Friday, February 15, 2008

தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுமா?




தூத்துக்குடி: தமிழர்களின் 150 ஆண்டு கால கனவான, சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் தென் மாவட்ட மக்களிடம் எழுந்துள்ளது. துõத்துக்குடியிலிருந்து சென்னை உள்ளிட்ட பிற துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றாமல் நமது கடல் எல்லையிலேயே செல்லவும், நமது கடற்படை கப்பல்கள் இலங்கையை சுற்றாமல் தவிர்க்க சேது சமுத்திர கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பல கட்ட ஆய்வுகளுக்குப் பின், ரூ. இரண்டாயிரத்து 427 கோடியில் திட்டம் கடந்த 2005ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் கால்வாயில் முதல் கப்பல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டது.



ஆதாம் பாலப்பகுதியில் கால்வாய் தோண்டும் பணி துவங்க இருந்த போது அது "ராமர் பாலம்.' அதை இடிக்காமல் மாற்று வழியில் கால்வாய் தோண்ட வேண்டுமென பா.ஜ.,அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இந்து அமைப்புகள் போர்க்குரல் எழுப்பின. திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. அதையடுத்து பணி முடங்கியது.



குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்., தோல்வியடைந்தது. அதற்கு "ராமர்' பாலப் பிரச்னையும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. இதனால், மத்திய அரசு சேது சமுத்திர கால்வாய் திட்டத்தில் துவக்கத்தில் காட்டிய வேகத்தை குறைத்துக் கொண்டது. "ராமர்' பாலம் தொடர்பாக காங்.,கிற்குள்ளேயே கருத்து வேறுபாடு நிலவுகிறது. திட்டம் தொடர்பாக இன்னும் பல ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளதாக காங்., தலைவர்கள் சமீபத்தில் தெரிவித்தனர்.



திட்டம் துவங்கி மூன்றாண்டுகள் முடிந்த நிலையில், மீண்டும் இத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென சொல்வது, திட்டத்தை தள்ளிப் போடத்தான் என்ற கருத்து நிலவுகிறது.மத்திய அரசு அமைதியாக இருந்தாலும், கூட்டணியிலுள்ள தி.மு.க.,கம்யூ., கட்சிகள் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்துகின்றன. தற்போது, கால்வாய் தோண்ட ஆறாவது பாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற ஐந்து பாதைகளில் கால்வாய் தோண்டினால் பவளப்பாறைகள் அழிக்கப்படும், சுற்றுச்சூழல் சீர் கெடும், மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுமென அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் தேர்தல் பயம் காரணமாக விரைவுபடுத்தப்படாமல் உள்ளதால், அது எப்போது முடியும் என தெரியவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட, திட்டத்திற்கு இப்போது இரண்டு மடங்கு செலவு ஏற்படும் என கூறப்படுகிறது. தென் மாவட்டங்களின் வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பை கருத்திற்கொண்டு திட்டத்தை விரைந்து செயல்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தென் மாவட்ட பொதுமக்கள் கோரி வருகின்றனர்.


நன்றி : தினமலர்



No comments: