Wednesday, February 27, 2008

ஹஜ் பயணிகளுக்கு கொடுப்பது போலமற்ற மத பயணிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும்சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி, பிப்.28-
ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படுவது போன்று, மற்ற மத பயணிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
இது குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் அசோக் பாண்டே என்பவர், பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஹஜ் பயணிகள்

முஸ்லிம்கள், மெக்காவுக்கு புனித பயணமாக செல்கிறார்கள். அவர்களின் இந்த பயணத்துக்கு மத்திய அரசு மானியம் கொடுக்கிறது. அதுபோல, இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர், புனித பயணமாக இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம், நேபாளம், சீனா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கும் மானியம் வழங்க வேண்டும்.
இலங்கை மன்னர் ராவணனால், சீதா தேவி சிறை வைக்கப்பட்டு இருந்த "அசோக வனம்'' இன்னும் அந்த நாட்டில் இருக்கிறது. இதை இந்தியாவில் உள்ள இந்துக்கள் பார்க்க விரும்புகிறார்கள். எனவே, அசோக வனத்தை பார்வையிட, பாஸ்போர்ட், விசா இல்லாமல், இலங்கைக்கு பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

தர்ம வீடுகள்

இந்த புனித பயணத்துக்கு, முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவது போன்று, மானியத்தொகை வழங்க வேண்டும். இது குறித்து நான் மத்திய அரசு அதிகாரிகளை அணுகி மனு கொடுத்து பார்த்து விட்டேன். இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை. எனவே இதில் கோர்ட்டு தலையிட்டு. மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்தியாவில், பிரபல இந்து ஆலயங்கள் இருக்கும் இடங்களில் அரசு சார்பில் "தர்ம வீடுகள்'' கட்டப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வழக்கில் கூறப்பட்டு இருக்கிறது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.

Thanks : Dailythanthi

No comments: