Saturday, March 1, 2008

அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கின்றன - FBI

வாஷிங்டன்: அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI, தாக்கல் செய்த அறிக்கை ஒன்று "அமெரிக்காவில் உறவினர்களின் மூலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதாக" அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டு தோறும் 30 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான பெண்கள் அவர்களின் முன்னாள் அல்லது இந்நாள் கணவர்களினால் கொடுமைகள் அனுபவித்து வருகின்றனர்.
வாகன நேர்ச்சி, வல்லுறவு / மானபங்கம் போன்றவற்றை விட பெண்களுக்கு அதிகமான உடல்ரீதியிலான காயங்கள், அவர்களின் வீடுகளிலேயே நடத்தப்படும் கொடுமைகளினால் ஏற்படுகின்றன.

தங்களது கணவர்கள் அல்லது காதலர்கள்/நண்பர்கள் மூலம் கொடுமைபடுத்தப்படும் பெண்கள் வருடக்கணக்கில் அதனை வெளியே தெரிவிக்காமல் மறைத்து வைப்பதாகவும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. FBI சமர்ப்பித்த அறிக்கைபடி, அமெரிக்காவில் 1991 அம் வருடம் கணவர்களாலோ ஆண் நண்பர்கள்/காதலர்களாலோ கொலை செய்யப்பட்டப் பெண்களில் 90 சதவீத பெண்களும் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன் பல வருடங்களாக நிரந்தரமாக அவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு வந்துள்ளனர் எனத் தெரிவிக்கின்றது.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் ஒரு கற்பழிப்பு நடப்பதாகவும் FBI அறிக்கை கூறுகின்றது. ஆனால், நடக்கும் கற்பழிப்புகளில் பெரும்பான்மையானவை பதிவு செய்யப்படாததால் இக்கணக்கீடு இதனை விட இரு மடங்காக இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும் கூறுகின்றது.தேசிய குற்றவியல் கணக்கீடின்(National Crime Survey) படி 1990 ஆம் ஆண்டு கணக்குபடி கற்பழிப்புகளில் 58 விழுக்காடு அவர்களின் கணவர்கள், நண்பர்கள், காதலர்கள் தொடங்கிய அவர்களின் நெருங்கிய உறவினர்களாலேயே நடத்தப்பட்டுள்ளன. அவர்களின் சொந்த வீட்டிலேயே 35 விழுக்காடு கற்பழிப்புகள் நடக்கின்றன எனவும் அறிக்கை கூறுகின்றது.

ஜனநாயகத்தையும் பெண்ணுரிமையையும் சுதந்திரத்தையும் குறித்து உலகம் முழுக்கப் பாடம் நடத்தித் திரியும் அமெரிக்காவின் உண்மையான உள்நாட்டு நிலவரம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்பது வருந்தத்தக்க உண்மையாகும்.

நன்றி : சத்திய மார்க்கம்

No comments: