Monday, August 4, 2008



பெங்களூரு, அகமதாபாத் நகரங்கள் வெடிகுண்டுகளால் அதிர்ந்த அடுத்த கணமே, ஷேக் அப்துல் கபூர், ஹீரா ஆகியோரைக் கைது செய்து `தீவிரவாதிகளிடம் இருந்து சென்னை நகரைக் காப்பாற்றி விட்டோம்' என்று தமிழகக் காவல்துறை மார்தட்டிக் கொண்டிருக்கிறது. காவல்துறையின் மூவ்மெண்ட்களை தொடர்ந்து கவனித்து அவர்கள் மீது பொதுநல வழக்குகளை ஏவி வருபவர், டிராஃபிக் ராமசாமி. வார்டு கவுன்சிலர் முதல் முதல்வர் வரை யார் தவறு செய்தாலும் பொதுநல வழக்குப் போட்டு கேள்வி கேட்டுவிடுகிறார். தள்ளாத வயதிலும் தளராமல்போராடும் இவர் மீதும் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள். அப்படியும் ஜாமீனில் வெளியே வந்ததும் புதுத் தெம்புடன் கேஸ் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு நீதிமன்றப் படிகளை ஏறத் தொடங்கிவிட்டார். தீவிரவாதிகளைக் கைது செய்து சென்னையை ஆபத்திலிருந்து காப்பாற்றியதாகச் சொல்லும் காவல் துறையின் நடவடிக்கைகள் குறித்தும் பொரிந்து தள்ளிவிட்டார்.
``இரு நகரங்களிலும் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து தமிழக முதல்வர் கருணாநிதி ஓர் அறிக்கைகூட விடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். தீவிரவாதிகள் பிரச்னைக்குப் பிறகு வருவோம். முதலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பத்துக் கொலைகளுக்கு மேல் நடந்துவிட்டன. அதில் தொடர்புடைய ஒருவரைக் கூட போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை. ஆனால், முதல்வர் கருணாநிதி தினமும் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு என்ற பெயரில் கொலு பொம்மைகளைப் போல் போலீஸாரை நிறுத்தி வைக்கிறார்கள். காவலாளிகளைக் குறிவைத்து ஒரு மர்ம மனிதன் கொலை செய்துகொண்டே இருக்கிறான். அவனைப் பிடிக்க இவர்களால் முடியவில்லை. ஆனால் விசாரணை என்ற பெயரில் ரோட்டில் திரிந்து கொண்டிருந்த அப்பாவி மனநோயாளிகளைப் பிடித்து சித்திரவதை செய்கிறது காவல்துறை. அந்தக் கொலைகள் நடந்த வடபழனி பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக ஐநூறு போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதாக, போலீஸ் கமிஷனர் சேகர் சொல்கிறார். உண்மையில் காவல் நிலையங்களில் இருக்க வேண்டிய அதிகாரிகள் கூட முதல்வரின் பாதுகாப்புக்குச் சென்றுவிடுகிறார்கள். பிறகு எங்கிருந்து ஐநூறு போலீஸார் வடபழனிக்குச் சென்றார்கள்? தி.மு.க. அனுதாபியான கமிஷனர் சேகரின் திறமையின்மையால் சென்னையில் சட்டம்_ஒழுங்கு பாதித்துவிட்டது என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்குப் புகார் அனுப்பியிருக்கிறேன்.
சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராக (1998) சேகர் இருந்த போது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் அலட்சியம் காட்டியதைக் கண்டித்து அவர் மீது பொதுநல வழக்குப் போட்டேன். அந்த விவகாரத்தில் அவர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். இப்போது கமிஷனராக சென்னைக்கு வந்ததும் என்னைப் பழிவாங்கத் துடிக்கிறார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆறு ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு உள்ளனர். அதிலும், கைவைத்துவிட்ட கமிஷனர், எனது பாதுகாப்பு போலீஸ்காரர்களுக்கு வழங்கியிருந்த கார்பன் கன்களைப் பறித்துவிட்டு, சாதாரண 410ரக மஸ்கட் துப்பாக்கியை வழங்கியிருக்கிறார். கமிஷனரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். இவரது (கமிஷனர்) தூண்டுதலின் பேரில், எனது பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்பட்ட போலீஸ்காரர் ஒருவர், துப்பாக்கியால் தாக்கி என்னைக் கொல்ல முயன்றார். அதுதொடர்பாகவும், கமிஷனர் மீதே போலீஸில் புகார் செய்திருக்கிறேன்.
`அசம்பாவிதங்கள் ஏதாவது நடக்கலாம்' என்று ஆறு மாதங்களுக்கு முன்பே மத்திய அரசின் உளவுப் பிரிவு தமிழக போலீஸாரை எச்சரித்திருந்தது. அப்போது, அலட்சியமாக இருந்துவிட்டு, பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்ததும் கமிஷனர் சேகர் சுறுசுறுப்பாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். நெல்லையிலும், சென்னையிலும் பதுங்கி இருந்ததாகக் கூறி, இரண்டு பேரை இப்போது கைது செய்திருக்கிறார்கள். அதிலும் ஒருவர் சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர். சுதந்திர தினத்தன்று அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட இடங்களைத் தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது வழக்குப் போட்டுள்ளார்கள். அந்த நபர், சிறையில் இருந்து வெளியே வந்தபோதே கண்காணித்திருந்தால் பெங்களூர், அகமதாபாத் சம்பவங்களுக்கு முன்பே கைது செய்திருக்கலாமே?
`அந்த இருவரும் பதுங்கியிருந்தார்கள்' என்கிறது போலீஸ். ஆனால், போலீஸாரால் கைது செய்யும் வரை அவர்கள் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள் என்பதே நிஜம். உண்மையான தீவிரவாதிகளைத் தப்பவிட்டுவிட்டு இந்த இருவரையும் கைது செய்திருக்கலாம் என்பதே என் யூகம். தி.மு.க. அரசுக்கு எந்தக் களங்கமும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் யாரோ இருவரைக் கைது செய்து கணக்குக் காட்டியிருக்கிறார் கமிஷனர் சேகர்.
சென்னையில் வெடிகுண்டுகள் வைக்க, புழல் சிறையிலேயே திட்டம் உருவானதாக போலீஸார் கூறுகின்றனர். அதை நிரூபிக்க கைதிகளிடமிருந்து செல்போன் மற்றும் சிம்கார்டுகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். கைதிகளிடம் திடீரென செல்போன் வந்தது எப்படி? இத்தனை நாட்களாக அவர்கள் செல்போன் வைத்திருந்தது போலீஸுக்குத் தெரியாதா? தண்டனைக் கைதிகளில் பெரும்பாலானோர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. தடை செய்யப்பட்ட சிம்கார்டு உள்ளிட்ட பொருள்களை சிறைக்குள் கொண்டு செல்வதில் பல நேரங்களில் காவல்துறையினரே உதவியாக இருக்கின்றனர். சிறையில் உள்ள பயங்கரவாதி அலி அப்துல்லாவை, ஜாமீனில் வெளியே வந்த ஹீரா பலமுறை சிறைக்குச் சென்று சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பை அப்போதே கண்காணித்து, நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுகாவல் துறையின் அலட்சியம்தானே? தங்களைவிட காவல் துறையினருக்குக் கூடுதல் அதிகாரம் இருப்பதால், கைதிகளை சிறை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடிவதில்லை.
அந்த இரண்டு பேரைக் கைது செய்துவிட்டு, தற்போது வெறும் கண்துடைப்புக்காக சாலையில் போவோர், வருவோரையும் நிறுத்தி சோதனை என்ற பெயரில் இவர்கள் செய்யும் தொந்தரவுக்கு அளவே இல்லை. வாகனச் சோதனை என்ற பெயரில், பொதுமக்களை மிரட்டி, தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொள்கின்றனர்.
இங்கு யார் யாரெல்லாம் தீவிரவாதிகள்? எங்கெல்லாம் வெடிகுண்டுகள் தயாரிக்கிறார்கள்? என்று காவல் துறையினருக்கு நன்றாகவே தெரியும். சொந்த லாபத்துக்காகவே அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, பிரச்னை வரும்போது மட்டும் `நெக் ஆஃப் தி மூவ்மெண்ட்'டில் தீவிரவாதிகள் என்று ஒருசிலரைக் கைது செய்கின்றனர். அவர்களுடன் இருப்பவர்களுக்கும் தீவிரவாத முத்திரை குத்துவதும் நம்மூர் போலீஸாரின் வழக்கமான பாணிதான். தீவிரவாதிகள் உருவாவதில்லை; அவர்களை உருவாக்குவதே போலீஸ்தான் என்பது இந்த முறையும் அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்று ஒரே மூச்சில் கொட்டித் தீர்த்தார் டிராஃபிக் ராமசாமி.


நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்



No comments: