தனியார் நிலத்தில் வைக்கப்பட்ட சிலை அகற்றம்: பேச்சுவார்த்தையில் தீர்வு
கரூர்: தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட சிலை குறித்தான பிரச்னையில், நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் சிலை அப்புறப்படுத்தப்பட்டது. தாசில்தார், ஏ.டி.எஸ்.பி., தலைமையில் தீர்வு காணப்பட்டது. அரவக்குறிச்சி அடுத்துள்ளது பாவா நகர். 72 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நகரில், 35 ஏக்கருக்கு மனை பிரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 37 ஏக்கர் பரப்பளவில் மனை பிரிக்கும் ஏற்பாடு நடக்கிறது. இந்த நிலத்தின் எல்லையில், பல ஆண்டுகளாக வளர்ந்துள்ள புற்று ஒன்று உள்ளது. புற்றை சுற்றி வேல், சூலம் நட்டு இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். நாகம்மன் தேவி என்று கூறி வழிபடும் இங்கு, துரைசாமி(60) என்பவர் பூசாரியாக உள்ளார்.
கடந்த இரண்டு நாள் முன், புற்றுக்கு அருகில் நான்கரை அடி உயரத்தில் கருப்பண்ணசாமி மற்றும் ஒரு அடி உயரத்தில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு பூஜை துவங்கப்பட்டது. இதைக்கண்ட நிலத்தின் உரிமையாளர் தாஜுதீன், தன்னுடைய எதிர்ப்பை பூசாரியிடம் கூறியுள்ளார். மேலும், தனக்கு சொந்தமான இடத்தில் சிலை அமைத்து பூசாரி அத்துமீறி நடந்து கொள்வதாக அரவக்குறிச்சி போலீஸாரிடம் புகார் அளித்தார். நாகம்மன் தேவியை வழிபடும் சிலர், பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர். சிலை பிரச்னை, மதரீதியாக பெரிதாகிவிடாமல் தடுக்க, அரவக்குறிச்சி தாசில்தார் பத்மன், ஏ.டி.எஸ்.பி., மூக்கையா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
பேச்சுவார்த்தை முடிவில், புற்று அருகில் வைக்கப்பட்ட சிலையை அகற்றிக்கொள்ள பூசாரி துரைசாமி ஒப்புக்கொண்டார். மேற்கொண்டு இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையிலும் இறங்காமல் அமைதி காப்பதாக நில உரிமையாளர் ஒப்புக்கொண்டார். போலீஸ் பாதுகாப்புடன் சிலை அப்புறப்படுத்தப்பட்டு, பூசாரி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
நன்றி : தினமலர்
Wednesday, June 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment