Saturday, March 1, 2008

ஆர்.எஸ்.எஸ்.,குண்டு வெடிப்பு

ஆர்.எஸ்.எஸ்.,குண்டு வெடிப்பு : பா.ஜ.,குழு சிறையில் விசாரணை

திருநெல்வேலி; தென்காசி ஆர்.எஸ்.எஸ்.,அலுவலகம் குண்டுவெடிப்பு தொடர்பாக பா.ஜ.,குழுவினர் பாளை.,மத்திய சிறையில் விசாரணை நடத்தினர். தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்.,அலுவலகத்தில் ஜனவரி 24ல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கொலை செய்யப்பட்ட குமார்பாண்டியனின் தம்பி ரவி, அவரது நண்பர்கள் குமார், முருகன், நாராயணசர்மா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது பாளை.,மத்திய சிறையில் உள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.,குண்டு வெடிப்பில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் வேண்டுமென்றே இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்துள்ளனர் எனகூறி கைதானவர்களிடம் உண்மையறிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் கிருஷ்ணமாச்சாரி மற்றும் வைத்தியலிங்கம், ரகுமனோகர், குற்றாலநாதன், ஸ்ரீதரமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள இந்து முன்னணியினரை சந்திக்க சென்றனர். ஆனால் சிறை அதிகாரிகள் அவர்களை ஒட்டுமொத்தமாக சந்திக்க முடியாதெனவும் ஒரு பார்வையாளர் ஒரு நபரைத்தான் சந்திக்க முடியும் எனவும் கூறினர். இதனால் பா.ஜ.,குழுவினர் சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சந்தித்து பேசிவிட்டு வெளியேறினர். மாலையில் தென்காசியில் ரவிபாண்டியனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த குழுவின் அறிக்கையை கொண்டு பா.ஜ.,வினர் பார்லி.,யில் பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

No comments: