Monday, February 25, 2008

சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற போராட்டம்: முதல்வர் அறிவிக்க த.மு.மு.க., கோரிக்கை

சேலம்: ""சேது சமுத்திர திட்டத்தை காலதாமதம் இல்லாமல் நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழக முதல்வர் கருணாநிதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, போராட்டத்தை அறிவிக்க வேண்டும்,'' என தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லாஹீ கூறினார்.

சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக மக்களின் நீண்ட நாள் கனவான சேது சமுத்திர திட்டத்துக்கு ஜ.மு.கூட்டணி கட்சி தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். அடிப்படை ஆதாரமற்ற காரணத்தை கூறி திட்டத்தை நிறைவேற்றாமல் தடுப்பது நியாயமற்றது. மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.திட்டம் நிறைவேறினால் புதுக்கோட்டை, துõத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் மேம்பாடு அடையும். திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்ற உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும்.காங்., தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் அகில இந்திய அளவில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை.சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்த நீதிபதி தலைமையிலான குழுவினர், தனது அறிக்கையை கடந்த மே 22ம் தேதி பிரதமரிடம் சமர்ப்பித்தது. இதுவரை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அந்த பரிந்துரையின் பேரில், முஸ்லிம்கள் உள்ளிட்ட மதசிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவில் பயங்கரவாத செயல் நடந்தால் முஸ்லிம்கள் மீது பழிபோடும் போக்கு நிலவுகிறது. உதாரணமாக, தென்காசியில் ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டு வெடிப்பில் முஸ்லிம்கள் மீது பார்வை திருப்பப்பட்டது.கைது செய்த எட்டு பேரில் ஹிந்து முன்னணியை சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளார். சரியான முறையில் புலன் விசாரணை நடத்திய திருநெல்வேலி போலீஸாரை பாராட்டுகிறோம்.மதவழி கல்வி நிறுவன ஆசிரியர் பணி நியமன நடைமுறையை மாற்ற நினைக்கும் உயர்கல்வி துறை அதிகாரிகள் விஷயத்தில் முதல்வர் தலையிட வேண்டும்.

சேது சமுத்திர திட்டத்தை காலதாமதம் இல்லாமல் நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மிகப் பெரிய போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Thanks:Dinamalar

No comments: