Saturday, March 8, 2008

அணுசக்தி ஒப்பந்தத்துக்காக, ஆட்சியை தியாகம் செய்ய தயாராக இல்லைமத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கருத்து

புதுடெல்லி, மார்ச்.9-

"அணுசக்தி ஒப்பந்தத்துக்காக, ஆட்சியை தியாகம் செய்ய தயாராக இல்லை'' என்று மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகள் கெடு
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை. இடது சாரி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இது தொடர்பாக அமைக்கப்பட்ட உயர் மட்டக் குழுவை வருகிற 15-ந் தேதிக்குள் கூட்டவேண்டும் என்றும் இடது சாரி கட்சிகள் கெடு விதித்து இருக்கின்றன.
இந்திய கம்ïனிஸ்டு பொதுச் செயலாளர் ஏ.பி.பரதனோ, அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்தினால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பகிரங்கமாகவே கடிதம் எழுதி இருக்கிறார்.
இதனால் பாராளுமன்றத்துக்கு முன்னதாகவே தேர்தல் வரலாம் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உரிய நேரத்தில் நடக்கும்
இந்த நிலையில் மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி ஒரு தனியார் டெலிவிஷன் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் பாராளுமன்ற தேர்தலை, உரிய நேரத்தில் (2009-ல்) நடத்தவே நாங்கள் விரும்புகிறோம்.

தியாகம் செய்ய தயாராக இல்லை

அணுசக்தி ஒப்பந்தத்துக்காக, ஆட்சியை தியாகம் செய்ய நாங்கள் தயாராக இல்லை. இந்த எண்ணம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகள் மத்தியில், இதுவரை உருவாகவில்லை.
அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக, அமெரிக்காவுடன் எந்த வித கால கெடுவும் கிடையாது. அவ்வாறு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருப்பதால், மே மாதத்துக்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறதே தவிர, ஒப்பந்தத்துக்கு காலக்கெடு இல்லை.

மே மாதத்துக்குள் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்று, அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். அதற்கு அமெரிக்கா, அதிபர் புஷ்சின் நிர்வாகம் முடிவதற்குள் இதை நிறைவேற்றிக்கொள்ள தவறினால், அடுத்து வரும் ஆட்சியின் போது, இந்த ஒப்பந்தத்தை, தற்போதைய நிலையிலேயே நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்காது என்று தெரிவித்து இருக்கிறது.

எனக்கு தெரியும்

கூட்டணி அரசியல் என்றால் எதிர்பாராதவை நடக்கத்தான் செய்யும். இடது சாரிகளின் நிலை எங்களுக்கு நன்றாகவே தெரியும். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது என்பது, இடதுசாரியின் கொள்கை ரீதியான முடிவு. அதுபற்றி பேச நான் தயாராக இல்லை. இந்த பிரச்சினையை எப்படி கையாள வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

பாராளுமன்றத்துக்கு தேர்தல் முன்னதாகவே நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். எங்களது கூட்டணி கட்சிகளோ அல்லது கூட்டணியை ஆதரிப்பவர்களோ தேர்தல் பற்றி இதுவரை நினைக்க வில்லை.
மேற்கண்டவாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

Thanks : dailythanthi

No comments: