மத்திய கிழக்கில் இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு அறுபதாவது ஆண்டு நிறைவிற்கான வைர விழா நிகழ்வுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. வீதிகள் தோறும் பட்டாசு வெடிக்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புக்கள் சகிதம் கொண்டாட்டங்கள் களை கட்டின. இவை ஒரு புறம் நடைபெற மறுபுறம் கமாஸ் தீவிரவாதிகள் வைர விழா தாக்குதலை நடாத்தாது தடுக்க நாடளவியரீதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அறுபதாவது ஆண்டு நிறைவிற்கான பேச்சில் இஸ்ரேலிய பிரதமர் எக்குட் ஒல்மாற் கூறும்போது பாலஸ்தீன பிரச்சனையில் தாம் சிக்குண்டு நீண்ட காலம் ஆகிவிட்டதென்றும், இப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவருடைய பதவிக்கு சவாலாக இருப்பதால் இவர் தனது காலத்தில் அமைதியை தொடுவார் என்று கருதப்படவில்லை. மறுபுறம் பாலஸ்தீனர் ஒரு பேருந்து வண்டியில் பெத்தலகேம் சென்று தமது தாய்மண்ணுக்கு என்றோ ஒருநாள் தாம் திரும்புவோம் என்று கோஷமெழுப்பினர்.
இஸ்ரேல் பிறந்த 60 வருட நினைவுகள் ஒரு புறம் நடைபெற அமெரிக்கா, ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சென்ற வாரம் இங்கிலாந்தில் கூடி பாலஸ்தீனப் பிரச்சனைக்கு விரைவான தீர்வு அவசியம் என்றும், இதற்காக தயாரிக்கப்பட்ட றோட் மாப் எனப்படும் அமைதித் திட்டத்தை எவ்வாறு விரைவு படுத்துவது என்றும் பேசியுள்ளனர். அடுத்த வாரம் எருசெலேமில் நடைபெறும் 60 ஆண்டு நினைவு நிகழ்வுகளில் மறுபடியும் இப்பேச்சுக்கள் புதிய வேகத்தில் முடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
1948 ம் ஆண்டு மே மாதம் 18 ம் திகதி பாலஸ்தீனர்களின் நிலத்தில் இருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அந்த நாட்டின் உருவாக்கத்தாலும், நடைபெற்ற மோதல்களாலும் சிதறியோடிய 4.5 மில்லியன் பாலஸ்தீன மக்கள் இன்று உலகம் முழுவதும் அகதிகளாக சிதறி வாழ்கிறார்கள். அவர்களின் கண்ணீர் கதை முடிவில்லாத தொடர்கதையாக நீண்டு செல்கிறது.
1948ல் இஸ்ரேல் உருவானபோது அங்கு வெறும் 6.50.000 பேர் மட்டுமே இருந்தார்கள். இன்று அங்கு ஆறு மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இஸ்ரேல் என்ற நாடு நிறுவப்பட்டதும் உலகமெல்லாம் பரவியிருந்த யூதர்கள் விரைவாக நாடு திரும்பினர். சுமார் ஓர் இலட்சம் பேர் திரும்பினார்கள். அதுபோல ரஸ்யாவில் இருந்தும் ஓர் இலட்சம் பேர் நாடுதிரும்பினார்கள்.
இன்று பொருளாதாரத்தில், இராணுவ பலத்தில், அணு ஆயுத சக்தியில், உறுதி;பாட்டில் இஸ்ரேல் உலகம் திரும்பிப்பார்க்குமளவிற்கு முக்கியமான நாடாக இருக்கிறது. யூதர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தைiயே நிர்வகிக்கும் நிலை உள்ளதால் அமெரிக்கா இஸ்ரேலின் அழுங்குப் பிடியில் இருந்து விலக முடியாத நிலையிலேயே இருக்கிறது. எவ்வளவுதான் இருந்தாலும் இஸ்ரேலில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையே பாரிய இடைவெளி நிலவுவது அந்த நாட்டின் பாரிய பலவீனம் என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.
இஸ்ரேல் என்ற நாடு உலகால் வெறுக்கப்படும் சியோனிச கொள்கையை கடைப்பிடிக்கும் நாடாக உள்ளது. சர்வாதிகாரி ஹிட்லர் ஆறு மில்லியன் யுதர்களைக் கொன்ற காயம் ஆறாவிட்டாலும் கூட யுதர்களை அழிக்காத பாலஸ்தீனர்களை அழிப்பதில் இஸ்ரேல் காட்டும் தவறான ஆர்வம் முன்னர் யூதர்கள் பட்ட அவலத்தை மறந்த போக்கு என்று கூறுவாரும் உண்டு.
இஸ்ரேல் என்ற நாடு உருவானதும் 1956 ம் ஆண்டு சினாய் பாலைவனத்தில் புகுந்தது, 1967 ல் எகிப்துடன் ஆறு தினங்கள் போர் புரிந்து வெற்றியீட்டியது, 1973 எகிப்துடன் மீண்டும் போர், 1977- 79 எகிப்துடன் சமாதானம் செய்தது, 1982 லெபனானுக்குள் நுழைந்தது, 1987 இன்டிபாட்டா எதிர்ப்பை ஆரம்பிக்கிறது, 1993ல் ஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்தானது, 2000 ல் பேச்சுக்கள் முறிந்து மீண்டும் போர், 2005ல் காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற்றம், 2006 லெபனான் போர் என்று பத்து முக்கிய தடைகளை தாண்டி 60 வது ஆண்டு விழாவில் கால் பதித்துள்ளது.
இந்த 60 ஆண்டு வரலாற்றை தொகுத்து நோக்கினால் அயலில் உள்ள நாடுகள் எதனுடனும் நல்லுறவைக் கடைப்பிடிக்கும் நாடு என்ற பெயரை இஸ்ரேல் பெறவில்லை. இஸ்ரேல் என்ற நாடே உலகப்படத்தில் இருத்தல் கூடாது என்று கூறிய ஈரானிய அதிபர் அகமடீனா நஜீட்டின் கோபமும் அவருடைய அணு குண்டு தயாரிப்பு முயற்சியும் இன்னொரு அணுப் போருக்குள் இஸ்ரேலை வீழ்த்தக் கூடிய அபாயத்தில் முனைப்புற்று நிற்கிறது.
அமெரிக்காவின் பற்றியாற்றிக் ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கியை விட பலமுள்ள எஸ். 300 ஏவுகணை தகர்ப்பு பீரங்கிகளை ரஸ்யா ஈரானுக்கு வழங்குவது பிராந்தியத்தில் பாரிய பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல அமெரிக்காவும் போலந்து, ருமேனியாவில் அணு ஏவுகணைகளை நிறுத்த முயல்வது இன்னொரு பதட்டமாக உள்ளது.
இத்தகைய பின்னணியில் அமைதியா ? அழிவா ? என்ற கேள்விக்கு பதிலே இல்லாத நிலையில் இஸ்ரேல் தனது அறுபதாவது ஆண்டை சந்திக்கிறது. என்னதான் இருந்தாலும் இஸ்ரேல் என்ற நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் இன்னமும் கிடைத்துவிட்டதாகக் கூற முடியாது. நாளும் பொழுதும் அச்சத்துடன் வாழ்வதே அவர்களுடைய அவல வாழ்வாக உள்ளது. பாலஸ்தீனத்தில் சுதந்திர நாட்டை என்று இஸ்ரேல் ஏற்படுத்துகிறதோ அன்றுதான் இஸ்ரேல் சுதந்திரம் பெற்ற நாடாக மாறும் என்பதே உண்மையாகும். அச்சப்பட்ட அரசியலே இஸ்ரேல் நடாத்தும் படுகொலைகளுக்கு ஆதாரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்பிரச்சனையானது அமெரிக்க அதிபர் புஸ்சின் காலத்தில் தீராவிட்டாலும் இஸ்லாமிய பின்னணி கொண்ட கறுப்பரான பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானால் புதிய வழிகள் பிறக்கும் என்றும் சிலர் எதிர் பார்க்கிறார்கள். பாலஸ்தீனத்தில் அமைதி வந்தால் இலங்கையில் அமைதி வருவதை எவராலும் தடுக்க முடியாத சூழல் உருவாகும் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.
அலைகள் மத்திய கிழக்கு விவகாரப் பிரிவிற்காக க. புவனசுந்தரம்
நன்றி : அலைகள்
No comments:
Post a Comment