Saturday, February 23, 2008

சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால் ...................


சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடமாட்டோம் *எச்சரிக்கிறார் தா.பாண்டியன்



துõத்துக்குடி : " தேர்தல் பயம் காரணமாக சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால், நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்' என இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார். துõத்துக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, காங்.,தலைவர் திக்விஜய் சிங் போன்றோர் தெரிவித்த கருத்துக்களால் சேது சமுத்திர திட்டம் கைவிடப்படுமோ என்ற அச்சம் தற்போது பொதுமக்களிடம் எழுந்துள்ளது. அவர்களின் கருத்திற்கு மத்திய அரசு மறுப்போ, விளக்கமோ தெரிவிக்கவில்லை.


திட்டத்தில் 60 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ரூ. ஆயிரத்து 600 கோடி வரை அதற்கு செலவாகியுள்ளது என எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு செலவழித்த பின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சேது திட்டம் கைவிடப்பட்டால் அது பெரும் பேரிழப்பு ஆகும். வகுப்பு வாத சக்திகளின் மிரட்டலுக்கு மத்திய அரசு வளைந்து கொடுப்பதால்தான் இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தடை வந்துவிடக்கூடாது: சேது சமுத்திர திட்டம் கப்பல்கள் செல்லமட்டுமின்றி குமரி முதல் கொல்கத்தா வரையுள்ள உலகின் மிகப்பெரிய கிழக்கு கடற்கரை வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். சேது திட்டத்தை கைவிட்டால் துõத்துக்குடி துறைமுக வளர்ச்சி, வாலிநோக்கம், தொண்டி, ராமேஸ்வரம் போன்ற துறைமுகங்களின் வளர்ச்சி திட்டங்களும் கைவிடப்படும். தென்னிந்தியாவின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு சேது திட்டத்தை மத்திய அரசு விரைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். அதற்கு தெய்வத்தின் பெயராலோ அல்லது மதத்தின் பெயராலோ தடை வந்துவிடக்கூடாது.



போராட்டம் நடத்துவோம்


தேர்தலில்களில் தனது கட்சியின் வெற்றி, தோல்விக்காக நாட்டின் வளர்ச்சித்திட்டத்தை காங்., மத்திய அரசு கைவிட்டால் அது கோழைத்தனம்.சேது திட்டம் துவங்கி மூன்று ஆண்டுகள் முடிந்த பின்னர் அதில் மீண்டும் பல ஆய்வுகள் செய்யவேண்டுமென மத்திய அமைச்சர்கள் சொன்னால் அத்திட்டத்தில் முதல் குற்றவாளி மத்திய அரசுதான். தேர்தல் பயம் காரணமாக சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டால், நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். வரிகளை குறைத்து அதன்மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து அத்யாவசிய பொருட்களின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும். அதற்காக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும்.


நதிகள் இணைப்பு: இந்திய நதிகள் தேசிய மயமாக்கப்படவேண்டும். தென்னக நதிகள் இணைப்பு குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். காவிரி, பாலாறு உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அதில் கோர்ட் தீர்ப்பு மதிக்கப்படவேண்டும். ரேஷன் அரிசி, மணல் கடத்தலை தடுக்க தமிழக அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்.,29ம் தேதி கட்சியின் மாநில மாநாடு புதுக்கோட்டையில் நடக்கிறது. அதில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் ஏ.பி.,பரதன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஒடுக்க வேண்டும் :தமிழகத்தில் கூலிப்படை நடமாட்டம், சமூக விரோத செயல்கள், லஞ்சம் ஊழல் போன்றவை அதிகரித்துள்ளன. அவற்றை ஒடுக்க முதல்வர் கருணாநிதி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹூண்டாய், போர்டு உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகை மின்சாரம் தருவது, அதிக மின்திருட்டு போன்றவையே தமிழகத்தில் மின்வெட்டிற்கு காரணம் என்றார்.

--------------- -------------


சேது திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி *சொல்கிறார் பிருந்தா காரத்

துõத்துக்குடி : "சேது சமுத்திர திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி"யென மார்க்.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், எம்.பி.,யுமான பிருந்தா காரத் தெரிவித்தார்.


சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி துõத்துக்குடியில் நேற்றிரவு மார்க்.கம்யூ., இந்திய கம்யூ., கட்சிகள் கூட்டாக இணைந்து பொதுக்கூட்டம் நடத்தின. மார்க்.கம்யூ., மாவட்ட செயலர் கனகராஜ், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் மார்க்.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், எம்.பி.,யுமான பிருந்தா காரத் பேசியதாவது: நாட்டு மக்கள் தற்போது விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். அதுபோல விவசாயிகளும் வறுமையில் வாடிவருகின்றனர். அப்பிரச்னைகளுக்காக குரல் எழுப்பாத பா.ஜ., தனது வாயை பூட்டி விட்டு சாவியை சட்டைப்பையில் வைத்துக் கொண்டுள்ளது.


ஆனால் மதவாதம், வகுப்புவாதம் என்ற போர்வையில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய திட்டமான சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கிறது. சேது சமுத்திர திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது பொதுமக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. சேதுசமுத்திர திட்டத்தில் ஊசலாட்ட நிலையை எடுக்கக்கூடாது என மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். அறிவியல் பூர்வமான விவாதங்களை கோர்ட்டில் எடுத்துவைத்து திட்டத்தைவிரைவு படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அரசியல் கட்சிகள் தேர்தல் கண்ணாடியை அணிந்து கொண்டு சேதுத்திட்டத்தை பார்க்கின்றன. ஆனால் நாங்கள் அத்திட்டத்தை மக்கள் வளச்சிக்காக விஞ்ஞான ரீதியாக பார்க்கிறோம்.


பார்லி., தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.,கூட்டணியமையும் என செய்தி வலம்வருகிறது. அந்த சந்தர்ப்பவாத கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற இரு கம்யூ., கட்சிகளும் இணைந்து போராடும் என்றார். இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் பேசும்போது,"சேது சமுத்திர திட்டத்திற்கு எதிரான கருத்தை மத்திய அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார். ஆனால் அதுகுறித்து தமிழகத்திலுள்ள காங்., மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், இளங்கோவன், வாசன் உள்ளிட்டோர் வாய் திறக்காதது ஏன்? மதவாத சக்திகளுக்கு பயந்து திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு விடாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திர கால்வாயில் கப்பல் ஓடும் வரை இரு கம்யூ.,க்களும் தொடர்ந்து போராடிக்கொண்டேயிருப்போம் என்றார். மார்க்.கம்யூ., மத்தியக்குழு உறுப்பினர் டபிள்யூ.ஆர்., வரதராஜன், எம்.எல்.ஏ.,குணசேகரன், இரு கட்சி நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments: