Saturday, February 23, 2008

அ.தி.மு.க.,வுடன் தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ., பேச்சு யஷ்வந்த் சின்கா தகவல்



கோவை : அ.தி.மு.க., உடன் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக, பா.ஜ. கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்.கோவையில் அவர் நேற்று அளித்த பேட்டி:கர்நாடகவில், மே 29ம் தேதி ஜனாதிபதி ஆட்சி முடிகிறது. ஜனநாயக முறைப்படி அதற்கு முன் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கர்நாடக தேர்தலை தள்ளிப்போடவே, மத்திய அரசு தொகுதி சீரமைப்பை தாமதப்படுத்தியது. ஜனாதிபதி ஆட்சி முடிவதற்குள் தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷனை வலியுறுத்துவோம். கர்நாடக தேர்தலில், பா.ஜ. கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


பார்லிமென்ட் தேர்தலுக்கு, இன்னும் 12 மாதங்கள் உள்ளன. பா.ஜ., கட்சி, தேர்தல் பணியை சரியான நேரத்தில் துவங்கியுள்ளது; பிரதமர் வேட்பாளரையும் அறிவித்துவிட்டோம். பார்லிமென்ட் தேர்தலுக்காக, தேர்தல் நிர்வாக குழு, கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. பிப். 25 (நாளை) கூடும் இக்குழு கூட்டத்தில், ஐந்து தொகுதிகளுக்கு ஒரு நிர்வாகி நியமிக்கப்பட்டு, தொகுதி குறித்த ஆய்வு நடத்தப்படும்.நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. இந்திய பொருளாதாரம், கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நெருங்குவதால், அதை கருத்தில் கொண்டு தான், பட்ஜெட் வரும். அது, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மோசமாக்கும்.தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கூட்டணியில் அமைந்த மத்திய அரசு, செயலிழந்து விட்டது. வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சில மாநில தேர்தல்கள் நடக்க உள்ளதால், அத்துடன் சேர்த்தே பார்லிமென்ட் தேர்தலும் வரலாம். எந்த சவாலையும் எதிர்கொள்ள பா.ஜ. கட்சி தயாராக உள்ளது.தி.மு.க. உடன் காங்கிரசே கூட்டணி அமைக்கும் போது, அ.தி.மு.க. உடன் பா.ஜ. கட்சி கூட்டணி அமைப்பதில் தவறில்லை. தேர்தல் கூட்டணி குறித்து, அ.தி.மு.க. உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.அணு ஆயுத ஒப்பந்தத்தை, ஆரம்பம் முதலே பா.ஜ., எதிர்த்து வருகிறது. இடது சாரிகள் எதிர்த்தாலும், எங்களின் எதிர்ப்புக்கும், அவர்களின் எதிர்ப்புக்கும் வித்தியாசம் உள்ளது. அமெரிக்காவை, இடது சாரிகள் எதிர்ப்பதால், அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர். இந்தியாவுக்கு எதிரான, மறைமுக ஷரத்துகள் இருப்பதால், பா.ஜ., அதை எதிர்க்கிறது. இந்த ஒப்பந்தம், அணுசக்தி துறையில் இந்தியாவின் செயல்பாட்டை நிறுத்தி, பின்னடைவு ஏற்படுத்தி, தனிமைப்படுத்தி விடும். சேது சமுத்திர ட்டத்தில், மத்திய அரசு குழம்பியுள்ளது. இவ்வாறு, யஷ்வந்த் சின்கா கூறினார்.அப்போது, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.

No comments: