Monday, March 3, 2008

தலித் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் இடஒதுக்கீடுக்கு அரசு விளக்கம்

புதுடில்லி: "சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தவர்களும், இந்து மதத்துக்கு உட்பட்டவர்கள் தான். அவர்களுடன் ஆதி திராவிட முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை ஒப்பிட முடியாது' என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

"சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தை சேர்ந்த கீழ் ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் போது, ஆதி திராவிட முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் முரண்படுவது ஏன்?' என்று, ராஜ்யசபாவில் நேற்று போராசிரியர் குரியன், சரத்யாதவ், தாரிக் அன்வர் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்து சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார் கூறியதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் துணைப்பிரிவு பி, சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தவரையும் இந்து மதத்துக்கு உட்பட்டவர்களாகவே விளக்குகிறது. தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மத மற்றும் மொழி சிறுபான்மையினர் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

ஆதி திராவிடர்களை பாதிக்கும் விஷயங்கள், ஆதி திராவிட தேசிய கமிஷனின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்றும், ஆனால், இதனால் ஆதி திராவிடர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றும் பரிந்துரை அளித்துள்ளது. ஏற்கனவே, இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே, பிற்பட்ட, இதர பிறப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து தான், இதைத் தர முடியும். இது தொடர்பாக, பிற்பட்ட வகுப்பினர் தேசிய கமிஷனின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்னும் பரிந்துரை எதுவும் வரவில்லை. 1950ம் ஆண்டு, இந்து மதத்துடன், ஆதி திராவிட வகுப்பினரை தொடர்பு படுத்தி கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு மாநில ஐகோர்ட்டிலும் இது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இது குறித்து ஆழமாக விவாதிப்பது, கோர்ட் அவமதிப்பு குற்றமாகிவிடும். இவ்வாறு மீரா குமார் கூறினார்.

Thanks: dinamalar

No comments: