Monday, March 17, 2008

"உலமாக்கள் நலவாரியம்'

"உலமாக்கள் நலவாரியம்' அமைக்க முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை
சென்னை, மார்ச் 16: உலமாக்கள் நலவாரியம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலமாக்கள் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி சமூக நல மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம் ஆகியவற்றின் சார்பில் இம் மாநாடு நடைபெற்றது.
இதில் இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகத்தின் தலைவர், பேராசிரியர் அ.

முகம்மது கான் பாகவி பேசியதாவது:

தமிழகத்தில் சுமார் 15,000 பள்ளி வாசல்கள் உள்ளன. இதில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்த பள்ளிவாசல்கள் 6,000 ஆகும்.
தமிழகத்தில் மார்க்க அறிஞர்கள் எனப்படும் "ஆலிம்கள்' 10 ஆயிரம் பேர் உள்ளனர். அரபிக் கல்லூரிகளில் 5 அல்லது 7 ஆண்டுகள் கடுமையான ஒழுக்க நெறிகளையும், கட்டுப்பாட்டுடனும் மார்க்கக் கல்வி பெற்றுத் தேர்ச்சி பெறுவோரே ஆலிம்களாக பட்டம் பெறுகின்றனர்.
ஆலிம்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிவாசல்களில் இமாம்களாக இறை பணியாற்றுகின்றனர்.
முஸ்லிம் சமுதாய மக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், மார்க்க வழிகாட்டும் இமாம்களுக்கு பெரும்பாலான பள்ளிவாசல்களில் ரூ. 1000 முதல் ரூ. 4.000 வரை மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.
இதுதவிர "மத்திம்கள்' எனப்படும் தொழுகை அறிவிப்பாளர்களாக 12 ஆயிரம் பேர் இறை பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 1000 அல்லது ரூ. 2,000 மட்டுமே வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ஏதும் இல்லை.

இதனால், தங்களது குழந்தைகளின் கல்விக்குக் கூட செலவிட இயலாத நிலையில் தவிக்கின்றனர். இதனால், மதராஸôக்களில் படிக்க வரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.

எனவே, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள இமாம்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேருக்கு அரசு உதவும் வகையில் உலமாக்கள் நலவாரியத்தை அமைக்க வேண்டும் என்றார் முகம்மது கான் பாகவி.

இம் மாநாட்டில் வக்ஃப் வாரியத் தலைவர் எஸ். ஹைதர் அலி, எம்.கே. அலாவுத்தீன் பாகவி, முகம்மது இல்லியாஸ் காசிமி, உபைதுல்லாஹ் ஹஜ்ரத், முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலர் சே.மு.மு. முகமதலி, ஏ.கே. முகம்மது அனீபா, தர்வேஷ் ரஷாதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments: