டெட்டனேட்டர் திருட்டு வழக்கில் குழப்பம் 'கரன்ஸி' பலத்தில் பலர் 'எஸ்கேப்'
கரூர்: கரூர் அருகே திருட்டு போனதாக கூறப்படும் 17 ஆயிரம் டெட்டனேட்டர் தொடர்பான விசாரணையில் எட்டு பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனால், பின்னணியில் இருந்த முக்கிய புள்ளிகள் பலர் வழக்கில் இருந்து தங்கள் செல்வாக்கு மூலம் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புன்னம்சத்திரத்தில், கரூரை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான வெடிமருந்து குடோனில் கடந்த மாதம் 24ம் தேதி 17ஆயிரத்து 100 டெட்டனேட்டர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி., சண்முகவேல் தலைமையில் விசாரணை நடந்தது. தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களிலும் விசாரணை தொடர்ந்தது.
திருட்டு நடந்ததாக கூறப்படும் குடோனுக்கு அருகில் முருகேசன், வடிவேலு, தங்கராஜ் மற்றும் தேவராஜ் ஆகியோர் தோட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெட்டனேட்டர்கள் தோண்டி எடுக்கப்பட்டது. இது குறித்து பின்னர் எந்த தகவலையும் போலீஸார் வெளியிடவில்லை. மேலும், அனுமதி பெறாமல் கணக்கில் காட்டப்படாத அளவு டெட்டனேட்டர்களை முருகேசன் இருப்பு வைத்துள்ளதாகவும் போலீஸார் கூறினர். வழக்கில் தொடர்புடைய முருகேசன், அவர் சகோதரர் குமரேசன் மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறிய போலீஸ் தனிப்படை, பிறகு அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. முக்கியமாக கணக்கில் காட்டப்படாமல் வெடிமருந்து வாங்கிய, இருப்பு வைத்திருந்த குவாரி உரிமையாளர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், திடீரென விசாரணை நிறுத்தப்பட்டது.
பின்னர் குவாரிகளில் வெடிமருந்து இருப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கில் சம்மந்தப்பட்ட வெடிமருந்து குடோன் உரிமையாளர்கள், குவாரி உரிமையாளர்கள் அனைவரும் மாவட்டத்தின் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அதிகார பலம் மற்றும் "கரன்ஸி' பலம் இவர்களை காப்பாற்றியதாக அதிருப்தி போலீஸார் கூறினர். கரூர் மாவட்டத்தில் 23 குவாரிகளில் இருந்து கணக்கில் காண்பிக்கப்படாத ஏராளமான டெட்டனேட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே, முருகேசனுக்கு சொந்தமான குடோனில் திருடப்பட்ட டெட்டனேட்டர் அனைத்தும் கடல் கடந்திருக்கும் என்று போலீஸ் சந்தேகப்படும் நிலையில், தற்போது திடீரென 15 ஆயிரம் டெட்டனேட்டர் கணக்கில் காட்டப்பட்டது போலீஸாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தற்போது காட்சிக்கு வைத்திருக்கலாம் என்று தனிப்பிரிவு போலீஸார் கூறுகின்றனர். கடந்த 15ம் தேதி சேலம் மாவட்டம், நங்கவள்ளியை சேர்ந்த முருகன் உட்பட எட்டு பேரை கைது செய்து வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். எவ்வாறு திருட்டு நடவடிக்கை நடந்தது? கரூரில் இருந்து கடத்தி செல்லப்படும் வெடிமருந்து விற்பனையாகும் இடம், வாங்குவோர் யார்? என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மாவட்டத்தின் முக்கிய "புள்ளிகள்' சிலரை காப்பாற்றவே, மாவட்ட போலீஸ் அவசரமாக எட்டு பேரை கைது செய்து விசாரணையை முடித்ததாக பாதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.
Wednesday, June 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment