Friday, February 15, 2008

நாடு வெளங்கிடும் .................!



கைதிகளுக்கு "காண்டம்' வழங்க பரிந்துரை



கோவை: தமிழக சிறைகளில் கைதிகளுக்கு "காண்டம்' வழங்கலாம் என, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் யோசனை தெரிவித்துள்ளது. இதை சிறை உயர் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.தமிழக போலீசில் பலருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதிகாரிகளுக்கு முதற்கட்டமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அடுத்து சப்இன்ஸ்பெக்டர், ஏட்டு, காவலர் என முகாம் நடத்தப்படுகிறது.இந்த முகாம் முடிந்ததும், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கோவை, சேலம், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட ஒன்பது இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. இரண்டு பெண்கள் சிறை, 114 கிளைச்சிறை, ஆறு சிறப்பு கிளைச் சிறைகள், ஒரு திறந்தவெளிச்சிறை உள்ளது. தண்டனை பெற்றோர், விசாரணை சிறைவாசிகள் உட்பட 20 ஆயிரம் பேர் இவற்றில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை. குடும்பத்தைப் பிரிந்து ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கும் கைதிகள் பலர், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு இவர்களுக்கு இல்லை. எய்ட்ஸ் பாதித்தவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவரும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


இதைத் தவிர்க்க, கைதிகளுக்கு எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளனர். தேவை அடிப்படையில் கைதிகளுக்கு, "காண்டம்' வழங்குவது குறித்தும், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது. சிறைத்துறை உயர் அதிகாரிகள் இது பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர். திட்டம் குறித்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியநாராயணன் கூறியதாவது:கைதிகளுக்கு காண்டம் வழங்குவதால், ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதாக அமையாது. எங்களது நோக்கம் சிறைக்குள் எய்ட்ஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது தான். அரசு அதிகாரிகளும் மீடியாக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இத்திட்டம் நிறைவேறும்.


கைதிகளுக்கு காண்டம் வழங்குவது குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் திட்டம் நிறைவேறினால் சமூகத்துக்கு நல்லது. கைதிகளிடையே மட்டும் விழிப்புணர்வு ஏற்பட்டால் போதாது; சிறைவார்டர்கள், அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு தேவை. அவர்களுக்கான சிறப்பு முகாம்களை சிறை வாரியாக நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு சத்திய நாராயணன் தெரிவித்தார்.


நன்றி : தினமலர்

No comments: