நாகர்கோவில்: பாலியல் தொல்லை செய்ததால் அடித்து கொலை செய்தோம் என இரணியல் அருகே இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதான கணவன் மனைவி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். வில்லுகுறி திருவிடைக்கோட்டை சேர்ந்தவர் மணி என்ற தாணுபிள்ளை (34). இவர் கடந்த 22ம் தேதி இரணியலுக்கும் ஆளூருக்கும் இடையேயுள்ள ஆளில்லாத ரயில்வே கேட் அருகில் ரயில் தண்டவாளத்தில் மூளை சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா தலைமையில் போலீசார் சம்பவ இடம் சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ரயில் மோதி இறந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் தாணுபிள்ளை தற்கொலை செய்யவில்லை. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என இந்து முன்னணியினரும், பா.ஜ.வினரும் கூறியதையடுத்து இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டி.எஸ்.பி.சந்திரபால் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தாணுபிள்ளையின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதைப்போல் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. பேனா மனோகரன், திருச்சி ரயில்வே குற்ற ஆவண பிரிவு டி.எஸ்.பி. பட்டாபிராமன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் எட்வின் தம்பி, திருநெல்வேலி டி.எஸ்.பி. முகைதீன்ஷா ஆகியோர் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ், ராஜசுலோச்சனா, ஏட்டுகள் ஜோசப், ஹரிகுமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து தாணுபிள்ளையின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
பிரேத பரிசோதனை வந்தால்தான் அவர் கொலை எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்ற நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை ரயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டது. அதில் தாணுபிள்ளை தலையில் காயம் ஏற்பட்டதால்தான் இறந்திருக்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது. தலையில் ரயில் மோதியதால் காயம் ஏற்பட்டதா, அல்லது கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் ஏற்பட்டதா என்பதை கண்டறிய அவரது உடல் பாகம் கெமிக்கல் டெஸ்டிற்காக பாளையங்கோட்டையிலுள்ள தடய அறிவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ரயில்வே போலீஸ் தனிப்படையினர் அந்த பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் பூலன்கோடு ரயில் தண்டவாளம் அருகே குடியிருக்கும் முருகன் (33), அவரது மனைவி பத்மா (32) ஆகியோர் ஒரு கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று தாங்கள் தாணுபிள்ளையை அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதாகவும், தங்களுக்கு சரியான வழியை காட்டும்படியும் கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீஸ் தனிப்படையினர் சென்று இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தாணுபிள்ளையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பத்மா போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: முருகன் கல்லுடைக்கும் தொழில் செய்து வருகிறார்.
நான் செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறேன். எங்களுக்கு முகேஷ் (11), சுபாஷ் (10), சஜித் (7) என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். எனது திருமணத்திற்கு முன்னர் தாணுபிள்ளைக்கும் எனக்கும் பழக்கம் இருந்தது. அப்போது என்னை திருமணம் செய்ய கூறியபோது வரதட்சணை கிடைக்காது என்பதால் என்னை திருணம் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில் முருகனோடு திருமணம் செய்து மூன்று குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். கடந்த சில மாதங்களாக எனது கணவர் வேலைக்கு சென்ற பின்னர் தாணுபிள்ளை எங்கள் வீட்டிற்கு வந்து என்னை பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்து வந்தார். கடந்த 22ம் தேதி மாலையில் நானும் எனது கணவரும் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது தாணுபிள்ளை வந்து எனது கணவர் முன்னிலையில் என்னை உடலுறவுக்கு அழைத்தார். இதில் ஆத்திரமடைந்த எனது கணவர் வீட்டின் கூரையில் வைத்திருந்த உருட்டு கட்டையால் தாணுபிள்ளையின் தலையில் அடித்தார். கீழே விழுந்த அவர் எழுந்த போது அங்கிருந்த மிளகாய் தூளை தண்ணீரில் கலக்கி அவர் முகத்தில் நான் ஊற்றினேன். இந்த சந்தர்ப்பத்தில் அவரது தலையில் எனது கணவர் மீண்டும் ஒரு அடி அடித்தார். இதில் கீழே விழுந்த அவர் இறந்து விட்டார் என நினைத்து ஒரு சாக்கில் போட்டு தூக்கி வந்து ரயில் தண்டவாளத்தில் போட்டோம்.
அதன்பின்னர் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த ரத்த கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, தாணுபிள்ளையின் செல்போன் சிம்கார்டை தீயில் போட்டு எரித்தோம். அதன்பின்னர் அவர் வந்த பைக்கை பூலன்கோட்டிலுள்ள ஒரு குளத்திற்குள் போட்டோம், அவரது செல்போன் மற்றும் சில உடைகளை சாத்தான்கோயில் குளத்தில் வீசினோம். அவரை அடிக்க பயன்படுத்திய உருட்டு கட்டையை வீட்டின் அருகிலுள்ள ரயில்வே டிராக் நீரோடையில் மண்ணுக்குள் புதைத்து வைத்தோம். இதனால் இது யாருக்கும் தெரியாது என நினைத்திருந்த போது போலீசார் சல்லடை போட்டு தேடுவதை அறிந்து என்ன செய்வது என தெரியாமல் கிராம நிர்வாக அலுவலரிடம் உண்மையை கூறினோம். என பத்மா கூறியுள்ளார். அவர் கூறிய தகவல்படி போலீசார் சம்பவ இடம் சென்று பைக்கையும், உருட்டு கட்டையையும், துணிகளையும் மீட்டனர். இதுவரை தற்கொலை என நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை என அறியப்பட்டதால் இந்த வழக்கு இரணியல் போலீசுக்கு மாற்றப்படுகிறது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் எட்வின்தம்பி கூறும்போது, முருகனும், பத்மாவும் தாணுபிள்ளையை அடித்ததல் அவர் மயங்கி விழுந்த பின்னர் இருவரும் சேர்ந்து தூக்கி ரயில்வே தண்டவாளத்தில் போட்டுள்ளனர். அதிகாலை 2 மணியளவில் சென்ற ரயில் தாணுபிள்ளையின் உடலில் மோதியதும் அவரது உடலில் இருந்து ரத்தம் பீரிட்டு பாய்ந்துள்ளது. மறுநாள் ரயில் தண்டவாளத்தில் உடல் கிடப்பதாக கிடைத்த தகவல் படி சென்றபோது தண்டவாத்தில் அதிகளவு ரத்தம் கிடந்ததால் அவர் ரயியிலில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்து தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது என கூறினார். ஆதரவற்று நிற்கும் குழந்தைகள்: தாணுபிள்ளையை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள முருகன் மற்றும் பத்மா தம்பதியினருக்கு முகேஷ், சுபாஷ், சஜித் என மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று பேரும் அந்த பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். இதுவரை பெற்றோரின் ஆதரவில் இருந்த மூன்று குழந்தைகளும் பெற்றோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் தற்போது ஆதரவற்ற நிலையில் விடப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ அல்லது ஏதாவது அமைப்புகளோ முன்வரவேண்டும்.
Thanks:Dinamalar
Wednesday, February 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment