Monday, March 3, 2008

"பயங்கரவாதிகள் ஊடுருவுவதை நிறுத்த வேண்டும்'டில்லி இமாம் திடீர் கோரிக்கை




புதுடில்லி: "பயங்கரவாதிகளை இனியும் ஆதரிக்காதீர்கள்; இந்தியாவில் ஊடுருவ அனுமதிக்காதீர்கள் என, பாகிஸ்தான் புதிய அரசிடம், இந்திய முஸ்லிம் தலைவர்கள் பகிரங்கமாக வலியுறுத்த வேண்டும்' என்று, டில்லி ஜும்மா மசூதி ஷாகி இமாம் சையது அகமது புகாரி திடீர் யோசனை தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் டில்லி ஜும்மா மசூதியில், ஷாகி இமாம் சையது அகமது புகாரி பேசியதாவது: பாகிஸ்தானில் இருந்து அனுப்பப் படும் பயங்கரவாதிகள் தான், இந்தியாவில் பல இடங்களில் சதி செயல்களை நிறைவேற்றி விட்டு மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்று பதுங்கி விடுகின்றனர். அவர்கள் செய்த வன்முறைகளின் பலன்களை, இந்திய முஸ்லிம்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இனியும் இதை அனுமதிக்க முடியாது; உடனே நிறுத்தியாக வேண்டும்.பாகிஸ்தானில் இதுவரை இருந்த அரசு, இதை கண்டுகொள்ளவே இல்லை. இப்போது புதிய அரசு உருவாகப்போகிறது. இது தான் சரியான தருணம். மத்திய அரசு உதவியுடன் , இந்திய முஸ்லிம் தலைவர்கள், பாகிஸ்தானுக்கு சென்று, புதிய அரசிடம்," பயங்கரவாதிகளை இனியும் இந்தியாவுக்குள் ஊடுருவ அனுமதிக்காதீர்கள்' என்று கண்டிப்புடன் சொல்ல வேண்டும்.


இந்தியாவில் பயங்கரவாதிகள் நடத்தும் சதி செயல்களின் பின்னணியில், பாகிஸ்தான் ஆதரவு உள்ளது என்பதை புதிய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அதை உடனே நிறுத்தச் சொல்ல வேண்டும். பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பை 2002 ம் ஆண்டு சந்தித்தேன். "பயங்கரவாதிகளை வளர்த்து விட வேண்டாம்; உடனே அவர்களை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால், பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்படும்' என்று சொன்னேன். இப்போது, பாகிஸ்தான், பயங்கரவாத தீப்பந்தில் சிக்கித்தவிக்கிறது. இவ்வாறு ஷாகி இமாம் கூறியுள்ளார்.

No comments: