Thursday, June 19, 2008

திருவிழாவின் பெயரால் அப்பாவி இந்துக்களை மோசடி செய்யும் தந்திரம்

மஹாபாரத திருவிழாவின் பெயரில் சூதாட்டம் அப்பாவிகள் பணத்தை பறிகொடுக்கும் அவலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 நாள் நடக்கும் மஹாபாரத திருவிழாக்களில் கட்டைகள் உருட்டி விளையாடும் சூதாட்டத்தில் அப்பாவிகள் பணத்தை பறிகொடுக்கும் அவலம் நடந்து வருகிறது. மலைகள் சூழ்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பல வரலாற்று சிறப்புகள் உள்ளது. மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்கின்றனர். கிராமத்தில் உள்ளவர்கள் பழமை மாறாமல் இன்றளவிலும் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாரியம்மன், காளியம்மன், பத்திரகாளியம்மன் ஆகிய திருவிழாக்கள் கிராமங்கள் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வர். மஹாபாரத கதைகளை கூறி 15 நாட்கள் கிராமங்களில் திருவிழா களைகட்டும். பொதுவாக மே இறுதி வாரத்திலும், ஜூன் முதல் வாரத்தில் இத்திருவிழா மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் நடக்கும். மஹாபாரத திருவிழா நடக்கும் இடங்களில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சூதாட்ட ஏஜென்ட்கள் ஊர் பெரியர்வர்களை அணுகி கட்டைகளை வைத்து சூதாட்டம் நடத்த பெரிய தொகையை அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள். இவ்வாறு பெறப்படும் தொகையை கொண்டுதான் பல கிராமங்களில் விழாவை வெகு விமரிசையாக நடத்துகிறார்கள். சூதாட்டகாரர்கள் கொடுக்கும் பணத்தில் உள்ளூர் வருவாய் துறையை சேர்ந்தவர்களில் இருந்து போலீஸார் வரை ஊர் பெரியவர்கள் மாமூல் கொடுத்து விடுகின்றனர். இதனால் சூதாட்டம் நடக்கும் இடத்தில் எந்தவித தகராறு நடந்தாலும் போலீஸார் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். கட்டைகளை உருட்டி நடக்கும் சூதாட்டத்தில் ஒரு இரவில் மட்டும் பலர் ஆயிரக்கணக்கில் பணத்தை இழப்பது உண்டு. இழந்த பணத்தை மீட்பதற்காக சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இரு சக்கர வாகனங்கள் முதல், டிராக்டர் வரை பந்தய பொருளாக வைத்து சூதாடும் கொடுமையும் நடந்து வருகிறது. சூதாட்டத்தில் வெற்றி பெற்று பணத்தை பெற்றுகொண்டு வீட்டுக்கு செல்ல நினைப்பவர்களை சூதாட்டம் நடத்தும் கும்பல் மிரட்டி பணத்தை பறித்து கொள்வார்கள். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸாரிடமும், திருவிழாவை நடத்துபவர்களிடம் புகார் கூறினாலும் அவர்கள் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. பொதுவாக மஹாபாரத கதையில் பகலில் 18 நாள் சொற்பொழிவு நடக்கும். சூதாட்ட காரர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என்றால், திருவிழா நடத்துவோர்களிடம் கூறி மேலும் சில நாள் திருவிழாவை நடத்துவதும் உண்டு. கூடுதலாக திருவிழா நடக்கும் நாட்களுக்கு தெருக்கூத்து கலைஞர்களுக்கு தனி தொகையை சூதாட்டகாரர்கள் கொடுத்து விடுவர். குறிப்பிட்ட இடத்தில் மஹாபாரத திருவிழா நடக்கிறது என்றால் திருவிழாவை நடத்தும் ஊர்காரர்கள் கூட திருவிழாவை விளம்பரப்படுத்த மாட்டார்கள். மாறாக சூதாட்டக்காரர்கள் காரில் சென்று திருவிழா நடத்துவதை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இரவில் சூதாட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு வசதியாக வாகன வசதிகளையும் சூதாட்டகாரர்கள் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு மாவட்டத்தில் இதுவரை நடந்த மஹாபாரத திருவிழாவில் மட்டும் பொதுமக்கள் பல லட்ச ரூபாய் இழந்துள்ளார்கள். இதற்காக நிலத்தை பலர் விற்று பணத்தை இழந்திருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மஹாபாரத திருவிழா நடக்கும் கிராமங்களில் போலீஸார் ரோந்து சென்று கட்டை சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


நன்றி : தினமலர்

No comments: