தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் சேதுக்கால்வாய்த் திட்டம் முதன்மையானது. இதில் இராமர் பாலச் சிக்கல் உண்டாக்குவது தேவையற்றது. நருமதை ஆற்றின் குறுக்கே அணைகட்ட முயன்றபோது அதை எதிர்த்தவர்கள் நருமதை அணைத்தடுப்புப் போராட்டம் நடத்தினார்கள். முறை மன்றத்துக்கு வழக்குச் சென்ற போது, “அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக எந்தத் தனித்த அமைப்பும் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. பலகோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் அணைத்திட்டத்தை நிறுத்த முடியாது'' எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைக் கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்.இராமனுக்கு நான் பகைவன் அல்லன்; இராவணன் தான் இராமனின் பகைவன். நாட்டு நலனுக்கான சேதுக் கால்வாய்த்திட்டம் நிறைவேற வேண்டுமெனத் தமிழக முதல்வர் கலைஞரும் தெளிவுபடுத்தியுள்ளார்.
வாச்பாய், அத்துவானி போன்ற தலைவர்கள் இராமர் பாலத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் திட்டம் நிறைவேற்றலாம் என்றனர். இயற்கைச் சூழல் கெட்டு விடும், பவளப்பாறை அழிந்து விடும் என்றெல்லாம் முழங்கிய முழக்கங்கள் பொய்யானவை என நிறுவப்பட்டுள்ளன. இது தொடர்பாக எல்லா ஐயங்களையும் தெளிவுபடுத்திய பெருமக்கள் சிலரை இங்குக் குறிப்பிடுவது பொருந்தும்.
மறவன்புலவு சச்சிதானந்தம்
இவர் ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள கடற்புற மீனவப் பெருமக்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்தவர். நல்ல தமிழறிஞர். சேதுக்கால் வாய்த் திட்டத்தால் ஏற்படும் நன்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். பாம்பன் தீவு முதலான 21 தீவுகள் கொண்ட கடல் வனப் பாதுகாப்பு வலயத்துக்கு எந்தத் தீங்கும் இல்லாததால் பவளப்பாறை களருகில் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஊறு ஏற்படாது.
சேதுக்கால்வாய்த் திட்டத்தால் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிலை ஏற்படாது. நிலவியலார், பொதுநல(சமூக) வியலார், பொருளியலார் எனப் பல்துறை வல்லுநர் இணைந்து இசைவளித்ததே 16ஆம் வழித்தடமாகிய சேதுக்கால் வாய்த்திட்டம் என்கிறார்.
சக்கி வாசுதேவ அடிகளார்
ஈசா அற நிறுவனத்தின் தலைவராகிய சக்கி வாசு தேவ அடிகளார் மக்களால், தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர் பொது மக்களின் விருப்பத்துக்கு உரியவர். நாட்டு நலனுக்காகக் கொணரப்பட்ட சேதுக்கால்வாய்த் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும். இது தெருவில் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல் அல்ல. குறிப்பிட்ட துறைசார்ந்த வல்லுநர்களின் கருத்து கேட்டு அதன்படி நிறைவேற்றப்பட வேண்டிய நாட்டுநலத்திட்டம் என்கிறார்.
வேத வித்தகர் அக்னியோத்திரம் இராமாநுச தத்தாச்சாரியார்
101 ஆண்டுகள் நிரம்பிய வேத வித்தகர் அக்கினி யோத்திரம் இராமாநுச தத்தாச்சாரியார் இராமர் பாலம் தொடர்பாகப் பல அரிய செய்திகளைச் சொல்லியிருக்கிறார். சாம வேதத்தில் சேது என்ற சொல் கடந்து செல்லுதல் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. இது ஒரு வினைச் சொல்; பெயர்ச் சொல் அன்று. மணல் திட்டுகளைத் தாண்டிக் கடந்த செய்தியே சேது எனப்படுகிறது.
வால்மீகி இராமாயணத்தில் போர் முடிந்தபிறகு தேவர்கள் இராமனைப் போற்றி வணங்கினார்கள். அப்போது இராமன், அவர்களை நோக்கி “நான் தசரதனின் மகனாகிய மனிதன். என்னைத் தெய்வம் என்று நினைத்து வணங்காதீர்கள்'' எனக் கூறியதாக வால்மீகி குறிப்பிட்டுள்ளார். இராமன் மற்றொரு நாட்டுக்குப் போவதற்காகத்தான் இந்த ஏற்பாடு செய்தான். இப்பொழுது வெளிநாட்டுக்குப்போகும் கப்பலுக்காகச் சேதுக்கால்வாய் அமைப்பதில் தவறில்லை.
எல்லோரும் வணங்குவதற்காகச் சேதுவை இராமர் அமைக்கவில்லை. போர் முடிந்து திரும்பும் போது இராமர் தன் வில்லால் அந்தப்பாலத்தை அழித்துவிட்டார். அதனால் அந்த இடத்துக்கு தனுசுக்கோடி என்னும் பெயர் வந்தது.எனவே, இராமரே அழிக்க முடிவு செய்து அழித்துவிட்ட சேதுப் பாலத்தை வீண் நம்பிக்கையால் போற்றி நம் தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டுமா? என ஆணித்தரமாக இந்த முதுபெரும் வேத வித்தகர் வினா எழுப்பியுள்ளார்.
காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார்
சிவன்தான் இந்தியாவின் அடையாளம். இராமர் அல்ல. நாட்டுப்புற மக்கள் முனியாண்டி, சடையாண்டி, கருப்பண்ணசாமி ஆகிய சிறுதெய்வங்களை வணங்குகின்றனர். இராமரும் கிருட்டிணரும் ஆரியர் தெய்வங்கள்.
இராகுலசாங்கிருத்தியாயன்ஆரியர் நாகரிகத்தை முதன்மைப்படுத்துவதற்காக மதப்பற்றாளர்களும் சமற்கிருதப் புராண வல்லுநர்களும் மேற்கொள்ளும் முயற்சி இந்தியாவுக்குப் பெருமை தராது. கரபாத்திரி என்பவர் இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அத்தனையும் பொய் என்கிறார். பழைய காலத்து வேத முனிவர்கள் ரிதம்பர ஞானம் எனும் அகவுணர்வால் கண்டவை மட்டும் உண்மை என்கின்றனர்.
அரப்பா மொகஞ்சாதரோ நாகரிகத்தில் ஆரியர்களையும் பாரத இராமாயணக் கதைகளையும் தேடுவது, சமற்கிருதமே, உலக முதன்மொழி என்பது, ஆரியர் (மானசரோவரில்) இந்தியாவில் தோன்றியவர்கள் என்பது போன்றவை எக்காலத்திலும் உலகம் ஏற்றுக்கொள்ளாதவை.
இப்பொழுது மானசரோவர் சீன நாட்டில் உள்ள திபெத்தில் உள்ளது. ஆரியர் சீன நாட்டைச் சேர்ந்தவரா என்னும் வினாவும் எழும்.
ஆரியர் தம் மேலாண்மையை இந்தியாவில் நிலை நிறுத்தப் பார்க்கிறார்கள் என்பதை இவர் நன்கு வலியுறுத்தியுள்ளார். இராமாயணம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
தவத்திரு தரும தீர்த்த அடிகளார்
(1941)கேரள மாநிலத்தில் சீர்திருத்தச் செம்மலாக விளங்கிய நாராயண குருவின் வழிவந்த தவத்திரு தரும தீர்த்த அடிகளார் இந்து மதத்தில் சாதிப்பிரிவுகளால் முழுப்பயன் அடைந்த பார்ப்பன மேலாதிக்கத்தைப் பாதுகாக்கும் இதிகாச புராணங்களை நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கிறார். அவருடைய History of Hindu Imperialism பல அரிய உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.
அவருடைய கருத்துகள்.
1. மாந்த இனத்துக்கே அவமான அடையாளமாக இருக்கும் சாதிப்பிரிவையும் பார்ப்பன மேலாண்மையையும் தகர்க்க வேண்டும். பொதுமக்கள் இதை உணர வேண்டும். ஆரியர் வருமுன் இந்தியாவில் சாதிப்பிரிவு இல்லை. ஆரியரின் மதுப்பழக்கமும் உயிர்ப்பலிகளும் எல்லைமீறிய போது இவற்றை எதிர்த்தவர்கள் ஈரானுக்குச் சென்று பார்சிகளாக மாறிவிட்டனர்.
2. ஆரியர்கள் கங்கைக் கரைக்கு வந்தபோது பண்பாடும் நாகரிகமும் மிக்க மக்களாகிய திராவிடர்கள் பெருமளவில் வாழ்வதைக் கண்டனர். ஆரியர் உள்நாட்டு மக்களைத் தாழ்வாகக் கருதினர்.
அரக்கர்கள் என்றும் தசியூ (பகைவர்) என்றும் அழைத்தனர் அரக்கரும் வானரரும் உண்மையில் ஆரியர்களை விடச் சிறந்தவர்கள்; நேர்மையானவர்கள் என்பதற்கு வால்மீகி இராமாயணத்திலேயே சான்றுகள் உள்ளன. திராவிட மன்னர்களிடமிருந்தே பற்பல கலைகளையும் மெய்யியல்களையும் (தத்துவம்) ஆரியர் கற்றனர். வேள்வி செய்யும் புரோகிதத் தொழில் வாயிலாகப் பார்ப்பனர் அரசர்களைத் தம்பால் ஈர்த்துக்கொண்டனர்.
3. ஒவ்வொரு அரசன் அரண்மனையிலும் பார்ப்பனப் புரோகிதன் இருந்தாக வேண்டும். அவனை எதிர்த்துப் பேசினால் அரச குடும்பம் அழிந்தே போய்விடும். புரோகிதனிடம் ஐந்து நெருப்புகள் உள்ளன.
1. சொல்லில் அக்கினி,
2. பாதத்தில் அக்கினி,
3. பிறப்பு உறுப்பில் அக்கினி,
4. தோலில் அக்கினி,
5. இதயத்தில் அக்கினி, இவை ஐந்து நெருப்புகள் (பஞ்சாக்கினி) எனப்படும்.
இவற்றிலிருந்து தப்புவித்துக் கொள்ள வேண்டும். புரோகி தான் அமர்வதற்குத் தருப்பைப் புல்லைப் பரப்பி அமரச் செய்து மன்னன் அவனுக்குப் பாதபூசை செய்து பாத நெருப்பிலிருந்து தப்பிக்கலாம்.
ஆடை அணிகலன்கள், பொன், பொருள் தருவதால் உடம்பு நெருப்பிலிருந்து தப்பிக்கலாம். உணவளித்து மகிழ்வித்தால் இதய நெருப்பிலிருந்து தப்பிக்கலாம்.
மன்னனின் அந்தப்புரத்தில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உரிமை மகளிரோடு பழக அனுமதித்தால் புரோகிதனின் பிறப்பு உறுப்பு நெருப்பிலிருந்து தப்பிக்கலாம்.
இந்த ஐந்து நெருப்புகளிலிருந்தும் தப்பிக்கும் மன்னனே மேலுலகத்திற்குச் செல்லும் தகுதி பெறுவான் என ஐத்திரேய பிராமணம் (8:24) கூறுகிறது.
4. இராமன் போன்றோர் இவ்வாறு பிராமணப் புரோகிதனுக்குப் பெட்டிப் பாம்பாய்க் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள். இந்தப் புரோகிதக் கூட்டமே பிராமணார் என்னும் பெயர் கொண்டது. இவர்களில் யாரும் ஞானிகளாகவோ, பண்டிதர்களாகவோ இருந்ததில்லை. ஒரு பிராமணன் பாஞ்சால மன்னனிடம் தோற்று அவரிடமே மாணவனாகச் சேர்ந்து கொண்டான்.
5. உலகில் இருப்பதெல்லாம் பிராமணனின் சொத்து. பிராமணன் அல்லாத மக்கள் அனைவரும் அவர்களுக்குத் தொண்டும் பணிவிடையும் செய்வதற்காகப் படைக்கப்பட்டவர்கள். இத்தகைய பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை போலக் கல்லாத மக்களை நம்பச் செய்தனர். தென்னாட்டு மன்னர்களும் குறுநில மன்னர்களும் இந்த ஆரியச் சூழ்ச்சிகளை எதிர்த்தனர். இத்தகைய எதிர்ப்பின் விளைவே இராமாயணம் போன்ற நூல்களாயின. திராவிடரின் மெய்யியல் (தத்துவ) கோட்பாடுகளை உபநிடதங்கள் என்னும் பெயரில் ஆரியர்கள் மொழிபெயர்த்துக் கொண்டனர்.
6. இந்திய மன்னர்களிடையே பகை மூட்டி வெற்றி பெற்றவர் சார்பில் ஆரியக் கோட்பாடுகளை நிலை நாட்டியதையே பாரத இராமாயணக் கதைகள் எடுத்துக்காட்டுகின்றன.
7. ஆரிய எதிர்ப்பு இயக்கத்தில் வெற்றி கண்டவர் புத்தர். இவர் வேத வேள்வி மறுப்பு, பிறப்பினால் வேறு பாடுபாடு காட்டும் சாதி ஒழிப்பு, தாய் மொழிக் கல்வி ஆகிய மூன்று கொள்கைகளை முழுமையாகச் செயற்படுத்திக்காட்டினார். ஆரியர், இவரை திருடன், பொய்யன் என இழிவுபடுத்தினர். புத்தருக்கு முன்பே கபிலன் சாங்கியக் கொள்கையைப் பரப்பி ஆரியக்கோட்பாடுகளைத் தகர்த்தான்.
8. ஆரியர்கள் இந்திய வரலாறுகளை அழித்து விட்டுப் புராணங்களை எழுதினர். சமற்கிருதத்தில் வரலாற்று நோக்கில் நம்பகமான நூல் எதுவுமில்லை.
9. வேள்விகள் தடுக்கப்பட்டபின்பே பிராமணர்களுக்குக் கோயில்கள் நிலையான வருமானத்துக்குரிய இடங்களாகிவிட்டன. அரசர்களின் கருவூலம் கோயில்களுக்கு மாற்றப்பட்டதும் உண்டு.
பொது மக்களின் மூடப் பழக்கத்தை முதலாக்கிச் செல்வத்தில் கொழிக்கும் சீமான்கள் ஆவதற்கு இந்து மதம் பார்ப்பனர்களுக்கு வாய்ப்பளித்தது.
“கோயில்களில் பூசை செய்யும் பார்ப்பனர்களுக்கு கடவுள் சிலைகளிடம் உண்மையான மதிப்பும் அச்சமும் பணிவும் இருப்பதில்லை என சூஆகிடுபோய்' எனும் பிரஞ்சு எழுத்தாளரும் குறிப்பிட்டுச் சென்றார். இக்கோயில் இயக்கம் தொடங்குவதற்கும் முன்பு உபநிடதம் சாங்கியம் போன்றவற்றுக்குப் பார்ப்பனர் பகைவராகவே இருந்தனர்.
10. பஞ்சாபிகள் சீக்கிய மதம் உண்டாக்கியதன் வாயிலாக இந்துமதக் கொடுமையிலிருந்தும் பார்ப்பனத் தில்லுமுல்லுகளிலிருந்தும் தப்பித்துக் கொண்டனர்.
11. உலகில் எல்லா உயிர்களும் உரிமையோடு பிறக்கின்றன. ஆனால் இந்து என்பவன் பிறக்கும் போதே சாதி என்னும் சங்கிலியால் கட்டப்பட்ட அடிமையாகப் பிறக்கிறான்.
12. ஏழைகளுக்கு நன்மை செய்வதையும் உதவுவதையும் இந்துமதக் கோயில்கள் விரும்பவில்லை. கோயிலுக்குச் செல்பவர்கள் சிலர் மட்டும் பிச்சைக்காரர்களுக்குச் சில்லறை காசு போடுகின்றனர். எல்லோரும் மிகப் பெரிய தொகைகளை மிகப் பெரிய உண்டியல்களில் போடுகின்றனர். இதைத் தவிரக் கடவுளைப் பார்க்கவும் பூசை செய்யவும். படையல், பிரசாதம் வாங்கவும் தனிப்பூசை நடத்தவும், ஆடையணிகலன்களுக்காகவும், பொது மக்கள் தனித்தனியாகப் பணம் செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் வறுமையில் வாடும்போது எந்தக் கோயிலும் கஞ்சி ஊற்றிக் காப்பாற்றுவதற்குக் கூட முன்வருவதில்லை. சாதி, கோயில், துறவு மடங்கள் இவை மூன்றும் கூட்டுச் சேர்ந்து கோடிக்கணக்கான இந்துக்களை மூடநம்பிக்கைச் சிறையில் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன.
ஒரே தெய்வம், ஒரேவகை வழிபாடு, பிறப்பால் வேறு பாடில்லாத கூட்டம் என வகுத்துக்கொண்டு தம்முள் ஒற்றுமைப்பட்ட கிறித்துவ முகமதிய மதங்களைப்போல் இந்து மதம் வளர வாய்ப்பளிக்கப்படவில்லை. கபீர், நானக் நாராயணகுரு, வள்ள லார் போன்ற பெருமக்களின் பொதுமைக் கருத்துகள் வளராமல் தடுக்கப்பட்டன.
13. ஆக மொத்தத்தில் இந்து மதம் இந்துக்களுக்குச் செய்தது என்ன? இந்து மதக் கொடுங்கோன்மையின் பரிசுகள் இவை:
பெரும்பான்மை மக்களுக்கு நலிவும் சிறுபான்மை மக்களுக்கு மூவாயிரம் ஆண்டுகளாக வளமான வாழ்வும் அளித்துள்ளது.
மதித்துப் பெருமையளிக்கும் ஏழைகளுக்கு மூட நம்பிக்கைகளைப் பரிசளித்தது.
கல்வியளிப்பதற்கு மாறாக அறியாமையை வளர்த்தது.
கொடுப்பதற்கு மாறாகப் பறித்துக்கொண்டது
ஒற்றுமைப்படுத்துவதற்கு மாறாக மக்களை வேற்றுமைப்படுத்தியது.
முன்னேறுவதற்கு மாறாக பின்னேற்றம் அடையச் செய்தது
அரசையும் அமைதியான வாழ்க்கையையும் பாதுகாப்பதற்கு மாறாகப் பகைவர்க்குக் காட்டிக் கொடுத்தது.
சம உரிமையோடு வாழ்ந்த மக்களை அடிமைப்படுத்தியது.
கொடுமைக்குள்ளான மக்கள் மதம் மாறுவதால் இந்து மதம் இளைத்துப் போவதைக் கண்டும் எள்ளளவும் யாரும் கவலைப்படவில்லை, ஏனெனில் கோயில் வருமானம் வளர்ந்து கொண்டே இருப்பதற்குக் காரணமான பணக்காரக் கும்பலும் நடுத்தரக் குடும்பங்களும் இன்னும் பிராமணச் சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியா வெள்ளையரிடமிருந்து பெற்ற விடுதலை உண்மையான விடுதலையன்று, பிராமணக் கொடுங்கோன்மை யினின்று விடுதலை பெறுவதே இந்தியாவின் உண்மையான விடுதலையாகும்.
இந்துக்களில் பெரும்பான்மையினர் தங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூறும் உரிய மேடையில்லாமல் இருக்கிறார்கள். செய்தி ஊடகங்களும் அவர்கள் கையில் இல்லை.
அரசியலும் மதமும் ஒரே கொள்கையும் நோக்கமும் கொண்டிருக்க வேண்டும். இரண்டு முதலாளிகளின்கீழ் வளரும் பணி செய்ய முடியாது. இதற்கு அரசு இணங்கி வந்தாலும் இந்துமத முதலாளிகள் இணங்கி வராத நிலைமையே உள்ளது.
இந்து மதம் சாதி எனும் சூழ்ச்சியால் இந்துக்களைப் பிளவுபடுத்தியது ஒன்றே அதன் பெருங்கொடையாக உள்ளது.
நீ சாதியால் இழிந்தவன் என மாந்த உணர்வுகளை நோகடிக்கும் இந்து மதத்தை அன்புள்ள மதம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
இந்துமதம் இரக்கமற்ற கொடுங்கோன்மையுள்ளதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் உள்ளது என சர்.பி.சி.ரே கூறியுள்ளார்.
சாதி என்பது இந்து மதத்தின் ஆன்மாவாக உள்ளது. சம உரிமையே இந்து மதத்தின் ஆன்மா என மாறும்போதுதான் இந்து மதம் மதிக்கப்படும். இந்து மதம் சாதி வேறுபாடு காட்டி ஒருவரை ஒருவர் வெறுக்கவும் போர்க்காலங்களில் காட்டிக் கொடுக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது.
முன்னுக்குப் பின் பேசும் பா.ச.க.வினர்
9.3.2001 முதலே அருண் சேட்லி முதலிய ஆறு பா.ச.க. அமைச்சர்கள் சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர். 29.9.2003 அன்று கப்பல் போக்குவரத்து அமைச்சர் சத்துருகன் சின்கா ஆதம் பாலத்துக்குக் குறுக்கே சேதுக்கால்வாய் தோண்டப்படும் என்றார். இப்பொழுது அது இராமர் பாலமாகத் தெய்வத்தன்மை பெற்றுவிட்டது.
பா.ச.க. சார்பாளராகிய தொல்பொருள் ஆய்வாளர் பி.பி. லால் அயோத்தியில் மக்கள் வாழத் தொடங்கிய காலம் கி.மு. 700 என்பதற்கான சான்று கிடைத்துள்ளது என்றார்.
இராமசென்ம பூமிக்கும் இது அறிவியல் சான்றாகக் காட்டப்பட்டது.
இப்பொழுது அறிவியல் சான்று எதுவும் வேண்டாம். இராமர் 17 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார் என்னும் நம்பிக்கையே போதுமானது என்கின்றனர்.
அணிலும் குரங்குப் படையும் சேர்ந்து ஐந்து நாளில் 100 யோசனை (800 மைல்) பாலம் கட்டியதாக வால்மீகி தன் இராமாயணத்தில் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் இராமேசுவரத்துக்கும் உள்ள தொலைவு வெறும் 30 மைல். வால்மீகிக்கு மட்டும் இராமர் பாலத்தின் நீளம் ஏன் நீண்டு விட்டது என்று எந்த பா.ச.கவினரும் கேட்பதில்லை. ஏன் கேட்பதில்லையென்றால் அதற்கு ஒரே விடை பிராமண மேலாதிக்கத்தை எதிர்த்துப் பேசக் கூடாது.
இராமாயணத்தை ஒப்புக் கொள்வது என்பது பிராமண மேலாதிக்கத்தைக் கண்மூடித்தனமாக பின்பற்றி சூத்திர அடிமைத்தனத்தை உலகம் உள்ளளவும் முத்திரைக் குத்திக் கொள்வதற்கு அடையாளமாகிறது என்கின்றனர்.
இருநிலப் பகுதிகளுக்கு இடையில் உள்ள கடற்பகுதியில் மணல் திட்டுகள் உருவாவது உலகில் காணப்படும் பொது நிகழ்ச்சி. இராமர் பாலம் என்பது மணல் திட்டுதான் என நாசா விண்வெளியாராய்ச்சியாளரும் கூறியுள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஆத்திரேலியா, நியூகினியா பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளிலும் இத்தகைய மணல் திட்டுகள் பாலம் போல் காட்சியளிக்கின்றன இங்கெல்லாம் எந்த இராமர் பாலம் கட்டினார்? இராமர் பாலம் பற்றிப் பேசுபவர்கள் இவற்றையெல்லாம் கண்டு கொள்வதில்லை. பா.ச.க. வினர் இதைப் புரிந்து கொள்வார்கள்.
வால்மீகியின் இராமாயணத்தை மூலக்கதையாக ஏற்றுக் கொண்டவர்கள் தொலைக்காட்சியில் காட்டிய இராமாயணக் கதையில் தாம் விரும்பிய மாற்றங்களை ஏன் நுழைத்தார்கள்.
இராமனின் தெய்வீகத்தில் நம்பிக்கையுள்ள இவர்கள் கதை மாற்றம் செய்யலாமா? இராமர் வழிபாடு பெரும்பான்மை மக்களுக்கு உரியது என்பது தப்புக் கணக்கு, வடமேற்கு இந்தியா, வடகிழக்கு மாநிலங்கள், கிழக்கிந்தியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் பொது மக்களிடம் இராமர் வழிபாட்டைக் காண முடியாது.
பிராமணச் செல்வாக்கு மிக்க பெருமாள் கோயில்களை மட்டும் காட்டிப் பெரும்பான்மை பேசுவது தவறு. இயேசு, நபிநாயகம், புத்தர் போன்றோர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி வெற்றி கண்டார்கள். அப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக இராமனோ, பிராமணர்களோ எக்காலத்தினும் பாடுபட்டதில்லை.
இந்தியாவில் முகமதிய ஆட்சி பரப்பிய பாபரும், தன் மகன் உமாயூனுக்கு அறிவுரை வழங்கிய போது, “பல்வேறு மதவுணர்வுகளுக்கு மதிப்புகொடு, நடுநிலை தவற வேண்டாம். பிற மதத்தார் கோயில்களை இடிக்க வேண்டாம். ஆள்வோருக்கும் ஆளப்படும் மக்களுக்கும் இடையில் இனிய நல்லுறவு நிலவ வேண்டும்'' எனக் கூறினாராம்.
பிராமண மேலாதிக்கம் செய்வோர், பொதுமக்களுக்கும் தமக்கும் எல்லோரும் இந்துக்கள் என்னும் முறையில் நல்லுறவை நிலை நாட்டிக் கொள்ள எக்காலத்திலாவது முயன்றதுண்டா? சாதி வேலிகளை அகற்றியதுண்டா?
இந்து மதமும் இராமாயணமும் பெரும்பான்மையான இந்துக்களைச் சாதிச் சங்கிலியில் கட்டி அடக்கி ஒடுக்குபவர்களின் படைக் கலங்களாகவே செயற்பட்டு வருகின்றன. இராம ராச் சியம் என்பது பிராமண இராச்சியமே என்பதை இந்து மதமும் இதிகாச புராணங்களும் நிலை நாட்டி வருகின்றன.
வால்மீகியின் வாய் மொழிகள்
தாடகையின் மகனை இலக்குமணன் கொண்ட போது, “சூத்திரனைக் கொல்வது தவறில்லை'' என்று இராமன் கூறியுள்ளான். வாலியைக் கொன்ற போது விலங்கைக் கொல்வது தவறில்லை என்றான்.
இராமனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என இராமாயணத்தை மொழி பெயர்த்த மன்மதநாதத்தரும், சி.ஆர்.சீனிவாச ஐயங்காரும் குறிப்பிட்டுள்ளனர்.
சூத்திரர்கள் (உழைப்பாளிகள்) பிராமணரைத் தான் வணங்க வேண்டும். நேரடியாகக் கடவுளை வணங்கக் கூடாது என்றும் பிராமண தருமத்தை மீறித் தவம் செய்து கடவுளை நினைத்ததால் சம்புகன் கொல்லப்பட்டான்.
கடவுளை வணங்குவது தெய்வ நம்பிக்கை என்று உலகம் ஒப்புக் கொள்கிறது. பிறப்பால் ஒரு குறிப்பிட்ட சாதி உயர்ந்தது. அது கடவுளுக்குச் சமம் என்பதை உலகம் ஒப்புக் கொள்ளாது. இதை முதலில் ஐரோப்பியர்கள் ஏற்றுக் கொண்டு பிராமணர் காலில் விழுந்து வணங்குவார்களா? இராமாயணத்தில் தெய்வ நம்பிக்கையைக் காண முடியவில்லை. பிராமண நம்பிக்கையைத் தான் காண முடிகிறது என்கிறார்கள்.
விந்திய மலைக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களையே, நாகரிகம் நிறைந்த அரசுகளை நிலை நாட்டியவர்கள் எனத் தெரிந்தும் அரக்கர் என்றும் வானரம் (குரங்கு) என்றும் குறிப்பிட்டுள்ளதாக விவேகானந்தர் பி.டி. சீனிவாச ஐயங்கார், சி.சே. வர்க்கி, இராதா குமுத முகர்ச்சி, இரமேசசந்திர தத்தர் போன்ற வரலாற்றுப் பேராசிரியர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
தென்னாட்டு மக்களை இழிவுபடுத்துவதற்காகவே வால்மீகி இராமாயணம் எழுதினார் என்பது இதனால் நன்கு புலப்படுகிறது. வால்மீகி இராமாயணத்தை வடமொழியில் படிக்க வாய்ப்பில்லாத காரணத்தால் பிராமணரல்லாத இந்துக்கள் எளிதில் ஏமாந்து போயினர்.
கடவுள் எல்லோரையும் விட பிராமணர்கள் உயர்ந்தவர்கள். எல்லா உலகங்களையும் விட இவர்கள் மேலானவர்கள். ஆதலால் பிராமணர்களைப் போற்ற வேண்டும் என வசிட்டன் இராமனுக்கு அறிவுரை கூறியது எதைக் காட்டுகிறது?
இராமன் வழி நெடுக பிராமண முனிவர்களின் குடில்களிலேயே தங்குகிறான். எந்த நாகரிகமான தென்னாட்டு அரசனையும் நாடவில்லை. அயோத்தியை அடுத்துச் சோலையில் ஒரு முனிவனிடம் சென்றான். கங்கையைக் கடந்து பாரத்துவாச முனிவனிடம் தங்கினான். அங்கேயே 14 ஆண்டுகள் இராமன் தங்கியிருக்கலாம். ஏன் தங்கவில்லை?
தென்னிந்தியாவில் உள்ள அரக்கர்களை அழித்துப் பிராமண தருமத்தைக் காப்பதே அவன் நோக்கம். யமுனையைக் கடந்தபின் சித்திர கூட மலைச்சாரலில் பரதன் வேண்டுகோளை மறுத்துத் தென்திசை நோக்கிச் சென்றான். தென்னாட்டில் சரபங்க முனிவரிடம் தங்கினான். 14 ஆண்டுகள் காட்டில் தவம் செய்ய வந்த இராமன் ஓரிடத்தில் தங்காமல் பொதியமலை அகத்தியரிடம் அரக்கர்புரியும் தீமையைத் தடுக்கவே நெடும்பயணம் மேற்கொண்டதாகக் கூறுகிறான்.
சீதையை இராவணன் எடுத்துச் செல்லாமல் இருந்திருந்தாலும் பிராமணர் நன்மைக்காக இராமன் இலங்கை வரை வந்திருப்பான். இதனால் என்ன தெரிகிறது? தென்னாட்டு மக்கள் வேத வேள்விகளை ஏற்றுக் கொள்ளாததால் அரக்கர்களாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதே. ஆரியர்களின் கொலை வேள்வியை எதிர்த்து தென்னாட்டு மக்களை அரக்கர்களாகக் காட்டும் இராமனை ஆண்டவன் என்பதும் அவன் பிறந்த நாளைக் கொண்டாடுவதும் இந்துக்களின் மீது திணிக்கப்பட்ட கசப்பான உண்மை என்பதை உலக மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். கல்வியறிவு பெற்ற இந்துக்களும் புரிந்து கொண்டார்கள் என்று கூறுகிறார்கள்.
Thanks: Keetru.com
Sunday, March 23, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment