மகாத்மா காந்தியின் எழுத்துக்களும், பேச்சுக்களும், அவரது படைப்புகளும், நூறு தொகுதியாக வெளிவந்துள்ளன. சுமார் 50 ஆயிரம் பக்கங்களில், அவரின் எண்ணங்கள் இந்த தேசத்தைச் சுற்றி வந்துகொண்டே இருக்கிறது. தனது 18 வயதிலிருந்து கொல்லப்படும் வரை 30 ஆயிரம் கடிதங்களை எழுதியுள்ளார். அவரது மொத்தப் படைப்புகளின் சாராம்சத்தையும் ஆய்வு செய்த அறிஞர் அனந்தராமன் ஆச்சிரியமான தகவலைக் குறிப்பிடுகிறார். காந்தியின் படைப்புகளில் எந்தவொரு பக்கத்திலும் மதச்சார்பின்மை என்ற வார்த்தையே கிடையாது.
இருப்பினும் காந்தி வாழ்ந்த போதும், மறைந்து 60 ஆண்டுகள் கடந்த பின்பும் மதவெறியர்களுக்கு அச்சமூட்டுபவராக, அதிர்ச்சி அளிப்பவராக இருந்து கொண்டே இருக்கிறார். அதனால்தான் காந்தி மறைந்த தினத்தை இன்றும் கூட வகுப்பு வெறியர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடுகிறார்கள். தேசத் தந்தை மகாத்மா காந்தி, ஆர்.எஸ்.எஸ். கொலை வெறியனால், கொல்லப்பட்டு 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தாண்டு அவர்களுக்கு இரட்டை சந்தோசம்.ஒன்று குஜராத்தில் கொலை வெறியன் மோடி வென்றது, இரண்டாவது அத்வானி பிரதமர் வேட்பாளராய் அறிவிக்கப்பட்டது. வாஜ்பாய்க்கு ‘பாரத் ரத்னா’ விருது கேட்டதும் கூட அவர் மீதுள்ள பாசத்தால் அல்ல. வாஜ்பாய்க்கு ஓய்வு கொடுத்து அவரை வீட்டில் முடக்க நடந்த ஏற்பாடு ஒருபுறம், மற்றொரு புறம் மோடியை குஜராத்துக்குள் இருக்க வைப்பதற்கான ஏற்பாடும் ஒளிந்துள்ளது. எப்படி எனில், குஜராதின் வெற்றி மோடியை இங்கே தேசத் தலைவராகத் தன் கட்சிக்குள் உயர்த்திவிடுமோ என்ற அச்சம் தான் ராஜ்நாத் சிங்கால் உடனடியாக அத்வானியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவைத்தது.
சமீபத்தில் நடந்த பா.ஜ.க. தேசியக் குழுக் கூட்டத்தில் குஜராத்தின் வெற்றி போதையாக மாறி, காவிக் கூட்டத்தின் தலைக்கு ஏறியது நன்றாகத் தெரிந்தது. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமிய மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் கொடுத்திருக்கிற எல்லா சலுகைகளையும் வாபஸ் பெறுவோம் என அறிவித்ததிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் கடந்தும், தற்போதுதான் சர்ச்சார் கமிஷன் மூலமாக சிறுபான்மை மக்களுக்கு ஏதோ சலுகைகள் கிடைப்பதற்கான வெளிச்சம் தெரிந்தது. இதைக் கூட காவிக் கூட்டத்தால் பொறுத்துக் கொள்ளமுடியாத குரோதத்தின் வெளிப்பாடுதான் இது.
அடுத்த பிரதமர் வேட்பாளராக அத்வானியை அறிவித்ததால், பாரதிய ஜனதா கட்சி இந்த தேசத்திற்கு மிகப்பெரிய சவால் விடுத்துள்ளது. 1992 ஆம் ஆண்டு பல்லாண்டுகாலம் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கைச் சின்னமாக இருந்து வந்த பாபர் மசூதியை இடித்துத் தடைமட்டம் ஆக்குவதில் அடித்தளமாய் இருந்த அத்வானியை, அதற்கு முன்னால் ரதயாத்திரை என்ற பெயரில் இந்த தேசம் முழுவதும் கலவரத்தை உண்டாக்கி, படுகொலைகளுக்குக் காரணமான ஒரு மனிதனை நாங்கள் நிறுத்துகிறோம். முடிந்தால் எதிர்த்துப் பாருங்கள் என்கிற சவால்தான் அது.
இந்த தேசத்தின் மிகப்பெரிய சோகம், இடதுசாரிகளைத் தவிர வேறு எந்தவொரு கட்சியும் இந்த சவாலை அதன் முழு அர்த்தத்தோடு எதிர்கொள்ளும் உணர்வோடு இருப்பதில்லை. பல கட்சிகள் பதவிக்கும், பணத்திற்கும் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக இருப்பது தான் வேதனை. இந்த நாட்டின் மிகப்பெரும் கட்சியான காங்கிரஸ் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் மென்மையான அணுகுமுறையே கைகொண்டு வருகிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தெகல்காவை பயன்படுத்தாதே. அப்பட்டமாய் கொலையாளிகளின் முகம் கிடைத்தும் கூட எந்தவொரு சிறு துரும்பைக் கூட ஆசைக்க திராணியற்று அம்பலப்பட்டு நின்றார்கள்.
ஆனால், பா.ஜ.க. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அத்வானியை அடுத்த பிரதமர் வேட்பாளராய் அறிவித்ததன் மூலம் அடுத்த ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. ஏனென்றால் இந்தியா என்பது குஜராத்திற்குள் இல்லை. மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, திரிபுரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களும் இந்தியாவில் தான் இருக்கின்றன.
ஆசிரியர் குழு
Thanks: keetru.com
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment