இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து ‘மினா’விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது ‘கஸ்வா’ ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, ‘பத்னுல்வாதி’ எனும் பகுதிக்கு வந்தார்கள்.
அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே “நபியவர்களின் இறுதிப் பேருரை” என்பதாக இன்று அறியப்படுகிறது.
கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த
ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)
தொடக்க துதி மொழிகள்எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.’ மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: “நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.’ (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)
பிரிவின் முன்னறிவிப்பு
ஒ … மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்
!ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
பிறர் உடமையைப் பேணுவீர்!
ஒ… மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.
அராஜகம் செய்யாதீர்கள்!அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)
உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.
நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)
பணியாளர்களைப் பேணுவீர்!
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)
மறுமைக்கு அஞ்சுவீர்!ஓ… குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)
அநீதம் அழிப்பீர்!
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.
அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
முறைதவறி நடக்காதீர்!
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)
உரிமைகளை மீறாதீர்!
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, “உணவையுமா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது’ என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)
ஒ… மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)
இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)
பெண்களை மதிப்பீர்!கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)
இரண்டைப் பின்பற்றுவீர்!மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
எச்சரிக்கையாக இருப்பீர்!
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)
இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)
இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)
அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)
சகோதரம் பேணுவீர்!
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)
சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
ஒ… மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)
குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
இஸ்லாம் முழுமையாகி விட்டது!
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)
இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)
பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, “மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?’‘ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்” என்றார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி “இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)
இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)’‘ (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)
நன்றி : ஜாகிர்