Sunday, February 17, 2008

தற்காத்துக் கொள்வதற்காக எதிர் தாக்குதல் நடத்த உரிமை உண்டுசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு



புதுடெல்லி, பிப்.18-

தற்காத்துக் கொள்வதற்காக ஒருவர் எதிர் தாக்குதல் நடத்துவதற்கு உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆயுள்தண்டனை


பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆந்த்ராம் என்பவர் 1993-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்ததாக இந்த்ராஜ், பாபுராம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டு இந்த்ராஜ், பாபுராம் ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்புக் கூறியது.

இதனை எதிர்த்து இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுச் செய்தனர். இந்த்ராஜ் தாக்கல் செய்த மனுவில், `மனைவியையும், தன்னையும் கடுமையாகத் தாக்கியதைத் தொடர்ந்துதான் நாங்கள் தற்காத்துக் கொள்ள எதிர் தாக்குதல் நடத்தினோம். இதில், ஆந்த்ராம் இறந்து போய்விட்டார். நாங்கள் தற்காப்புக்காக நடத்திய தாக்குதலை ஐகோர்ட்டு ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே எங்களை தண்டனையில் இருந்து விடுவிக்கவேண்டும்' என்று இந்த்ராஜ் கோரி இருந்தார்.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.பி.நவ்லேகர் மற்றும் லோகேஸ்வர் சிங் பாண்டா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது:-
உரிமை உண்டு
ஆந்த்ராம் தாக்குதல் நடத்தியபோது இந்த்ராஜும், அவரது மனைவியும் மாயாதேவியும் காயமடைந்துள்ளனர். தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டிய நிலையில்தான் அவர்கள் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஐகோர்ட்டு விசாரணையின்போது இந்த்ராஜுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட காயத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஐகோர்ட்டு தவறு செய்து விட்டது. இதை ஏற்றுக் கொள்ள இயலாது.
ஒருவர் தாக்கப்படும்போது தாக்கப்படுபவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக உள்ள உரிமைகளை மறுக்க முடியாது. இந்த்ராஜை, இறந்து போன ஆந்த்ராம் ஆறேழு தடவை ஆயுதத்தால் தாக்கியிருக்கிறார். அதனாலேயே இவர்கள் எதிர்தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
தண்டனை ரத்து
எனவே தனது மனைவியை காப்பாற்றும் நோக்கில்தான் இந்த்ராஜ் எதிர்த்தாக்குதல் நடத்தியிருக்கிறார். ஆகவே தற்காப்புக்காக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இந்த்ராஜ், பாபுராம் ஆகிய இருவருக்கும் பஞ்சாப் ஐகோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை நாங்கள் ரத்து செய்கிறோம். இவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்களுக்கு ஐகோர்ட்டில் அபராதம் எதுவும் விதிக்கப்பட்டிருந்தால் அதையும் திரும்பத் தரவேண்டும்.
மேற்கண்டவாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Thanks : Dailythanthi



தீர்ப்பு எல்லாம் சரி தான் அப்போ இது இனி நடக்க போற விசயங்களுக்கா அல்லது இதுக்கு முன்னாடி நடந்து போன விசயங்களுக்கும் சேர்த்தான்னு கூட தெளிவா சொல்லி இருந்திருக்கலாம்.இது ஒட்டு மொத்த இந்திய குடிமக்களுக்கும் தானா?அல்லது ............................?!!!!!!!!!!!!!!!



No comments: