மிகவும் வேட்கையுடையவர்களாகவும், அழுகிய மாமிசமானாலும் கூட விரும்பி உண்ணுபவர்களாகவும் இவர்களைப் பற்றி மாண்டியா கெஸட்டியர் குறிப்பிடுகிறது. நிமரிலிருந்து ஹசரிபாக் வரை பரவியுள்ள சாத்பூரா, சோட்டா நாக்பூர் பீடபூமியின் காடுகள் அடர்ந்த பகுதியில் கோண்டு களோடு வசிக்கக் கூடியவர்கள் கோர்க்கர்கள் (குறவர்கள்). இவர்களைப் பற்றி வழிப்பறி செய்யும் குற்றப்பரம்பரையினர் என்ற வகையில் கெஸட்டியர்கள் குறிப்பிடுகின்றன. கோண்டுகள் ‘கோண்டி’ எனப்படும் திராவிட மொழியைப் பேசுபவர்கள், கோர்க்கர்கள் ‘முண்டா’ மொழி பேசுவோர். இவர்களே வால்மீகி குறிப்பிடும் வானரர்கள் என்பது பரமசிவ அய்யரின் முடிவு.
வால்மீகி இவர்களை எங்கும் ஆடையுடுத்தாத அம்மணர்களாகக் குறிப்பிடவில்லை. சுக்ரீவன் தன்னைப்பற்றிச் சொல்லும்போது கூட தனது சகோதரன் வாலி எல்லா மக்களையும் அமைச்சர் களையும் அழைத்துத் தன்னைப்பற்றி ஒரு விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்து ஒற்றைத்துணியுடன் நாடு கடத்தியதாக குறிப்பிடுவான். (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்: 10, பாடல்: 26). சுக்ரீவனும், வாலியும் போரிடுவதற்கு முன் தங்கள் இடைக்கச்சுகளை இறுக்கிக் கட்டிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது (கிஷ்கிந்தா காண்டம், சர்கம்: 6, பாடல்: 26, 27). வளமான ஜனஸ்தானத்தைக் கோண்டுகளிடமிருந்து ஆரியர்கள் கைப்பற்றியதற்கான போரே இராமஇராவண யுத்தம்.
விரிவான வரைபடங்கள், இராமாயணத்தில் காணப்படும் புவியியற் பகுதிகளைக் குறிப்பிடும் சர்வே வரைபடங்களின் எண், அட்ச, தீர்க்கக் குறிகள் ஆகியவற்றைக் காட்டும் அட்டவணைகள் ஆகியவை நூலில் பிண்ணினைப்பாகத் தரப்பட்டுள்ளன. நூலின் இரண்டாம் பாகத்தில் இராமன் 11000 ஆண்டுகள் வாழ்ந்தது உண்மையா? இராமன் நாடு கடத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன? லட்சுமணன், பரதன் இவர்களில் யார் மூத்தவர்? வால்மீகியின் மானுடப் பின்புலம், பெண்கள் குறித்த அவரது பார்வை, சீதை லட்சுமணனை அவமானப்படுத்தியது உண்மையா? காயத்ரி இராமாயணம் என்பது என்ன? ஆகிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு தமது விளக்கங்களையும் ஆய்வு முடிவு களையும் முன் வைக்கிறார் பரமசிவர்.
வால்மீகியின் ‘லங்கை’ வட இந்தியாவில்தான் உள்ளது என்கிற உண்மை புதிதல்ல. மார்க்சிய அறிஞர்களும் வேறு பல வரலாற்று ஆசிரியர்களும், இதனை நீண்ட காலமாகச் சொல்லி வருகின்றனர். கங்கைச் சமவெளியின் அரசு உருவாக்கத்திற்கும் இனக்குழு மக்களுக்குமிடையேயான முரணே இராமாயண வரலாறு என்பதும் முன்பே பேசப்பட்டுள்ளன (பார்க்க: அ.மா. வால்மீகி ராமாயணம் சில குறிப்புகள், விலகி நடந்த வெளிகள் கருப்புப்பிரதிகள்).
பரமசிவ அய்யர் அதிர்ச்சியடையக்கூடிய புதிய உண்மை எதனையும் சொல்லிவிட்டார் என கூற முடியாது. எனினும் அவர் எழுதிய காலம், சூழல், இதற்கென அவர் எடுத்துக் கொண்ட பிரயாசை ஆகியன மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. விரிவான ஆய்வு ஆதாரங்களுடன் தனது முடிவுகளை நிறுவும் பாங்கு குறிப்பிடத்தக்கது. பிறப்பால் பார்ப்பனர் ஆயினும் அவரது நேர்மையும், அறிந்த உண்மைகளை அது தமது கருத்தியலுக்கு எதிரானதாக இருந்த போதிலும், சொல்லத் துணிவதும் நாம் வணங்கத்தக்க பண்புகளாகின்றன. நேர்மை, அறம், அன்பு ஆகிய வற்றைக் காட்டிலும் வேறென்ன பண்பு மானுடமாக இருக்க முடியும்?
பரமசிவ அய்யர் எந்தச் சூழ்நிலையில் இதை எழுத நேர்ந்தார் என்பது நம் அனைவரது மனச்சாட்சியையும் உரசிப் பார்க்கக் கூடிய ஒரு நிகழ்வாக அமைகிறது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட வரலாற்று திரிபுகள் ‘உண்மை’களாகவே இறுகி நாமறியாமலேயே நமது ஓர்மையின் ஓரங்கமாகிவிட்ட நிலையில் அதன் வெளிப்பாடுகள், சமகாலத்தில் மானிடர்களுக்கிடையே வெறுப்பையும், பகையையும் ஏற்படுத்திவிடலாகாது என்கிற பதைபதைப்பு... ஓ! எத்தனை உன்னதமானது.
மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனச் சொல்வது ரொம்பவும் ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கிய ஒன்று. அது ஏதோ ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பதையோ, அரசியல் பேசுவதையோ குறிப்பிடுகிற விஷயம் அல்ல. ஜியார்ஜியோ அகம்பன் போன்றவர்கள் குறிப்பிடுவது போல மனிதன் ஒரு ‘‘Bios Politikon’. அரசியலைத் தாண்டி அவனுக்கு உயிர் வாழ்க்கை கிடையாது. அரசியல் அவனுக்கு மறுக்கப் படும்போது அவன் வெற்று வாழ்க்கைக்கு (Bare Life), அதாவது உயிர் மட்டுமே உள்ள ஒரு புழுவைப் போல ஆகிவிடுகிறான். சக மனிதர்கள், சமூகம் குறித்த எந்தக் கரிசனமும் இல்லாத முண்டங்களாக வாழ்வது குறித்த மன அதிர்வுகளை பரமசிவ அய்யரின் கரிசனம் நம்மில் ஏற்படுத்திவிடுகிறது என்பது மிகையல்ல. அரசியல் பேசுவது தேவையற்றது என்பதை ஒரு கொள்கையாக அறிவிப்பதன் மூலமும், மவுனமாக இருப்பதன் மூலமும் இந்த முண்டங்கள் வெறுப்பு அரசியலுக்கும் பாசிச உருவாக்கத்திற்கும் அளிக்கும் பங்களிப்பை நாம் கவனிக்காதிருக்க கூடாது.
நன்றி: சஞ்சாரம் இதழ்

கோட்சேக்கள் இன்றும்...............

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும், புதிய பஸ் நிலையத்திலும் ஜனவரி 24ஆம் தேதி இரவு இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. குண்டு வெடித்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர். குண்டு வெடித்த அலுவலகத்திற்கு அருகில் முஸ்லீம் மக்கள் அணியும் இரு தொப்பிகள் கிடந்ததாக தென்காசியில், பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
சங்பரிவார அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், குண்டு வீசிய தீவிரவாதிகளான ரவிபாண்டியன், கே.டி.சி.குமார், நாராயணசர்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளி வந்தது. கைதான குற்றவாளிகள் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும், கலவரத்தை தூண்டுவதற்காகத்தான் இப்படி செய்துள்ளனர்.
ரவிபாண்டியன், சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வருகிறார். கடந்த ஜீலை மாதமே குண்டு தயாரிப்பது குறித்து முடிவு செய்து அதற்கான பொருள்களை வாங்கி சேகரித்து, வெடிகுண்டு தயாரித்துள்ளனர். அதை சோதனை செய்வதற்காக, குற்றாலம் மலைப் பகுதியில், சோதனை நடத்தியிருக்கிறார்கள். தலா இரண்டு குண்டுகள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திலும், புதிய பஸ் நிலையத்தின் அருகிலும், வெடிக்கச் செய்தனர். வெடிக்கப்பட்ட குண்டுகள் ‘பெப்’ ரகத்தை சேர்ந்தவை. இதனை பேட்டரி மூலமாகவும், டைம் செட் செய்து வெடிக்கும் வகையிலும், தயாரித்துள்ளனர். 20முதல் 30வினாடிகள் வரை டைம் செட் செய்து வெடி குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும், விசாரணையில் தெரியவந்தது.
குண்டு வெடிப்பில் தொடர்புடைய இந்து முன்னணியை சேர்ந்த ரவி பாண்டியன், கே.டி.சி. குமார் செங்கோட்டையைச் சேர்ந்த நாராயணசர்மா ஆகியோரின் நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்தவுடன் ஆர்.எஸ்.எஸ். பொய் பிரச்சாரங்களை நம்பாமல், மக்கள் அமைதி காத்தது பாராட்டத்தக்கது.
மதக் கலவரத்தை தூண்டுவதற்காக சொந்த ஆபிசிலேயே, அவர்களே குண்டு வைத்து அதுவும் மக்கள் நம்புவதற்கு முஸ்லீம் மக்கள் அணியும், இரு தொப்பிகளையும் போட்டுவிட்டு பொய் பிரச்சாரம் செய்தவர்கள் எதையும் செய்வார்கள். ஏற்கனவே இப்படிப்பட்ட மோசடிகளை செய்து இருப்பார்களோ என சந்தேகம், நமக்குள் எழுகிறது. மத உணர்வை தூண்டிவிட்டு மக்களிடம் மத போதையை திணித்து விடுகிற கொலைகாரக் கூட்டத்தை தனிமைப்படுத்த வேண்டும்.
மதம் அபினை போன்றது என்றார் மார்க்ஸ், மக்களிடம் வெகு சீக்கிரத்தில், கண் மூடி கண் திறப்பதற்குள் மத போதையை உண்டாக்கி விடுகிறார்கள். கொலைகார கூட்டம், அந்த போதைக்கு அடிமையாகி விடாதீர்கள் என்றார் மார்க்ஸ். உண்மையை விட உயர்ந்த கடவுள் கிடையாது என்றார் தேசப் பிதா மகாத்மா காந்தி. அவரையே சுட்டுக் கொன்றான் மத தீவிரவாதி நாது ராம் கோட்சே, தனது கையில், இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மதக் கலவரத்தைத் தூண்ட மகாத்மாவை கொன்றான். இந்த இரத்த வெறியர்களுக்கு அன்று முதல், இன்று வரை அடங்கவில்லை இரத்த வெறி.
ஒரு கடவுளை மற்றொரு கடவுளுடன் சண்டையிடச் செய்வது இந்த சொர்க்கத்தையே நரகமாக மாற்றும் சக்திகளை ஒழித்து, மனிதர்களை ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் நோக்கி அழைத்துப்போகும் முயற்சிகள் அனைத்துமே எனது மதங்கள் என்றார் மாவீரன் பகத்சிங்.
இருப்பதை இடிப்பதும், இடித்ததை காப்பதும், இல்லாததை இருக்கிறது என்பதும், வேலை வாய்ப்பை தடுப்பதும், மத வெறியை பாய்ச்சுவதும், மதக் கலவரத்தை தூண்டுவதும், இந்த மதவெறி கூட்டத்தின் மிகச் சிறந்த பணி.
இந்த நாட்டில் வேலை வாய்ப்பில்லாமலும், விலைவாசி விண்ணை முட்டி பறக்கிறதால், ஏழைகள் நடுத்தர மக்கள் என எல்லோரும், அல்லோலப்படும் நேரத்தில், மக்களுடைய வறுமையைப் போக்க இடதுசாரிகளும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், மக்களுக்காகப் போராடி வருகிறது. மக்களை எதையுமே சிந்திக்க விடாமல் மதம் என்கிற முகமூடிக்குள் நுழைந்து மக்களை கூறுபோடும். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இது மாதிரி வேறெங்கும் நடைபெறாமல் தடுக்க காவல்துறை, மதவெறி அமைப்புகளை கண்காணிக்க வேண்டும்.

நன்றி :கே.பாண்டியராஜன்