Monday, February 25, 2008

பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள வேண்டும்அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள்



புதுச்சேரி, பிப்.26-



பெண்கள் தற்காப்பு கலையை கற்று கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பரிசளிப்பு விழா



புதுச்சேரி தேக்வோண்டோ சங்கத்தின் மாநில அளவிலான போட்டிகள் கடந்த 2 நாட்கள் உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இதில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியை சேர்ந்த 2500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.



போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தேக்வோண்டோ சங்க தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


தற்காப்பு



நானும் ஒரு கராத்தே வீரன் தான். கறுப்பு பெல்ட் வழங்கும் அளவிற்கு பயிற்சி பெற்று இருந்தேன். தேக்வோண்டோ வெளிநாட்டில் இருந்து வந்த கலையாக எல்லோரும் நினைக்கிறார்கள். இந்த கலையில் பிறப்பிடம் இந்தியா தான். இது வெளிநாடுகளுக்கு சென்று மறுவி தேக் வோண்டோவாக மாறி வந்துள்ளது.



தற்காப்பு கலை ஆண்களுக்கு மட்டுமல்ல. எனவே தற்காப்பு கலைகளை பெண்களும் கற்று கொள்ள வேண்டும். தற்காப்பு கலையான தேக்வோண்டோயை பள்ளிகளில் அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றி அளிக்க அரசு தயாராக உள்ளது.


அனுமதி



எனவே முறை படியாக எங்களை வந்து அணுகினால் அதற்கு அனுமதி வழங்கப்படும். இது போன்ற கலைகள் புதுச்சேரியில் வளரவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் கூறினார்.


கலந்து கொண்டவர்கள்



விழாவில் அகில இந்திய தேக்வோண்டோ சங்க துணை செயலாளர் செல்வமணி, புதுச்சேரி தேக்வோண்டோ சங்க பொருளாளர் சிட்டிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தேக்வோண்டோ சங்க அமைப்பாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.




Thanks : Dinamalar

No comments: