திருவிடைமருதூர் கோவிலில் வெடிகுண்டு பீதி`டம்மி' வெடிகுண்டுகளை விட்டுச் சென்ற சினிமா படப்பிடிப்பு குழுவினர் மீது நடவடிக்கை
திருவிடைமருதூர், மார்ச். 5-
திருவிடைமருதூர் மகாலிங்கர் கோவிலில் நேற்று வெடிகுண்டு இருப்பதாக பரவிய தகவலால் பீதி நிலவியது.
மகாலிங்கர் ஆலயம்
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்கர் கோவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது.
இந்த கோவிலில், மூகாம்பிகை அம்மன் சன்னதியின் மேல்தளத்தில் ஜெகந்நாதன் என்பவர் உழவாரப் பணிகளில் நேற்று ஈடுபட்டு இருந்தார். அவர், அங்கு வளர்ந்து நின்ற தேவையற்ற செடிகளை அகற்ற முற்பட்ட போது அங்கு ஒரு பிளாஸ்டிக் பை இருப்பதைக் கண்டார்.
அதை எடுத்துப் பார்த்த போது அதில் பல வயர்கள், பேட்டரி ஆகியவற்றின் மூலம் வெடிகுண்டு ஒன்று சுற்றி இருந்ததைக் கண்டு அலறியவாறே கோவில் கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார். உடனடியாக இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிரடி சோதனை
இதற்கிடையே இந்த செய்தி, காட்டுத்தீ போல் திருவிடைமருதூர், கும்பகோணம் பகுதிகளில் பரவியதால் மக்களிடம் பீதியும், பதட்டமும் ஏற்பட்டு கூட்டம்-கூட்டமாக கோவிலை நோக்கி படையெடுத்தனர்.
போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் கோவிலை வந்தடைந்தனர். யாரும் கோவிலுக்குள் போகாமல் இருக்கும்படி போலீசார் தடை விதித்தனர்.
மோப்ப நாய்
வெடி குண்டு இருக்கிறதா என்பதை கண்டு பிடிக்க, மோப்ப நாய் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்டது.
போலீசார் 4 பிரிவாக பிரிந்து கோவிலுக்குள் சென்று, மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனையிட்டனர்.
ஒரு குழுவினர், கோவில் ஊழியர் ஜெகந்நாதன் கூறிய இடத்திற்கு சென்று, அங்கிருந்த பிளாஸ்டிக் பையை தண்ணீருக்குள் போட்டு சோதனையிட்டனர். சோதனையில் அந்த பையில் இருந்தது "டம்மி'' (போலி) வெடிகுண்டு என தெரிய வந்தது.
சுமார் 2 மணி நேரம் போலீசார் மற்ற இடங்களிலும் சோதனையிட்டனர். ஆனால் வேறு எங்கும் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. இதை அறிந்த பிறகு பொதுமக்களிடம் பீதி அகன்றது.
மூகாம்பிகை அம்மன் கோவில் மேல்தளத்திற்கு அந்த டம்மி குண்டு எப்படி வந்தது என்பது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரொசாரியோ விசாரணை நடத்தினார்.
அப் போது கடந்த சில நாட்களுக்கு முன் கோவிலில் ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்தது தெரிய வந்தது. அந்த குழுவினர் இதை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதுபற்றி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரொசாரியோ, நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டப்படி நடவடிக்கை
"பிளாஸ்டிக் பையில் இருந்தது, டம்மி வெடி குண்டு. அது எப்படி அங்கு வந்தது என்பதை பற்றி விசாரணை நடத்தியதில் சுமார் 10 நாட்களுக்கு முன்பு, `சிங்கக்குட்டி' என்ற சினிமா படப்பிடிப்பு நடந்ததாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அதன்பேரில் அப்படத்தின் மேலாளர்களில் ஒருவரான விஜய குமாரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, படப்பிடிப்பின் போது தீவிரவாதி கோவிலில் வைக்கும் வெடிகுண்டை கதாநாயகன் எடுத்து செயலிழக்கச் செய்வதாக ஒரு காட்சி ஒன்று எடுக்கப் பட்டது என தெரிவித்தார்.
இந்த போலியான வெடி குண்டால் மக்களிடையே பதட்டமும், பீதியும் ஏற்பட்டு விட்டன. அஜாக்கிரதையாக கோவிலில் அவர்கள் இந்த போலி வெடிகுண்டை விட்டு சென்றதே பீதிக்கு காரணமாகும். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.''
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tuesday, March 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment