Monday, June 2, 2008

இந்தியாவின் அமைதிக்கு ஆப்பு- ஆட்சிக்கு வந்ததும் அதிரடி

மீண்டும் பொடா: பிஜேபி உறுதி

.

Monday, 02 June, 2008 11:06 AM
.
புதுடெல்லி, ஜூன்.2: கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யவேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கொள்கைகளை மீண்டும் பிஜேபி கையில் எடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
.
புதுடெல்லியில் நேற்று பிஜேபியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில், தலைமை உரையாற்றிய அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், நாட்டில் தற்போது 200 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய 7 மாநிலங்களில் ஆட்சி செய்யும் மிகப்பெரிய தேசியக் கட்சி பிஜேபி தான் என்று தெரிவித்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பிஜேபி சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ள எல்.கே.அத்வானி வெற்றிப் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அதே சமயம் மாற்றங்களை கொண்டு வரும் கட்சியாகவும், இளைஞர்களின் கட்சியாகவும் பிஜேபி உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கட்சியின் அனைத்து பதவிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பது பிஜேபியின் முடிவு என்றும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தருணம் தற்போது வந்துவிட்டதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு பிஜேபி தொடர்ந்து அளித்து வந்த நெருக்குதலால்தான் மகளிர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் பிரச்சனைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறு பவர்களால் ஏற்படும் பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பது குறித்து சர்வக் கட்சிக் கூட்டத்தை கூட்டி தேசிய அளவில் கருத்தொற்றுமை காணவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பிஜேபி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும்போது தீவிரவாதிகளை ஒழிக்க பொடா அல்லது அது போன்ற ஒரு கடுமையான சட்டம் மறுபடியும் கொண்டு வரப்படும் என்றும் ராஜ்நாத்சிங் கூறினார்.

மதச்சார்பின்மை கொள்கை ‘தர்ம நிர்பேக்ஷ்’ (மதங்களிடம் அலட்சியமாக இருப்பது) என்று இருப்பதற்கு பதிலாக ‘பாந்த் நிர்பேக்ஷ்’ (பல்வேறு மதங்களிடம் நடுநிலையோடு இருப்பது) என்று மாற்றம் செய்யப்படவேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார். மதச்சார்பின்மை தொடர்பாக பிஜேபியின் வரையறைதான் சரியான ஒன்று என்றும் அவர் கூறினார்.

கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து உற்சாகமடைந்துள்ள பிஜேபி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யவேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கொள்கைகளை மீண்டும் தனது செயல்திட்டத்தில் சேர்ப்பதற்கான அறிகுறிகள் இந்த கூட்டத்தில் தெளிவாக தென்பட்டன.

நன்றி : மாலைச்சுடர்

No comments: