"ஐரோப்பிய முஸ்லிம் சமூகம் இஸ்லாம் கூறும் விதத்தில் ஒரு நவீன உலகை உருவாக்கும்" எனத் தான் நம்புவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஷெய்க் ராஷித் கனூஷி கூறினார். கேரளாவிலுள்ள சாந்தபுரம் அல்ஜாமிஆ அல்-இஸ்லாமியா கல்லூரியில் நடந்தப் பட்டமளிப்பு விழாவிற்குச் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக் கொண்ட ராஷித், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆக்ரமிப்புகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய முறையினை இஸ்லாமிய அடிப்படையில் விவரித்தார்.
சமகால இஸ்லாமிய சிந்தனையாளர், அரசியல் விமர்சகர், அறிஞர் எனப் பல்வேறு நிலைகளில் பரவலாக அறியப்பட்டிருந்த டாக்டர். ராஷித் கனூஷி, தனது சொந்த நாடான துனூசியாவில் அநியாயங்களுக்கு எதிராகப் போராட அந்நஹ்தா என்றப் பெயரில் ஒரு போராட்டக் குழுவை உருவாக்கியக் காரணத்தால் அங்கு வசிக்க இயலாமல் அரசியல் அகதியாக பிரிட்டன் வந்து சேர்ந்தவராவார்.
1942 ஆம் வருடம் ஜூன் 19 நாள் துனூசியாவிலுள்ள பரபீஸ் என்ற மாவட்டத்தில் ராஷித் கனூஷி பிறந்தார். குடும்பத்தில் இளையவரான கனூஷியின் தந்தை ஷெய்க் முஹம்மது அக்கிராமத்தின் முஃப்தியும் இமாமுமாக இருந்தார். கனூஷி, 13 ஆம் வயதில் குடும்ப வருமான சிக்கலின் காரணத்தால் தனது துவக்கப் பள்ளி படிப்பை நிறுத்த வேண்டியச் சூழல் ஏற்பட்டப் பொழுதும் அவரின் பெரிய சகோதரன் சட்டத்துறையில் பட்டம் பெற்றுத் திரும்பியப் பிறகு தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு ஸைத்துல் பல்கலை கழகத்திலும் பின்னர் கெய்ரோ பல்கலைகழகத்திலும் தனது மேற்படிப்பைத் தொடர்ந்து விவசாயத்துறையில் பட்டம் பெற்றார். 1964-68 காலங்களில் டமாஸ்கஸ் பல்கலைகழகத்தில் இதே துறையில் பரிசீலனை எடுத்துக் கொண்டார்.
படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பிரெஞ்சு ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய தேசிய விடுதலை இயக்கத்தின் (National Liberation Movement) உறுப்பினரான அவரின் மாமனார் பஷீர் மற்றும் அப்போராட்ட இயக்கத்தின் முன்னணி தலைவர்களின் ஆக்ரமிப்புக்கு எதிரான போராட்டங்களும் அவரை ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டகளம் காணத் தூண்டின.
ஆக்ரமிப்பு பிரெஞ்சுப்படைகள், ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த இயக்கத்தின் பிரதேச குழுவான வல்லாஜா படையில் உள்ள இருவரை மிகக் கொடூரமாகக் கொன்று வீதிகளில் இழுத்துச் சென்று இறந்த உடல்களை அவமானப்படுத்தியச் சம்பவமும் சியோனிஸ தீவிரவாதிகள் தேர் யாசினில் நடத்திய இனப்படுகொலையும் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த கனூஷியின் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி ஆக்ரமிப்புகளுக்கு எதிராகப் போராட்ட களத்தைத் தேர்வு செய்ய அவரை தூண்டியச் சம்பவங்களாகும்.
"இஸ்லாத்தின் மகத்துவத்தைக் களங்கப்படுத்த மேற்கத்தியர் முஸ்லிம்களிடையே பிரிவினைகளை வளர்த்து விடுகின்றனர். மேற்குலகின் இச்சூழ்ச்சியினை அறிந்துக் கொள்ளாமல் முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானோர் அதற்குப் பலியாகி விடுன்றனர். இவர்களின் இந்தப் பிரிவினையைத் தூண்டும் சதிகளுக்கு எதிராகப் போராடும் குழுக்கள் சமூகத்தில் உருவாக வேண்டும். மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு நவீன, அறிவியல் தொழில் நுட்பங்களைக் குறித்த அறிவினைப் பெற்றுக் கொள்ளூம் ஒரு புது உலகினையே இஸ்லாம் எதிர்பார்க்கின்றது" என சாந்தபுரத்தில் நடந்தப் பட்டமளிப்பு விழாவில் பேசும் பொழுது அவர் குறிப்பிட்டார்.
"மேற்கத்தியப் பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்கும் இஸ்லாமிய தலைமைகள் அத்தகையச் செயல்பாடுகளிலிருந்துப் பின்வாங்கவேண்டும். நவீன உலகில் இஸ்லாம் புத்துணர்ச்சியுடன் வளர்ந்து வருவதை மேற்குலகினர் விரும்பவில்லை. எனவே அதனைத் தகர்க்கும் நோக்கத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடையே ஒற்றுமையை இல்லாமலாக்க அனைத்து விதமான தந்திரங்களையும் கையாண்டு வருகின்றனர். இதன் ஒரு பாகமாக ஜனநாயகத்தின் ஊடாக இஸ்லாம் கலந்து வருவதை அவர்கள் எதிர்த்து வருகின்றனர்."
"அரசியலைக் குறித்த ஆழ்ந்த அறிவையும் சிந்தையையும் முஸ்லிம் உலகத்திற்கு உருவாக்கியே தீர வேண்டும். அதன்வழியாக இஸ்லாத்தின் வளர்ச்சியை உறுதிபடுத்த இயலும்" என அவர் உறுதிபடக் கூறினார். "ஆக்ரமிப்புகளையும் ஆக்ரமிப்பாளர்களையும் எதிர்த்துப் போராட வைக்கும் இஸ்லாம் கூறும் ஜிஹாதை மேற்குலகம் மக்களிடையே தவறாகச் சித்தரிக்க முயல்கின்றது" எனவும் கனூஷி குற்றம் சாட்டினார். "மக்கள் சுதந்திரக்காற்றை அனுபவிக்கும் இடங்களில் ஜிஹாதின் அவசியம் இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி : சத்திய மார்க்கம்
Saturday, March 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment